வெள்ளி, 7 ஜூலை, 2017

வெள்ளியங்கிரி மலை வரலாறு


வெள்ளியங்கிரி மலை வரலாறு

சிவபெருமான் அமர்ந்த மலை....!!

🌹 🌿 🌹 :::::::::::::::: 🌿 🌹 🌿 ::::::::::::::  🌹 

வெள்ளியங்கிரி மலை🌿🌹

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான வெள்ளியங்கிரி மலைகளின் ஏழாவது மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில் அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்புவாய் எழுந்தருளி இருக்கின்றார்.

இம்மலை ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது. ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும் இப்பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்களை கண்டு மகிழ்ந்து செல்லலாம்.

தென்னகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த புண்ணியத் தலம் இது.

சிவன் அமர்ந்த மலை என்பதாலும், கயிலாயத்திற்கு ஒப்பான தட்பவெட்ப நிலை இங்கு நிலவுவதாலும், இம்மலை தென்கயிலாயம் எனப் போற்றப்படுகிறது.

இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் "வெள்ளியங்கிரி" என்ற பெயர் பெற்றது.

இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது.
மலையடிவாரத்தில் அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் அம்மன் செளந்திர நாயகியுடன் இணைந்து அருள்பாலித்து வருகிறார்.

இவருடன் விநாயகர், முருகன் என பிற கடவுள்களும் உள்ளனர்.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, மலை அடிவாரமான பூண்டி என்னும் ஊருக்கு பேருந்து வசதியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் பூண்டி, எனும் ஊரிலிருக்கும் வெள்ளியங்கிரி மலைத் தொடரில் ஏழாவது மலையாகிய கயிலாயங்கிரியே சிவ சொரூபமாக தோற்றமளிக்கிறது.

இங்கே உள்ள குகையில்தான் சிவபெருமான் திருக்காட்சி அருள்கிறார்.
இங்கு ஆண்டி சுனையில் நீராடுவது ஒரு முக்கிய நிகழ்வாகும்.

மலை உச்சியில் பாறைகள் சூழ சிவப் பெருமான் காட்சியளிக்கின்றார். பெரும்பாலும் கோடை காலங்களில் இரவு பொழுதுகளிலேயே மலை ஏறி இறங்குகின்றனர்.

கையில் மூங்கில் தடிகளின் உதவியுடன் ஏறுதல் சிறப்பு ஆகும். மேலும் சுமார் 3000 ஆண்டுகளாக மலை வாழ் மக்களால் வழிபட்டு வரும் ஒரு தொன்மையான இடமாகும்

சர்வம் சிவமயமாக விளங்கும் பிரபஞ்சத்தில் உத்திர கயிலாயம் சூட்சம நி்லையி்ல் அமைந்துள்ளது.

மத்திய கயிலாயம் திபெத்தில் உள்ளது. தட்சிண கயிலாயம் வெள்ளியங்கிரி மலையாகும். இதனால் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.

சப்தரிஷிகளில் ஒருவரான சித்தர் அகத்திய முனி தவம்புரிந்த மலையாகும். வெள்ளியங்கிரி, அகத்திய பரம்பரையில் வரும் ஞானியர் அனைவருக்கும் வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது.

ஆதி சங்கரர் வழிபட்ட இடமாகவும் போற்றப்படுகிறது.

சிவபெருமானே வந்து தவம் புரிந்த இடமென்றும், சித்தர்கள், யோகிகள், ஞானிகள் பலரும் காலங்காலமாய் தவம்புரிந்தும், வாழ்ந்தும்,சூட்சுமத்தில் இயங்கியும்வருவதால் இந்த மலை சிவரூபமாகும், தவரூபமாகவும் திகழ்கிறது.

மகாயோகி பழனி சுவாமிகள், சிவயோகியார், சத்குரு ஸ்ரீபிரம்மா, அகோரி விமலானந்தா, அழுக்கு சாமியார், சௌந்திரபாண்டி சாமியார், காலாத்ரி சாமியார், மைசூர் சாமியார், எட்டிகொட்ட சாமியார், மிளகாய் சாமியார், மாரிமுத்து முதலியார், இராமானந்த பரதேசி ஆகியோர் உலவி மறைந்த புண்ணிய பூமி வெள்ளியங்கிரி மலையாகும்.

1.முதல் மலை          :பிரணவ சொரூபம் வெள்ளிவிநாயகர் உறைவிடம்.

2.இரண்டாம் மலை :சுவாதிஷ்டானம் பாம்பாட்டிச் சுனை.

3.மூன்றாம் மலை    :மணிப்பூரகம் அக்னிஅம்சம், கைதட்டிச்சுனை.

4.நான்காம் மலை    :அநாகதம் ஒட்டர் சித்தர் சமாதி உள்ள இடம்.

5.ஐந்தாம் மலை       : விசுக்தி நிலை பீமன் களியுருண்டை மலை.

6.ஆறாம் மலை        :ஆக்ஞை நிலை சேத்திழைக்குகை, ஆண்டி சுனை.

7.ஏழாவது மலை     :சஹஸ்ரஹாரம் சுயம்புலிங்கம், (வெள்ளியங்கிரி
ஆண்டவர்)

பூண்டியை அடிவாரமாகக் கொண்ட வெள்ளியங்கிரியின் ஏழு மலைகளிலும் மனி்த உடலில் உள்ள மேற்கண்ட ஏழு சக்கரங்களின் அம்சங்கள், ஒவ்வொரு மலையிலும் ஒவ்வொரு ஆதாரத்தின் அம்சமா௧ அடங்கியுள்ளதாக் ஆன்மீகச் சான்றோர்கள சொல்வதுண்டு்.

திருச்சிற்றம்பலம்🌿🌹

Previous Post
Next Post

0 Comments: