வெள்ளி, 23 செப்டம்பர், 2022

விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை

விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை
VIVASAYAM KATTURAI IN TAMIL

உலகில் மேன்மையான தொழிலான விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.

மனிதன் பணத்தை தேட எத்தனை தொழில்கள் இருந்தாலும் உயிர்வாழ உணவை தேட விவசாயம் மட்டுமே இருக்கிறது.

விவசாயம் கட்டுரை
Vivasayam Katturai In Tamil
உடல் நலம் காப்போம் கட்டுரை இங்கே சென்று பாருங்கள்.

விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை
குறிப்பு சட்டகம்
முன்னுரை
விவசாயத்தின் முக்கியத்துவம்
இயற்கைமுறை விவசாயம்
இன்றைய விவசாய முறை
இன்றைய விவசாய முறைகளும் தீமைகளும்
முடிவுரை
முன்னுரை
“சுழன்றும் ஏர் பின்னது உலகு ஆதலால் உழன்றும் உழவே தலை” என்கிறார் வள்ளுவர்.

அதாவது இவ்வுலகம் உழவுத்தொழிலாலேயே இயங்கி கொண்டிருக்கிறது. விவசாயம் இல்லாமல் போனால் பசி பட்டினி பஞ்சம் என்பன அதிகரித்து மக்கள் உணவில்லாமல் திண்டாடும் நிலையானது உருவாகும்.

பழங்காலங்களில் மனிதன் வேட்டையாடி உண்டான் பின்பு ஆற்றங்கரையோரங்களை அண்டி சில பயிர்களை உருவாக்கி அவற்றின் மூலம் தனது உணவினை பெற்று கொண்டான்.

இவ்வாறு பயிர்ச் செய்கையுடன் கால்நடை வளர்ப்பும் சேர்ந்த அம்சமே விவசாயம் என்றழைக்கப்படுகிறது.


உலகத்தில் எத்தனை தொழில்கள் இருந்தாலும் எல்லோர்க்கும் உணவளிக்கும் மேன்மையான தொழிலாக விவசாயம் காணப்படுகிறது. இது இன்றைக்கு பல பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறது.

இக்கட்டுரையில் விவசாயத்தின் முக்கியத்துவம், பண்டைய இயற்கை விவசாயம், இன்றைய விவசாய முறை மற்றும் இன்றைய விவசாய முறைகளும் தீமைகளும் போன்ற விடயங்கள் நோக்கப்படுகின்றன.

விவசாயத்தின் முக்கியத்துவம்
மனிதனுக்கு பசி என்ற உணர்வு இருக்கின்ற வரையில் விவசாயம் அழிவடையாது. இங்கே பிறக்கின்ற ஒவ்வொருவருக்கும் இறக்கும் வரை உணவு தேவை. ஆகவே விவசாயம் செய்வதனால் தான் எம் ஒவ்வொருவருக்கும் உணவு கிடைக்கும்.

நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் சனத்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி இடம்பெறவேண்டியது அவசியமாகும்.

இன்றைக்கு ஆபிரிக்காவிலும் உலகமெங்கிலும் உள்ள வறுமையான பிராந்தியங்களில் உள்ள மக்கள் ஒருவேளை உணவுக்கு கூட வழின்றி பசியால் இறக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?


நாடுகள் அத்தியாவசியமான விவசாயத்தை கைவிடும் பட்சத்தில் எல்லோருக்கும் இதே நிலை தான்.

இதனால் தான் உலக நாடுகள் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதற்காக பயிர்ச்செய்கை, பாற்பண்ணை, கைத்தொழில், மீன்பிடி ஆகிய விடயங்களில் அதிகம் கவனம் செலுத்துகின்றன.

விவசாயத்தை விரிவுபடுத்தும் நோக்கில் விவசாயத்தில் அதிக தொழில்நுட்பங்களை புகுத்தி உணவு உற்பத்தியை அதிகரிக்க முனைந்து நிற்கின்றன.

கடுமையான காலநிலை தன்மைகள், பொருளாதார நெருக்கடி மற்றும் யுத்தம் போன்ற நிலமைகளில் உலகம் உணவு மற்றும் விவசாயத்தினுடைய முக்கியத்துவத்தினை உணர்ந்துகொள்ளும்.

இயற்கைமுறை விவசாயம்
இயற்கைமுறை விவசாயம் எனப்படுவது பக்கவிளைவுகளற்ற இம் மண்ணின் விவசாய முறையாகும். பண்டையகாலம் தொடக்கம் எமது மூதாதையர்கள் இயற்கை முறை விவசாயத்தையே மேற்கொண்டனர்.

இது இயற்கையை பாதுகாப்பதோடு உற்பத்திபண்ணும் உணவு பொருட்கள் மனிதனையும் பாதிக்காத தூய உணவு பொருட்களாக இருந்தன.

இங்கு விவசாயம் நிலம் பண்படுத்தலுக்காக எருதுகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றினால் பண்படுத்தப்பட்ட நிலத்தில் கால்நடைகளின் கழிவுகள் மற்றும் தாவர கழிவுகள் மண்ணை வளப்படுத்தி பாதுகாத்தன.


இவ் இயற்கை பசளைகள் மண்ணை வளப்படுத்தியதோடு மண்ணையும் பாதுகாத்தன. பயிர்ச்செய்கையில் எஞ்சிய கழிவுகள் விலங்குகளுக்கு உணவாகின. இது ஒரு சுழற்சியாக இடம்பெற்றது.

இப்பயிர்ச்செய்கையில் சேதன பசளைகள் பக்கவிளைவுகளற்ற இயற்கைமுறையிலான கிருமிநாசினிகள் பயன்படுத்தப்பட்டன. இதனால் விளைந்த விளைச்சல் பக்கவிளைவுகளற்றதாக காணப்பட்டது.

அக்கால மக்கள் நோய்நொடிகளில்லாமல் நீண்டகாலம் வாழ்ந்தார்கள். இம்முறை விவசாயம் இன்றைக்கு மாற்றம் அடைந்து வருகிறது. ஒரு சிலர் தான் இன்னும் பாரம்பரியத்தை பின்பற்றி வருகின்றனர்.

இம்முறை பின்பற்ற படாமையின் விளைவுகளை நாம் இன்றைக்கு அனுபவித்து கொண்டிருக்கின்றோம்.

இன்றைய விவசாய முறைகளும் தீமைகளும்
இன்றைய விவசாய முறைகள் அதிக இலாபமீட்டும் வழியை காட்டுகின்றன. தொழில்நுட்பம் மூலமாக அதிகபரப்பளவில் பயிர்செய்ய முடிகிறது.

புதிதாக உருவாகும் நோய்கள், களைகள் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்தமுடிகிறது. ஆனால் மனிதர்களுக்கு உயிரியல் ரீதியாக கடத்தப்படும் நோய்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

இன்றைய உணவுமுறை நஞ்சாகி விட்டது. இன்றைய விவசாயத்தில் பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள் அசேதன பசளைகள் மனித உடலில் சேர்ந்து ஏராளமான நோய்களுக்கு காரணமாக அமைகிறது. புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்கள் உருவாகின்றன.

பாவிக்கப்பட்டு கழிவாக நீர்நிலைகளை நோக்கி செல்லும் வளமாக்கிகளால் நீர்நிலைகளும் நஞ்சாகின்றது.

அளவுக்கு மீறிய மண் பண்படுத்தலால் மண்கட்டமைப்பு சிதைந்து மண்ணரிப்பு போன்ற அபாயநிலைகள் இன்றை விவசாய முறையில் காணப்படுகின்றன.

முடிவுரை
“அடி காட்டிற்கு நடு மாட்டுக்கு நுனி வீட்டுக்கு” என்ற இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வாரின் கருத்திற்கிணங்க நடைமுறைக்கு சாத்தியமாக இயற்கையான விவசாய முறைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு இன்றைக்கு மனிதகுலம் தள்ளப்பட்டுவிட்டது.

இன்றைக்கு இளம் வயதிலேயே பலர் தமது வாழ்வை இழக்கிறார்கள். எமது விவசாய முறையும் உணவு பழக்கவழக்கமும் மாறிவிட்டதனால் இந்த விளைவுகள் ஏற்படுகின்றன.

நாம் இனியாவது எமது மூதாதையர்கள் சொன்ன விடயங்களை புரிந்து கொண்டு நஞ்சில்லாத இயற்கை விவசாய முறைகளை மேற்கொண்டு எமது சந்ததிக்கு வழிகாட்ட வேண்டும்.

இது நம் ஒவ்வொருவருடைய தலையாய கடமையாகும்.


Previous Post
Next Post

0 Comments: