வெள்ளி, 7 ஜூலை, 2017

திடியன் கோவில்

திடியன் கோவில்
மதுரையை சுற்றியுள்ள பழமை மாறாத கிராமங்களின் வரிசையில், உசிலம்பட்டி அருகே உள்ள திடியன் கிராமமும் ஒன்று. கிராமத்திற்கு செல்லும் வழியின் இரண்டு பக்கங்களிலும் பசுமை படர்ந்த வயல்வெளிகள் நம்மை பாசமாய் வரவேற்கிறது.
நகர்புறத்தின் சுவடுகளே இல்லாத அமைதி நிறைந்த சொர்க்கபூமியாக திகழும் இந்த கிராமத்தின் நடுவே, லிங்க வடிவில் அமைந்திருக்கிறது ராமர் மலை. இலங்கையில் ராவணனுடன் போர் புரிந்து கோபக்கனலுடன் வந்த ராமர், இந்த மலையில் உக்கிர கோலத்தில் காட்சியளிப்பதாக ஐதீகம்.
108 பவுர்ணமிகளில், இம்மலையை சுற்றி கிரிவலம் வந்தால், அங்கு உலாவும் 'கட்டை விரல் சித்தர்'களை பார்க்க முடியுமாம்..! அது என்ன கட்டைவிரல் சித்தர்கள் என நாம் கேட்கும் முன்...
'பல நுாற்றாண்டுகளாக மரணமில்லாமல் வாழ்ந்த சித்தர்கள் வயது முதிர்வு காரணமாக கட்டை விரல் அளவிற்கு குறுகி விட்டதால், 'கட்டை விரல் சித்தர்' என அழைக்கிறோம்; அது மட்டுமல்ல மலையின் நடுப் பகுதியில் குறுகிய குகை ஒன்றும் உள்ளது, அதில் சித்தர்கள் தினமும் வந்து போகிறார்கள்,' என்கின்றனர், கிராம வாசிகள்.
அதை கேட்டு, சந்தேகப்பார்வை பார்த்த நம்மை, 'நீங்கள் நம்பவில்லை என்றால் இதோ பாருங்கள்... அடிக்கடி ஆள் நடமாட்டம் இருந்ததற்கான அடையாளமாக, குகை பாதை வழுவழுப்பாக இருக்கிறது...' என அதை அவர்கள் காட்டிய போது, நமக்கே புல்லரித்தது.
எட்டு யுகங்கள் கண்டதாக கூறப்படும் இம்மலை, தங்கம், வெள்ளி, மண் என பல வடிவம் கண்டு, கலியுகத்தில் கல்லாக உருமாறியதாகவும், கிராமத்தினர் நம்புகின்றனர்.
அடுத்த இடத்திற்கு நகர்வதற்கு முன், மலை அடிவாரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலைபற்றி விசாரித்தோம். திருவண்ணாமலை கோயிலுக்குரிய அனைத்து சிறப்பும், அக்கோயிலுக்கும் இருக்கிறதாம். அதனால், 'தென் திருவண்ணாமலை' என்ற பெயரிலும், அதை அழைக்கின்றனர். அங்குள்ள கிராம கோயில் பூஜாரிகள் அழகுபிள்ளை, பாண்டி கூறுகையில், '14 சித்தர்களுடன், தட்சிணாமூர்த்தி இக்கோயிலில் வீற்றிருக்கிறார்.
இது போன்ற அமைப்பு தமிழகத்தில் வேறு எந்த கோயிலிலும் கிடையாது. கோயிலின் தல விருட்சமாக 'நெய் கொட்டான் மரம்' உள்ளது.
மரத்தின் இலைகளை பறிக்க யாருக்கும் அனுமதியில்லை. கீழே உதிர்ந்த இலைகளை எடுத்து, மீண்டும் மரத்தின் கீழே போட்டு 'இலை அபிஷேகம்' செய்தால் நினைத்த காரியம் கைகூடும்.
கைலாசநாதர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம், ராமனால் காசியிலிருந்து கொண்டு வரப்பட்டது. மலை ராமர் கோயிலுக்கு காவல் தெய்வமாக நல்லுாத்து சோணை கருப்பணசாமி அடிவாரத்தில் அருள்புரிகிறார். தான் உண்டு, தன் வேலை உண்டு என வாழ்பவர்களை யாராவது துன்புறுத்தினால் 'ராமா நீ பார்த்துக்கோ' என அவனிடம் பொறுப்பை விட்டு விடுவோம். ஆலயங்கள் நிறைந்த திடியன் கிராமத்திற்கு வந்து சிவனை தரிசித்தால் முக்தி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை,'என்றனர்.
திடியன் கிராமத்தில்,ஒவ்வொரு தகவலும், புதையல் போலவும், அதே நேரத்தில் புதிரானவையாகவும் இருந்தன. ஆனாலும், இயற்கையின் எழிலோடு விளையாடும்
அந்த கிராமத்தின் அழகை, பார்ப்பதே அழகு.
Previous Post
Next Post

0 Comments: