வியாழன், 22 செப்டம்பர், 2022

எரிபொருள் சிக்கனம் கட்டுரை

எரிபொருள் சிக்கனம் கட்டுரை
ERIPORUL SIKKANAM KATTURAI


இன்று அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாக மாறியுள்ள “எரிபொருள் சிக்கனம் கட்டுரை” பதிவை இதில் காணலாம்.

அதிகரித்த பாவனை காரணமாக எரிபொருட்கள் தயாரிக்கும் வளங்கள் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. இவற்றை சிக்கனமாக பயன்படுத்துவது சூழலுக்கும் ஆரோக்கியமானதாகும்.

எரிபொருள் சிக்கனம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
முன்னுரை
எரிபொருளின் முக்கியத்துவம்
எரிபொருளின் பயன்பாடுகள்
எரிபொருள் சிக்கனத்தின் அவசியம்
எரிபொருள் சிக்கனத்திற்கான வழிமுறைகள்
முடிவுரை
முன்னுரை
மனித வாழ்வில் எரிபொருள் இன்றியமையாததாகிவிட்டது. ஒவ்வொரு மனித வாழ்க்கையும் மின்சாரம்⸴ சமையல் எரிவாயு⸴ பெட்ரோல்⸴ டீசல் உள்ளிட்ட எரிசக்தி ஆதாரங்களை வைத்தே நகர்கின்றன. இதனால் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துவது காலத்தின் தேவையாகும்.

நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த எரிபொருள் சிக்கனம் மிகவும் அவசியம். எரிபொருள் சிக்கனம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

எரிபொருளின் முக்கியத்துவம்
எரிபொருள் பயன்பாடின்றி உலகம் இயங்க முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டது. அந்த அளவிற்கு எரிபொருட்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகிவிட்டன. அன்றாட வாழ்வியலில் எரிபொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.

சமையல் தேவைகளுக்காகவும்⸴ ஏனைய வீட்டுப் பாவனைகளுக்காகவும் எரிபொருள் முக்கியம் பெறுகின்றன.

நவீனமயமாக்கலுக்குட்பட்ட உலகில் பல தொழிற்சாலைகளும்⸴ தொழிற் துறைகளும் உருவாகி வருகின்றன. இவற்றின் இருப்பிற்கும்⸴ இயக்கத்திற்கும் எரிபொருட்கள் முக்கியமானவையாகும்.


உணவகங்கள்⸴ உணவு விடுதிகள் இயங்க எரிபொருள் தேவையாக உள்ளது. மின் உற்பத்தியைப் பேணவும்⸴ தினமும் தடையற்ற மின்சாரத்தை வழங்கவும் திண்ம எரிமங்களான நிலக்கரி முக்கியமானவையாகத் திகழ்கின்றன.

எரிபொருளின் பயன்பாடுகள்
எரிபொருளின் பயன்பாடானது பல்வேறு வகைகளில் பயன்பட்டு வருகின்றன. வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கு எரிபொருள் பயன்படுத்தப்படுகின்றன. மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் எரிபொருட்கள் தேவைப்படுகின்றன.

இன்று வளர்ச்சி அடைந்தும்⸴ வாழ்வியலோடு இரண்டறக் கலந்ததுமாக பயணங்கள் உள்ளன. இத்தகைய பயணங்களை மேற்கொள்ளவும்⸴ போக்குவரத்துத்துறை வளர்ச்சி காணவும் எரிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தொழிற்சாலைகள் இயங்குவதற்கும்⸴ உற்பத்திகளை தடையின்றி மேற்கொள்ளவும் தொழிற்சாலை இயந்திரங்களை இயக்குவதற்கும் எரிபொருட்கள் பயன்படுகின்றன.

எரிபொருள் சிக்கனத்தின் அவசியம்
இன்று உற்பத்தியை விடவும் அதிக அளவு எரிசக்தி செலவழிக்கப்படுகிறது. இதனால் பொருளாதார பாதிப்பு மட்டுமல்லாது சூழல் பாதிப்பும் ஏற்படுகின்றது. எனவே எரிசக்தியை சிக்கனமாக பயன்படுத்துவது காலத்தின் தேவையாகும்.


மனிதனுக்கு அத்தியாவசிய தேவையான உணவுக்கு நிகராக எரிசக்தியும் விளங்கி வருகின்றது. இதனால் அடுத்த 50 ஆண்டுகளில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில் இருந்து விடுபட எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.

எரிபொருள் சிக்கனத்திற்கான வழிமுறைகள்
இன்று போக்குவரத்து தேவைக்காக பெருமளவிலான எரிபொருட்கள் செல்வழிக்கப்படுகின்றன. இதனை தடுப்பதற்கு குறுகிய தூரப் பயணங்களை துவிச்சக்கரவண்டியில் மேற்கொள்ளலாம்.

இவ்வாறு மேற்கொள்ளும் போது உடல் ஆரோக்கியம் பேணப்படுவது மட்டுமல்லாது சூழல் மாசடைதலும் தடுக்கப்படுகின்றது.

மின்சாரத்திற்காக அதிகளவிலான எரிமங்கள் செலவிடப்படுகின்றது. இதனைத் தடுக்க தேவையற்ற மின் பாவனைகளைக் குறைத்துக் கொள்ளும் போது மின்சாரம் சேமிக்கப்படும். இதன் மூலம் எரிபொருள் சேமிக்கப்படும்.

குறிப்பாக குறைவான மின் சக்தியில் எரியும் மின் விளக்குகளை பயன்படுத்தலாம். பாவனையின் பின் ஆளிகளை ஆப் செய்துவிடல் போன்ற விடயங்களைக் கவனத்தில் எடுத்துச் செயல்படுதல் வேண்டும்.

முடிவுரை
எமது வாழ்வில் இன்றியமையாதாக மாறியுள்ள எரிபொருட்களைச் சிக்கனமாக பயன்படுத்துவது அவசியமாகும். அப்போதுதான் நம் சந்ததிகள் மட்டுமல்லாது⸴ எதிர்கால சந்ததியினரும் எதிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடுப் பிரச்சினையை எதிர் நோக்காமல் வாழமுடியும்.

இன்று சுற்றாடல் மாசுபாடானது உலகம் எதிர்கொள்ளும் பாரிய சவாலாகும். இதனை நிவர்த்தி செய்து கொள்ளவும் எரிபொருள் சிக்கனம் மிகமிக அவசியமானதாகும்.


Previous Post
Next Post

0 Comments: