செவ்வாய், 22 ஜூலை, 2025

பறிபோன பதவி, சொத்துக்களை மீட்டுத் தரும் அற்புத ஆலயம்!

பறிபோன பதவி, சொத்துக்களை மீட்டுத் தரும் அற்புத ஆலயம்!

இழந்த பதவி மற்றும் சொத்துகளை மீட்டளிக்கவென்றே அமைந்திருக்கும் ஒரு அற்புதத் திருக்கோயில், ஆதலையூர் பீமேஸ்வரர் ஆலயமாகும். இந்தக் கோயில் கும்பகோணம் - நாகப்பட்டினம் சாலையில் 32 கி.மீ தொலைவில் உள்ள ஆதலையூரிலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

ஆதலையூர் என்று பெயர் வரக் காரணமான புராண வரலாற்றின்படி, சிவபெருமான் கயிலாயத்தில் புதிதாக ஒரு திருவிளையாடலைத் தொடங்கினார். அந்த திருவிளையாட்டில் அவர் பலவாறு உருமாறி வில்வமரம், கங்கை என்று எந்த ரூபம் எடுத்தாலும் பார்வதி தேவி அவரைக் கண்டு பிடித்து விட்டார். இதையடுத்து, சிவபெருமான் பூலோகம் சென்று பசுவாக உருமாறினார். அது ஒரு முரட்டுப் பசு. அது யாருக்கும் அடங்காமல் எல்லோருக்கும் துன்பங்கள் கொடுத்ததால் அதை ஊர் மக்கள் கட்டி வைத்தனர். ஆனால், அங்கே வந்த பார்வதி தேவி பசுவைக் கண்டு மனமிரங்கி, அதை அவிழ்த்து விட்டு விட்டாள்.


பசு உருவத்தில் இருந்த சிவபெருமான் தனது சுய உருவத்தைக் காட்ட, பார்வதி தேவி மிகுந்த ஆனந்தம் அடைந்தாள். இதனால் ‘ஆனந்தநாயகி’ என்னும் பெயர் இத்தலத்து அம்பாளுக்கு ஏற்பட்டது. 'ஆ' என்றால் 'பசு', 'தளை' என்றால் 'கட்டுதல்'. பசுவைக் கட்டிப்போட்ட இடம் என்பதால் இந்த ஊருக்கு ஆதளையூர் என்ற பெயர் ஏற்பட்டது. அது நாளாவட்டத்தில் மருவி ஆதலையூர் என ஆயிற்று.

இதே தல புராணத்தில் ஈஸ்வரனுக்கு ‘பீமேஸ்வரர்’ என்ற பெயர் வரக் காரணமான புராண வரலாறும் உள்ளது. துரியோதனன், பாண்டவர்களுக்கு தனது தேசத்தில் பாதியைத் தர மறுத்ததால், மகாபாரதப் போர் ஆரம்பிக்கும் முன்பு, பாண்டவர்கள் தாங்கள் இழந்த தேசத்தைப் பெற பல தலங்களுக்குச் சென்று வழிபட்டனர். அப்போது பீமன் மட்டும் தனியாக ஆதலையூர் வந்து அங்கேயுள்ள தாமரைக் குளத்தில் நீராடி சிவபெருமானை வணங்கினான். தாங்கள் இழந்த தேசத்தை மீட்டுத் தர சிவனை வேண்டி வழிபட்டான்.


சிவபெருமான் பீமனுக்கு தரிசனம் அளித்து அவனுக்கு ஆசி வழங்கினார். பிறகு குருக்ஷேத்திர யுத்தம் நடைபெற்றது. பாண்டவர்கள் தாங்கள் இழந்த தேசத்தையும், பதவியையும் மீட்டனர். பீமன் இங்கே வந்து வழிபட்டதால் இங்கேயுள்ள ஈஸ்வரனுக்கு பீமேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.

பீமன் வந்து வழிபட்டு வெற்றி கண்டதால், ஏதோ காரணத்திற்காக பதவிகளை இழந்தவர்கள் மற்றும் தங்கள் சொத்தாக உள்ள வீடு, நிலபுலங்களை சண்டை சச்சரவு, கோர்ட்டு, வழக்கால் இழந்தவர்களும் ஆதலையூருக்கு வந்து இங்கேயுள்ள பீமேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் அவை மீண்டும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

தற்காலத்தில், தேர்தலில் நிற்பவர்கள் தாங்கள் ஜெயித்து பதவியை அடைய வேண்டும் என்பதற்காக இங்கே வந்து வழிபடுவதால் இந்த பீமேஸ்வரர் கோயில் தேர்தலில் வெற்றிக்கும் ஒரு பிரபலமான கோயிலாக உள்ளது.

தரித்திரம், பீடைகளைப் போக்கும் சித்தர் ஜீவ சமாதி வழிபாடு!

தரித்திரம், பீடைகளைப் போக்கும் சித்தர் ஜீவ சமாதி வழிபாடு!


வாழ்க்கையில் நம்மை நல்ல சக்திகள் ஒருபுறம் இழுத்தாலும், கெட்ட சக்திகள் இன்னொரு புறம் சேர்ந்து இழுத்துக் கொண்டேதான் இருக்கும். எந்தப் பக்கம் நாம் செல்லப் போகிறோம் என்பதை வைத்துதான் நம் வாழ்க்கை இருக்கிறது. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நேர்மறை ஆற்றல்களும், எதிர்மறை ஆற்றல்களும் கலந்துதான் இருக்கின்றன. எல்லா விஷயத்திற்கும், எதிர்மறையான ஒரு விஷயம் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில், தரித்திரங்கள், பீடைகள் எனப்படும் துர்சக்திகளை நம்மிடமிருந்து விரட்டி அடித்து நல்ல சக்தி தருவதில் சித்தர் வழிபாடு சிறந்து விளங்குகிறது. சித்தர் வழிபாடு செய்வதன் மூலம் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

எடுத்த காரியங்கள் அனைத்திலும் தோல்வியை தழுவுபவர்கள், காலப்போக்கில் விரத்தியில் மூழ்கி விடுகிறார்கள். தொடர் தோல்விகள், அவமானங்கள், சறுக்கல்கள் என்று சந்தித்துக் கொண்டிருக்கும், உங்களது ஜாதகத்தில் கேது பகவான் சரியாக இருக்கிறாரா? என்று பாருங்கள். கேது பாதிப்பு அடைந்திருந்தால், ஜாதகருக்கு இதுபோன்ற பிரச்னைகள் தொடர்ந்து நடக்கும். எதை செய்தாலும் அதில் திருப்தி உண்டாகாது. எதையாவது செய்து முன்னேறலாம் என்றால், அதற்கான வழியும் கிடைக்காது.


நீங்கள் நினைத்ததை அடைவதில் பிரச்னைகள் இருந்தால் சமாளித்து விடலாம். ஆனால், அடையவே முடியாத சிக்கல்கள் இருந்தால் என்னதான் செய்வது? என்று குழம்பிப் போயிருப்பீர்கள். வாழ்க்கையே சூனியமாகத் தெரியும். ‘எல்லோரையும் போல நம்மாலும் சாதாரணமாக வாழ முடியாதா?’ என்று விரக்தியின் உச்சத்தை அடைய வைத்து விடுவார் இந்த தந்திரகார கேது பகவான். தரித்திரங்களும், பீடைகளும் நம்மை சோம்பேறித்தனமாக எப்போதும் வைத்துக் கொள்ளும்.

நாம் நினைத்தால் கூட நம்மால் சுறுசுறுப்பாக இயங்கி, வெற்றியின் பக்கம் செல்ல முடியாது தடுத்து நிறுத்தும். இப்படிப்பட்ட பிரச்னைகள் உங்களுக்கு இருந்தால், கண்டிப்பாக நீங்கள் சித்தர் ஜீவ சமாதி வழிபாட்டினை செய்யலாம். சித்தர்களுடைய ஜீவ சமாதிகளை தேடிச் செல்லுங்கள். எந்த சித்தர் உங்களுக்குப் பிடித்தாலும், அந்த சித்தரின் ஜீவ சமாதிக்கு செல்லுங்கள். பல திருத்தலங்களில் ஜீவசமாதி அடைந்த சித்தர்களைத் தேடி நாமாக சென்று வழிபட வேண்டும்.


சித்தர்கள் நம்மை அழைத்தால் அடிக்கடி நீங்கள் பட்டாம்பூச்சியை பார்ப்பீர்கள். அழகிய பட்டாம்பூச்சிகள் உங்களை அடிக்கடி ஈர்த்தால், சித்தர் உங்களை அழைக்கிறார் என்று அர்த்தம். சித்தரின் சமாதியை அடைந்ததும், உங்களுக்கு எத்தனை வயதோ, அந்த வயதின் எண்ணிக்கைக்கு ஏற்ப சித்தர் ஜீவசமாதியை வலம் வர வேண்டும். 20 வயது என்றால் 20 முறை சுற்றி வாருங்கள். 40 வயது என்றால் 40 முறை சுற்றி வாருங்கள்.

ஒவ்வொரு முறை சுற்றி வரும் பொழுதும் சமாதியின் முன்பு ஒரு கற்பூரத்தை ஏற்றி வைக்க வேண்டும். இப்படி எத்தனை முறை சுற்றி வந்து கற்பூரத்தை ஏற்றி வைத்து வழிபடுகிறீர்களோ, அத்தனை நன்மைகளை உங்களுக்கு சித்தர் அருள்வார் என்பது நம்பிக்கை. சகல தரித்திரங்களும், பீடைகளும் நீக்கி, கேது பகவானின் தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி கொடுக்கக்கூடிய இந்த எளிய வழிபாட்டினை நீங்களும் செய்து பயனடையுங்கள்.

பக்தர்களை காக்கும் பக்தவச்சல பெருமாள்!

பக்தர்களை காக்கும் பக்தவச்சல பெருமாள்!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் சேரன்மாதேவி அருள்மிகு ஶ்ரீ பக்தவத்சலப் பெருமாள் திருக்கோயில், பக்தர்களை காக்கும் பக்தவச்சல பெருமாள்.

கட்டுமானம் மற்றும் காலம்:

தாமிரபரணி ஆற்றங்கரையில், பிற்கால பாண்டியர்களால், 1012-1044 ஆம் ஆண்டுகளின் காலகட்டத்தில் கட்டப்பட்டது.

ஆலய அமைப்பு:

கருவறையில் நம் பெருமாள், ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் எனும் திருநாமத்துடன் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சியளிக்கிறார். கருவறையில், தேவியர் இல்லாமல் நம் பெருமாள் தனித்து நின்றிருப்பது போல, ஆலய பிரகாரத்தில் ஸ்ரீ பூமாதேவி மட்டும் திருக்காட்சியளிக்கிறார். ஏனைய பரிவாற மூர்த்திகளும் இடம்பெற்றுள்ளனர்.

ஆலயச் சிறப்பு:

வியாசரால் குறிப்பிடப்பட்ட சிறப்புமிக்க 12-கோயில்களில், ஒன்றாகும். உள்ளூர் மக்களை தவிர வெளியூர் மக்களால் அதிகம் அறியப்படாத இவ்வாலயத்தில் வடிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு சிற்பமும் அற்புதமானவை. கலைநயம் மிக்கவை.🍁

பிரார்த்தனை மற்றும் பரிகாரம்:

பிரகார மண்டபத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ யோக நரசிம்மருக்கு நடைபெறும் சனிக்கிழமை வழிபாடு மிகவும் விசேஷமாகும். அசுப யோகத்தில் பிறந்து பல்வேறு குறைபாடுகளில் சிக்கி தவிக்கும் மக்கள் ஆலயத்திற்கு வந்து நரசிம்மரை வேண்டி வழிபடுகின்றனர். குறைகள் தீர்ந்த பின்பு மீண்டும் வந்து பரிகார பூஜை செய்கிறார்கள்.

அமைவிடம்:

சேரன்மகாதேவி எல்லையில், பசுமையான வயல்களின் நடுவில் அமைந்துள்ள (கல்வெட்டுகள் நிறைந்த) இத்திருத்தலம், இந்திய தொல்லியல் துறையின் (ASI) கட்டுப்பாட்டில் உள்ளது.🍁

உற்சவங்கள் மற்றும் திருவிழாக்கள்:

திருமாலுக்கு உகந்த முக்கியமான விழாக்கள் அனைத்தும் கொண்டாடப்படும் இத்திருத்தலத்தில் பெருந்திருவிழாவாக நடைபெறும் புரட்டாசி பிரம்மோற்சவம் விழா வெகு விசேஷமாகும். பஞ்சாங்கம்’ என்பதிலுள்ள நாள் அல்லது தினம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களில், யோகம் என்பது முக்கியமானது. நட்சத்திரமும், கிழமையும் இணைவதும் யோகம் தான்.🍁

தவிர ஜோதிடத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாகவும், அவற்றில் பல, தனிநபர் ஜாதகங்களில் இருப்பதாகவும் ஜோதிடர்கள் சொல்வதுண்டு. அத்தகைய யோகங்களில் சுபயோகம் அசுப யோகம் என்று இரண்டு வகை உண்டு அசுப யோகங்களில் பிறந்தவர்கள், தங்களின் வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சில குடும்பங்களில் நிறைய பேருக்கு திருமணமே கைகூடி வராத நிலையை நாம் பார்த்திருப்போம்.🍁

இவற்றிற்கெல்லாம் வழிபாட்டுத் தலம் சேரன்மகாதேவி பக்தவத்சலப் பெருமாள் கோயில். பக்தர்களால் அதிகம் அறியப்படாத பழமையான ஆலயங்கள் பலவற்றில் இதுவும் ஒன்று.

திருநெல்வேலியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் , தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கிறது.

அசுப யோகங்களில் பிறந்தவர்களின் முன்னோர்களுடைய ஆன்மா சாந்தி பெற, சேரன்மகாதேவியில் உள்ள பக்தவத்சலப் பெருமாள் கோவிலில் செய்யும் வழிபாட்டு முறைதான் சிறப்பானது.

10 வகையான அசுப யோகத்தில் பிறந்தவர்கள், குடும்பத்தில் உள்ளவர்களின் ஆத்மா நற்கதி அடையாத தோஷம் உள்ளவர்கள், துயரங்கள் நீங்க நேராக இந்தத் திருத்தலம் வந்து, நதியில் நின்று, தன் குடும்பத்தில் இறந்த ஆன்மாக்களை நினைத்து நீராடினால், அவர்களின் ஆன்மா நற்கதி அடையும் என்று, தாமிரபரணி மகாத்மீயம் கூறுகிறது.🍁

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11.45 மணி வரை திறந்திருக்கும்.

சேர்த்து வைக்கும் புண்ணியமே சந்ததியைக் காக்கும்!

சேர்த்து வைக்கும் புண்ணியமே சந்ததியைக் காக்கும்!

ஒருவர் செய்த பாவ, புண்ணியங்களே அவரது சந்ததியை சேரும். வாழ்நாள் முழுவதும் நன்மைகள் செய்தால் வாழையடி வாழையாக நம் சந்ததியும் நலமாக வாழும். ‘சேர்த்து வைத்த புண்ணியம்தான் சந்ததியை காக்கும்’ என்று சொல்வார்கள்.

பாரதப் போரில் பாண்டவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனின் உதவியால் வெற்றி பெற்றனர். இதனால் கௌரவர்களின் தந்தை திருதராஷ்டிரன் வருத்தமுடன், ‘கிருஷ்ணா… நான் பார்வையற்றவனாக இருந்தாலும் தர்ம வழியில்தான் ஆட்சி புரிந்தேன். அப்படி இருந்தும் இப்போது புத்திர சோகத்தால் வாடுகிறேன். என் நூறு பிள்ளைகளில் ஒருவர் கூட போரில் உயிர் திரும்பவில்லையே. எனக்கு மட்டும் ஏன் இந்தக் கொடுமை’ எனக் கேட்டார்.🍁

ஸ்ரீ கிருஷ்ணர் சிரித்தபடி, ‘நான் சொல்லும் கதையைக் கேட்டால் உங்களுக்கு உண்மை புரியும். நீதி தவறாத மன்னர் ஒருவர் இருந்தார். அவரிடம் சமையல்காரர் ஒருவர் புதிதாக வேலைக்கு சேர்ந்தார். அவரது கை பக்குவம் மன்னருக்கு மிகவும் பிடித்துப் போனது. தனது திறமையைக் காட்டி மன்னரின் மனதில் இடம் பிடிக்க சமையல்காரரும் விரும்பினார். அதற்காக அரண்மனை குளத்தில் வசித்த அன்னத்தின் குஞ்சு ஒன்றை யாருக்கும் தெரியாமல் பிடித்து வந்து இரவோடு இரவாக மன்னருக்கு சமைத்துக் கொடுத்தார். அது என்ன உணவு என்று தெரியாமல் மன்னரும் அதை சுவைத்து மகிழ்ந்தார். அதோடு, அடிக்கடி அந்த உணவை சமைத்து தரும்படியும் கட்டளையிட்டார்.

இப்போது சொல்லுங்கள், மன்னர் மற்றும் சமையல்காரர் இருவரின் தண்டனைக்குரியவர் யார்’ என திருதராஷ்டிரரிடம் கேட்டார் ஸ்ரீ கிருஷ்ணர். உடனே திருதராஷ்டிரன் ‘தான் சாப்பிடுவது என்ன உணவு என்பது கூட தெரியாமல் ருசித்துச் சாப்பிட்ட மன்னவனே குற்றவாளி’ என்றார்.🍁

நீதி தவறாத மன்னர் தாங்கள் என்பதை நிரூபித்து விட்டீர். அதன் காரணமாகத்தான் உங்களுக்கு நூறு மகன்களும் சிறந்த மனைவியும் இப்பிறவியில் கிடைத்தனர். நான் சொன்ன கதை உமது முற்பிறவியைப் பற்றியதுதான். அந்த அன்னக்குஞ்சு சமையலை தெரியாமல் உண்ட மன்னன் நீர்தான். செய்த பாவம் என்னவென்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே.

தினமும் அன்னத்தின் மாமிசத்தை என்னவென்று தெரியாமல் ரசித்து சாப்பிட்டீர் அல்லவா? இப்படிக் கண்ணிருந்தும் குருடனாக இருந்ததால் இந்தப் பிறவியில் இந்த நிலைக்கு ஆளாக நேர்ந்தது. குஞ்சுகளை இழந்த தாய் அன்னம் போல பிள்ளைகளை இழந்து நீங்கள் துன்பம் அனுபவிக்க வேண்டி வந்தது’ என்றார்.

‘கிருஷ்ணா, முற்பிறவியில் செய்த பாவம் என்னையும் என் பிள்ளைகளையும் தண்டித்து விட்டதே’ என அழுதார் திருதராஷ்டிரன்.🍁

இனியாவது நாமும் நற்செயல்களில் ஈடுபட்டு பிள்ளைகளுக்கு சொத்தாக புண்ணியத்தை விட்டுச் செல்வோம்.

அம்பிகையின் அருள் நலம் கூட்டும் கதலி கௌரி விரதமும்; ரம்பா திருதியை விரதமும்!

அம்பிகையின் அருள் நலம் கூட்டும் கதலி கௌரி விரதமும்; ரம்பா திருதியை விரதமும்!

குடும்ப ஒற்றுமைக்காக மேற்கொள்ளப்படும் விரதங்களில் ஒன்று கதலி கௌரி விரதம். வைகாசி மாத வளர்பிறை சதுர்த்தியன்று வரும் கதலி கௌரி விரதத்தை, பலர் சிரத்தையுடன் மேற்கொள்கின்றனர். இந்த விரதம் நாளை 29ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த விரதம் குறித்த சில விஷயங்களை இப்பதிவில் காண்போம்.

வாழை மரத்தடியில் அல்லது வீட்டு ஸ்வாமி அறையில் கோலமிட்ட பலகை மீது வாழை இலையை போட்டு அதன் மீது சிவபெருமானும், பார்வதி தேவியும் சேர்ந்து இருக்கும் படம் அல்லது சிலையை வைக்க வேண்டும். அருகே குத்து விளக்கினை ஏற்றி வைக்கவேண்டும். படம் மற்றும் குத்து விளக்கினை அலங்கரித்து, பூக்களால் அர்ச்சித்து, விரத பூஜைகளை மேற்கொள்ளவேண்டும்.

ஒரு தட்டில் நிவேதனம் செய்ய, 108 கதலி அல்லது ஏதாவது வாழைப்பழங்களை வைத்துக் கொள்வது அவசியம். பூஜை முடிந்த பிறகு, கதலி வாழைப் பழங்களை நிவேதனம் செய்து, ஆரத்தி காட்டிய பின் அப்பழங்களை எட்டு வயதிற்குட்பட்ட சிறுமியர்களுக்கு சாப்பிட அளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம், கணவன் - மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடு நீங்குமென்றும், வாழையடி வாழையாக குலம் தழைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.🍁

கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து அமர்ந்து கதலி கௌரி பூஜை செய்வது சிறந்தது. ஒருவேளை, கணவன் வேலை நிமித்தம் வெளியூர் சென்றிருந்தால், மனைவி மட்டும் விரத பூஜையை செய்யலாம். கதலி கௌரி விரத பூஜை செய்ய, மாலை 6 மணி முதல் 8 மணி வரை நல்ல நேரமாகும்.

அதேபோல், வைகாசி மற்றும் கார்த்திகை மாதங்களின் வரும் வளர்பிறை சதுர்த்தியில் (நாளை) வரும் ரம்பா திருதியை விரதம் விசேஷமானதாகும். அழகு மற்றும் செல்வத்தை அளிக்கும். அம்பிகையின் நிறம் பொன் என்பதால், பெண்கள் மஞ்சள் பொன்னால் அம்பிகையை பிரதிபலித்து செய்யும் விரத பூஜை, ரம்பா திருதியை விரதம் ஆகும்.

வரலெட்சுமி விரத நோன்பு போல, மண்டபம் அமைத்து, வாழைக்கன்று கட்டி, கலசம் வைத்து, துர்கா, லெஷ்மி, சரஸ்வதி அஷ்டோத்திரம் படித்து, பூக்களால் அர்ச்சித்து வழிபடுவது வழக்கம். அம்பிகைக்கு வெல்லத்தினால் செய்த நிவேதனம் படைப்பது விசேஷம்.🍁

ரம்பா திருதியைப்பற்றி கூறப்படும் புராணக்கதை சுவாரசியமானதாகும். ஒரு சமயம், தேவலோக அப்சரஸ்களாகிய ரம்பா, ஊர்வசி, மேனகா மூவரிடையே யார் பேரழகி மற்றும் யார் நடனத்தில் சிறந்தவர் என்ற சர்ச்சை எழ, தேவேந்திரனிடம் சென்று முடிவு கேட்டனர். தேவேந்திரனோ, மூன்று பேரும் ஆடுங்கள். நான் நடுவராக இருந்து தீர்ப்பளிக்கிறேன் என்றவுடன், மூவரும் சிறப்பாக ஆடினர். இந்திரனின் கவனத்தைக் கவர வேண்டுமென்று, ரம்பா அரங்கமே அதிரும் வண்ணம் ஆடுகையில், நளினம் குறைந்து ரம்பாவின் நெற்றிப்பொட்டும், சந்திரப் பிரபையும் கீழே விழுந்தன. இதைக் கண்டு ஊர்வசியும், மேனகையும் சிரிக்க, ரம்பா அவமானப்பட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.🍁

கலையை அவமதித்த ரம்பா மீது, கலைவாணி கோபமடைந்ததால், ரம்பாவின் அழகும், கலையும் அவளை விட்டு நீங்கின. இதற்கு பிராயச்சித்தம் என்னவென்று ரம்பா, இந்திரனிடம் கேட்க, "பூலோகத்தில் பார்வதி தேவி கௌரி அன்னையாக அவதரித்து, ஒரு மகிழ மரத்தடியில் தவமிருக்கிறாள். அவளை நினைத்து விரதமிருந்து வழிபட்டால், அவளின் அருள் கிடைக்கும். உன் குறைகள் நீங்கும்" என்றார்.

இந்திரன் கூறியவாறே, ரம்பாவும் மிகவும் சிரத்தையுடன் அந்த விரதமிருந்து கௌரி தேவியை வழிபட, பார்வதி தேவியின் அருள் மற்றும் அழகும், கலையும் திரும்பக் கிடைத்தது ரம்பாவிற்கு.

ரம்பாவின் விரதத்தால் ஈர்க்கப்பட்ட கௌரி தேவி, ‘‘ரம்பா திருதியை அன்று விரதமிருந்து வழிபடும் பெண்களின் திறமையும் அழகும் மென்மேலும் வளரும். செல்வம் பெருகும்" என்று ரம்பாவிற்கு அருள்பாலித்தாள்.🍁

இத்தனை பெருமைகள் கொண்ட ‘கதலி கௌரி விரதம்’ மற்றும் ‘ரம்பா திருதியை விரதம்’ போன்றவற்றை மேற்கொண்டு, பார்வதி தேவியை மனதார வணங்கி வழிபட்டு நன்மைகள் பல பெறுவோம்!