எங்கள் ஊர் கட்டுரை: Engal Oor Katturai In Tamil
ENGAL OOR KATTURAI IN TAMIL
இந்த பதிவில் “எங்கள் ஊர் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டமைந்துள்ளன.
எங்கள் ஊர் கட்டுரை – 1
“சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா? எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா?” என்ற வரிகளை போலவே எங்கள் ஊர் அமைந்துள்ளது. இயற்கை அழகு கொஞ்சும் எமது ஊரின் அழகை பற்றி கூறினால் கூறிக்கொண்டே செல்லலாம்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக குளங்கள் அதன் அருகே அழகிய கோயில்கள், ஊரை ஊடறுத்து செல்லும் அழகான ஆறு, பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகள், பரந்து விரிந்த தென்னம் தோப்புகள்,
அழகியல் நிறைந்த தோட்டங்கள், நீண்ட நெடுத்த பனை மரங்கள் அதனிடையே ஒற்றையடி பாதைகள், பசுமை நிறைந்த புல்வெளிகள் அங்கெல்லாம் மேய்ந்து திரிகின்ற மந்தை கூட்டங்கள், ஒற்றுமையாக வாழ்கின்ற மனிதர்கள் இவ்வாறு எனது ஊர் ஒரு அழகியல்.
இந்த அழகான அமைதியான ஊருக்கு நிகராக எந்த நகரம் இருந்து விட முடியும். எங்கள் ஊர் அழகுக்கும் வளத்துக்கும் பஞ்சமில்லை. அதிகமாக வாகன இரைச்சல் கேட்காது அதற்கு பதிலாக பறவைகளின் கீச்சுகுரல்களை கேட்க முடியும்.
அழகான சூழலில் அமைந்த ஆலயங்கள் தெய்வீகத்தை மக்களுக்கு வழங்குகின்றன. இந்த வயல்களில் விளையும் நெல்லும் மரக்கறிகளும் மக்களுக்கு பசி பட்டினி வராமல் காக்கின்றது. இந்த தூய்மையான காற்றும் தூய்மையான நீரும் எங்கள் ஊரை மேலும் அழகாக்கின்றன.
மற்றும் அடுத்தவர்களின் துன்பத்தில் உதவுகின்ற நல்லெண்ணம் கொண்ட மக்கள் வாழ்கின்றமை எங்கள் ஊரை மேலும் அழகாக்கியிருக்கின்றது. எல்லா வளங்களும் நிறைந்துள்ள எங்கள் ஊரில் வாழ்வது தான் மனதுக்கு மகிழ்ச்சியை தருவதாக இருக்கின்றது.
உலகத்தில் வேறு எங்கு சென்றாலும் நமது ஊர் தருகின்ற சுதந்திரத்தையும் மனநிறைவையும் வேறு எங்கும் எம்மால் பெற்று விட முடியாது என்பது தெளிவான உண்மையாகும்.
எங்கள் ஊர் கட்டுரை – 2
கடல் கடந்து கண்டம் கடந்து உழைப்பதற்காக தமது சொந்த ஊரை விட்டு வெளியேறிய அனைவருக்கும் சொந்த ஊரின் நினைவுகளை ஒரு போதும் மறக்க முடியாது. அந்த நினைவுகள் பசுமையானவை எங்கு சென்றாலும் எங்கள் ஊர் என்று பெருமை பேசாமல் இருப்பவர் எவரையும் பார்க்க முடியாது.
அழகான குடும்பம், அழகான வீடு, மறக்க முடியாத அயல் வீட்டவர்கள், சிறுவயது நண்பர்கள், சிறுவயதில் ஓடி திரிந்த வயல் வெளிகள், பள்ளி சென்ற நினைவுகள், கொண்டாடி திரிந்த கோவில் திருவிழாக்கள், பாசத்தை பொழிந்த உறவுகள், மறக்கமுடியாத ஊரவர்கள் என்று எங்கள் ஊரின் நினைவுகள் உலகத்தின் எந்த கோடியில் இருந்தாலும் மனதில் கனக்கவே செய்கின்றது.
ஓடிக் கொண்டே இருக்கின்ற மனித வாழ்வில் உழைத்து களைத்த பின்னர் ஓய்வெடுக்க தாய் மடியினை தேடுவது போல சொந்த ஊரை தான் எல்லோரும் தேடுவார்கள்.
எங்கள் ஊரில் அத்தனை வசதிகள் இல்லை பணக்கார ஊருமில்லை இருப்பினும் எங்களுக்கு எங்கள் ஊர் பெரிது அங்கே கிடைக்கின்ற நிம்மதி பெரிது. உலகமெங்கும் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதர்களும் தமது சொந்த ஊரோடு அழகாக பிணைக்கப்பட்டிருப்பார்கள்.
பிறந்தது முதல் சொந்த ஊரிலே வாழ்கின்ற அந்த அழகான வாழ்க்கை அனைவருக்கும் கிடைத்து விடாது. அவ்வாறான அழகாக வாழ்க்கை கிடைப்பவர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள் தான்.
மனித வாழ்வோ குறுகியது அந்த வாழ்வை எமக்கு பிடித்த படியாக வாழ்வது தான் மிகவும் அவசியமானதாகும். அதனை நிச்சயமாக எங்கள் ஊர் எமக்கு வழங்கும் என்று நான் நம்புகின்றேன்.
0 Comments: