வெள்ளி, 7 அக்டோபர், 2022

திரிபுர தகனமும், கூவம் திரிபுராந்தகர் திருக்கோவில்.

ஆலயதரிசனம்....

திரிபுர தகனமும், கூவம் திரிபுராந்தகர் திருக்கோவில்...

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான கூவம் சுமார் நூறு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர், (சென்னை நகரம் ஜனத்தொகை பெருக்கத்தில் சிக்குவதற்கு முன்னர்) ஒரு அற்புதமான நன்னீர் பாயும் நதியாக இருந்தது. ஆனால் இன்றோ நாகரீகத்தின் வளர்ச்சியால் (?!) கழிவு நீர் கலக்கும் ஒரு சாக்கடையாக மாறிவிட்டது.

*‘கூவம்’* ஆற்றின் பெயரில் பாடல் பெற்ற சிவத்தலம் ஒன்று இருப்பதும் கூவம் பிறக்கும் இடம் அது தான் என்பதும் எத்தனை பேருக்கு தெரியும் ?

முதலில் கூவத்தின் வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம். கூவம் ஆறு சென்னையிலிருந்து சுமார் 75 கிலோ மீட்டர் தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கேசாவரம் எனும் சிற்றூரில் கல்லாறின் கிளையாறாக உருவாகிறது. கூவம் ஆறு உருவாகும் இடத்தில் பாடல் பெற்ற சைவத்தலமான *திருவூரலும் (தக்கோலம்),* சில கி.மீ. தூரம் தள்ளி *திருவிற்கோலமும்* அதன் கரையோரம் அமைந்துள்ளன. இங்கு உருவாகும் இந்த ஆறு சென்னை நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது. ஆற்றின் நீர்பிடிப்பு பகுதி 400 சதுரகிலோமீட்டர்.

*‘கூவம்’* பிறக்கும் இடமாக திருவூறல் கூறப்பட்டாலும் அது *‘கூவம்’* என்கிற திருவிற்கோலத்தின் பெயரால் தான் அந்த பெயரில் வழங்கப்படுகிறது. ஆறு பழமையானதா இந்த தலம் பழமையானதா என்பது அந்த ஈசனுக்கே தெரியும்.

*திருவிற்கோலம் – திரிபுராந்தகேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும்.*

திரிபுர அசுரர்களை அழிக்கும் பொருட்டு, இத்தல இறைவனார் மேரு மலையை வில்லாக ஏந்திய தலம் என்பதால் *’திருவிற்கோலம்’* என்ற பெயர் இத்தலத்திற்கு வந்தது.

திரு + வில் + கோலம் – தலத்தின் பெயராயிற்று.

தொண்டை நாட்டில் உள்ள 32 பாடல் பெற்ற தலங்களுள் இது 14வது தலம்.

திருஞானசம்பந்தர் தனது மூன்றாம் திருமுறையில் திருவிற்கோலத்தை பாடியிருக்கிறார்.

*காசி முதலாய தலங்களில் செய்த பாவங்களும் திருக்கூவத்தின் எல்லையை மிதித்தவுடனே நீங்கி விடும். ஆனால் இத்தலத்தில் செய்த பாவங்கள் எந்தப் புண்ணியத் தலங்களுக்குப் போனாலும் தீராது.*

*இத்தலத்தின் பெயரைச் சொன்னாலும் நினைத்தாலும் இங்கு பிறந்தாலும் நற்கதி கிடைக்கும்.*

*இத்தலத்தினிற்குச் சமமாக வேறு எத்தலத்தையும் கூற இயலாது.*

#இறைவன் 
திரிபுராந்தகேஸ்வரர், திருவிற்கோலநாதர்

#அம்பாள் 
திரிபுராந்தகி, திரிபுரசுந்தரி.

#தலமரம் 
வில்வம். (இத்தலமே *‘நைமிசாரண்ய க்ஷேத்திரம்’* எனப்படுகிறது.)

#தீர்த்தம் 
அக்னி தீர்த்தம். (இது கோயிலுக்கு எதிரில் உள்ளது.)

இங்குள்ள இறைவன் (மூலவர்) தீண்டாத் திருமேனி. அர்ச்சகர்கள் கூட தொட்டு பூஜை செய்வதில்லை. சுவாமியை தொடாமல் தான் அனைத்தும். ஆகமவிதிமுறை கடுமையாக பின்பற்றப்பட்டு பூஜை நடைபெறும் சொற்ப கோவில்களுள் திருவிற்கோலம் ஒன்று.

இங்குள்ள சுவாமி மீது வெண்மை படர்ந்தால் மழை மிகுதியாக பெய்யும் என்பதையும் மழை குறைவு என்றால செம்மையான மேனி மூலமும் உணரலாம் என்று கூறப்படுகிறது. இதைத் தான் சம்பந்தர் *‘ஐயன் நல்லதசியன்’* என்று குறிப்பிடுகிறார்.

*ஐயன்நல் லதிசயன் அயன்விண்* *ணோர்தொழும்*
*மையணி கண்டனார் வண்ண* *வண்ணம்வான்*
*பையர வல்குலாள் பாகம் ஆகவும்*
*செய்யவன் உறைவிடம் திருவிற் கோலமே!*

பாடல் விளக்கம்..

இறைவர் யாவற்றுக்கும் தலைவர். பல பல வேடம் கொள்ளும் அதிசயர். பிரமனும், மற்றுமுள்ள விண்ணோர்களும் தொழுகின்ற மை போன்ற இருண்ட கண்டத்தர். நல்ல வண்ணமுடைய, பாம்பின் படம் போன்ற அல்குலையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு செம்மேனியராய் அவர் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.

*மேற்கொண்டு ஆலய தரிசனத்தை தொடர்வதற்கு முன்னர் திரிபுர தகனத்தின் சுருக்கத்தை பார்ப்போம்.*

திரிபுர தகனமும் ஈசனின் பெருமை..

தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்ற மூன்று அசுரர்கள் பிரம்மனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார்கள். தவத்தை மெச்சிய நான்முகன் அவர்கள் முன் தோன்ற, அவர்கள் மரணமேயில்லாத பெருவாழ்வு தாங்கள் வாழ வேண்டும் என்று வரம் கேட்டார்கள். அப்படிப்பட்ட வரத்தைத் தன்னால் அளிக்க இயலாது என்றும் வேறு ஏதேனும் வரம் கேட்கும்படி பிரமன் கூற, அவர்கள் விந்தையான வரம் ஒன்றைக் கேட்டார்கள்!

மண் உலகில் இரும்பால் ஆன கோட்டை, அந்தர உலகில் வெள்ளியாலும், விண்ணுலகில் பொன்னால் ஆன கோட்டையும் வேண்டும். சகல வளங்களும் இந்த முப்புரங்களில் அமைய வேண்டும். அவர்கள் மூவரும் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு இந்தக் கோட்டைகளுடன் பறந்து செல்ல வேண்டும். ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை சிறிது நேரம் இந்த மூன்று கோட்டைகளும் ஒரே நேர்க்கோட்டில் அமையும் போது, சிவபெருமான் ஒரே ஓர் அம்பினால் அவற்றைப் பொடியாக்கி தங்களுக்கு மோட்சம் அளிக்க வேண்டும் !* இது தான் அவர்கள் கேட்ட வரம் ! பிரம்மனும் அருள்புரிந்து விட்டு மறைந்தான்.
தாங்கள் விரும்பிய படியே பெற்றுவிட்ட வரத்தை வைத்துக் கொண்டு அந்த அசுரர்கள் அட்டகாசம் புரியத் துவங்கினர்.
அந்த மூன்று கோட்டைகளையும் விண்ணில் அட்டகாசமாய் பறக்கவிட்டு வைகுந்தம் போன்ற தேவ நகரங்களையும் பல புண்ணிய ஷேத்திரங்களையும் இந்த அசுரர்கள் பாழ்படுத்தி தேவர்களுக்குப் பெருந்துயர் விளைவித்தனர்.

தேவர்கள் அனைவரும் நாராயணரிடம் சென்று முறையிட, அவர் தனக்கே உரித்தான தேவதந்திரத்துடன் செயல்பட்டார். தனது மாயா சக்தியால் புதிய வடிவு கொண்டு நாரத முனிவர் சீடராக உடன் வர, திரிபுரமடைந்து அந்த அசுரர்களை சிவநிந்தனை செய்யும்படி செய்தார் !

அந்த அசுரர்களும் திருமாலின் மாயவலைக்கு ஆட்பட்டு சிவபெருமானை நிந்தித்தார்கள். இத்தனைக்கும் அந்த அசுரர்கள், தேவர்களைத் துன்புறுத்தினார்களே தவிர, தினமும் தவறாமல் சிவபூஜை செய்து வந்தார்கள்.

அசுரர்கள் சிவநிந்தனை செய்வதைத் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டு அவர்களை அழித்துத் தங்களைக் காக்கும்படி வேண்டினார்கள்.

சிவனும் மனமிரங்கி அவ்வாறே செய்வதாய் அவர்களுக்கு உறுதி அளித்து போருக்குப் புறப்பட பிரம்மாண்டமான தேர் ஒன்றினை நிர்மாணிக்கக் கூறினார்.

தேவர்கள் படுஉற்சாகமாக வேலை செய்தனர். *சூரிய பகவானும் சந்திர பகவானும் தேரின் சக்கரங்கள் ஆயினர் ! நான்கு வேதங்களும் குதிரைகள் ஆயின. பிரம்ம தேவனே சாரதி ! மேருமலை வில்லாகவும், நாகங்களின் தலைவி வாசுகி நாணாகவும், திருமால் அம்பாகவும், அக்னிதேவன் அந்த அஸ்திரத்தின் முனையாகவும் மாறினர்.*

தேரில் ஏற சிவபெருமான் காலை வைத்ததும் தேரின் அச்சு முறிந்தது. உடனே திருமால் ரிஷபமாக மாறி சிவபெருமானைத் தாங்கி நின்றார். புறப்படும் முன் விநாயகரைத் துதிக்காததே அச்சு முறிந்ததற்குக் காரணம் என்று விநாயகரை அனைவரும் வணங்க அச்சு நேராயிற்று.

சிவபெருமான் திரிபுரங்களை அழிக்கத் தேரில் கிளம்பினார். தேவர்களுக்கு ஒரே கர்வம். தாங்கள் உருவாக்கின தேர் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தித்தான் சிவன், அசுரர்களை வெல்லப் போகிறார் என்று ! ஆனால் சிவபெருமான் தேவர்களின் இந்தக் கர்வத்தை ஒழிக்க நினைத்தார்.
கோட்டைகள் ஒரே நேர்க்கோட்டில் வந்தவுடன் அவற்றைப் பார்த்துப் புன்னகைப் புரிந்தார்.

அடுத்த கணமே அந்தக் கோட்டைகள் பற்றி எரிந்து சாம்பலாயின ! தனக்கு எந்த ஆயுதமும் படையும் எதிரிகளை அழிக்கத் தேவையில்லை. வெறுமனே நினைத்த மாத்திரத்தில் அவர்களை அழிக்கத் தன்னால் முடியும் என்று தேவர்களுக்கு நிரூபித்தார் சிவபெருமான்.*

தான் கொண்டு சென்ற ஒரே ஓர் அம்பைக் கூட அவர் பயன்படுத்தவில்லை. தேவர்கள் தங்களின் வீணான கர்வத்தை நினைத்து வருந்தி சிவனைப் பணிந்து நின்றார்கள்.

இப்படி சிவபெருமான் திரிபுரம் எரித்த புராண நிகழ்வை, *“திரிபுரமுந்திரி வென்றிட வின்புடன் அழலுந்த நகுந்திறல் கொண்டவர் புதல்வோனே”* என்ற அடிகள் மூலம் குறிப்பிடுகிறார்.

இனி ஆலய தரிசனத்தை தொடர்வோம்…

விற்கோல விமலர் அச்சை ஆனைமுகர் ஒடித்த இடத்தில் ஓர் அழகிய தீர்த்தம் தோன்றியது. இதற்கு *‘அச்சிறுகேணி’* என்றும், *கூபாக்கினி தீர்த்தம்* என்றும் பெயர்களுண்டு. இக்குளத்தில் தவளைகள் இல்லை. பிடித்து வந்து விட்டாலும் வெளியேறிவிடுமாம். இதில் முறைப்படி எட்டு நாள்கள் நீராடினால், கிடைத்தற்கரிய நற்பேறுகள் கிடைக்கும்.

ஆதிவாரம், சோமவாரம், அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி ஆகிய நன்னாளில் நீராடினால் நன் மக்களும் மன்னர் போன்ற பெறுவாழ்வும் கிட்டும் என்பது நம்பிக்கை.

சித்திரைத் திங்களில் பத்து நாள்களுக்குப் பெரு விழா முறையாக நடைபெறுகின்றது.

முகப்பு வாயிலின் முன்புறத்தில் ஒரு பக்கம் விநாயகரும் மறுபக்கம் முருகனும் காட்சி தருகின்றனர்.  விசாலமான உள்ளிடம், வெளிப்பிரகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. ஆனால் ஒரு அழகிய நாலு கால் மண்டபம் உள்ளது.

முதலில் வருவது, திரிபுரசுந்தரி அம்பாள் சன்னதி. அம்பாள் நல்ல உயரம் , அழகு. 
சுவாமிக்கு வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. இந்த அம்பாள் *‘ஆதி தம்பதி’* என்று விசேஷமாகச் சொல்லப்படுகிறது. 

கிழக்கு நோக்கிய சந்நிதி. நின்ற நிலை. இம்மண்டபத்தில் பள்ளியறையும், நவக்கிரக சந்நிதியும் உள்ளன. பள்ளியறை அமுதுபடிக்கெனத் தனியே கட்டளைகள் உள்ளனவாம்.

சுவாமி, அம்பாளுக்கு முன்னால் தனித்தனியே செப்புக்கவசமிட்ட கொடிமரங்கள் உள்ளன. அம்பாள் சந்நிதிக்கு எதிரில் துவஜாரோகண (நான்கு கால்) மண்டபம் உள்ளது.

அம்பாளை தரிசித்துவிட்டு வெளியே வந்து இடது புறம் நேராக உள் நுழைந்தால் நேரே நடராசர் சந்நிதி, உள் பிராகாரத்தில் வலம் வரும்போது விநாயகர் சந்நிதி உள்ளது. மூன்று திருமேனிகள் உள்ளன. இவர் பெயர் *‘அச்சிறுத்த விநாயகர்’* கோஷ்ட மூர்த்தமாக விநாயகர் உள்ளார்.

அடுத்துள்ள தட்சிணாமூர்த்தி அழகாக உள்ளார். கருவறையின் பின்புறத்தில் இலிங்கோற்பவர், அடுத்து பிரம்மா, துர்க்கை முதலிய சந்நிதிகள் மற்றும சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது.
பிரகாரத்தில் முருகப்பெருமான் சந்நிதி உரிய இடத்தில் இல்லாமல் இடம் மாறி, இலிங்கோற்பவருக்கு நேரே உள்ளது. பக்கத்தில் பாலமுருகன் சந்நிதியும் அடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதியும் உள்ளன.

துர்க்கை சந்நிதிக்கு எதிரில் சந்தன மேடை உள்ளது, இதில் அரைத்த சந்தனம் சுவாமிக்குச் சார்த்தப்படுகிறது.

பைரவர் சந்நிதி, தனிக் கோயிலாக விளங்குகிறது. 

சோமாஸ்கந்தர், ஆறுமுகர், சந்திரசேகர், விநாயகர், பள்ளியறை மூர்த்தி, சுக்கிரவார அம்பாள், பிரதோஷ நாயகர், பிட்சாடனர், பூதகணம், மான், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, நால்வர் முதலிய திருமேனிகள் தொழத்தக்க அரிய அழகுடையவை.

பக்கத்தில் நால்வர், பிரதிஷ்டை உள்ளது.

சூரியன் திருவுருவம் உள்ளது.

மூலவர் அற்புதமான சுயம்பு மூர்த்தி, தீண்டாத் திருமேனி.

மேலே செப்பு மண்டபம் – மத்தியில் உருத்திராக்க விமானம். சுற்றிலும் உள்ள பத்து ஊர்களுக்கு இம்மூர்த்தியே குல தெய்வம்.

வாயிலில் இரு துவாரபாலகர்கள், திரிபுராதிகள் மூவருள் இருவர் இவர்கள் என்று சொல்லப்படுகிறது.

மணல் லிங்கம். இங்கு மூர்த்தியைப் பாலாலயம் செய்யும் வழக்கமில்லையாம். பதினாறு முழ வேஷ்டி தான் சுவாமிக்குச் சார்த்தப்படுகின்றது.

அதிக மழை, வெள்ளம் வரும் அறிகுறி இருந்தால் சுவாமி மீது வெண்மை படரும் என்றும், போர் நிகழ்வதாயின் செம்மை படரும் என்றும் சொல்லப்படுகின்றது. இது பற்றியே ஞானசம்பந்தர் தம் பாடலில் *‘ஐயன் நல் அதிசயன்’* என்று குறிப்பிடுகின்றார். (இவ்வண்ண மாற்றம் தற்போது காணப்படவில்லையாம்.)

*மூலவர் – திரிபுரம் எரித்த மூர்த்தி.* 

அபிஷேகங்கள் செய்வதால் உண்டாகும் மேற்புறப் படிவுகள் தானாகவே பெயர்ந்து விழுந்து திருமேனி சுத்தமாகி விடுமாம்.

சுவாமி கிழக்கு நோக்கிய சந்நிதி. கஜப்பிரஷ்ட விமான அமைப்பு.

பைரவர் கோயில் விமானத்தில் *‘நாய்’* சிற்பங்கள் பல, சுதையால் அமைக்கப்பட்டுளள்ன.

வலம் முடித்து உள்ளே செல்லும்போது எதிரில் நடராசர் காட்சி தருகின்றார். காளிக்கு இப்பெருமான் அருள்புரிந்ததால் இந்நடனம் *‘ரக்ஷாநடனம்’* எனப்படுகின்றது. 

காளிக்கு அருள் புரிந்த நிகழ்ச்சி இன்றும் பெருவிழாவில் பத்தாம் நாளில் நடைபெறுகின்றதாம். ஆண்டில், உரிய 6 நாள்களிலும் நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

*திருவாதிரையிலும், பெருவிழாவில் பத்தாம் நாளிலும் ஆக ஆண்டுக்கு இருமுறை நடராஜா உலா வருகின்றார்.*

நடராசப் பெருமானை வணங்கி உள் நுழைந்தால் நேரே மூலவர் காட்சி தருகின்றார். பக்கத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

கோயிலிருந்து சற்று தொலைவில் உள்ள *‘திருமஞ்சனமேடை’* என்று சொல்லப்படும் (கூவம் ஆற்றின் கரையில் உள்ள) இடத்திலிருந்து தான் தீர்த்தம் கொண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. 

இதற்கென ஒருவர் நியமிக்கப்பட்டு இவ்வாறு தினந்தோறும் நான்கு காலங்களுக்கும் அவ்வப்போது கொண்டு வரப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இவ்வாறு கொண்டு வருவதில் தவறு நிகழ்ந்து; அதாவது கொண்டு வருபவர் அத்தீர்த்தத்திற்குப் பதில் செல்ல வேண்டிய தொலைவுக்குப் பதிலாக வேறு தீர்த்தத்தைக் கொண்டு வந்து விட்டால், அதை அபிஷேகம் செய்துவிட்டால் சுவாமி மீது சிற்றெரும்புகள் படரும் என்றும் அதைக் கொண்டு அத்தவற்றைக் கண்டு கொள்ளலாம் என்றும் சொல்லப்படுகிறது.

ஆலயத்தில் நான்கு கால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன. இக்கோயிலில் சுவாமிக்குச் செய்யப்படும் அபிஷேக நடைமுறைகள் அனைத்தும் மிகவும் ஆசாரமான முறையில் செய்யப்படுகிறது. அவ்வாறே செய்யவேண்டுமென்றும், அதில் தவறு நேரின் தண்டிக்கப்படுவர் என்னும் நம்பிக்கையும் உள்ளது.

இவ்வூருக்குக் *‘கூபாக்னபுரி’* என்றும் பெயர் சொல்லப்படுகிறது.

கோயிலுக்கு எதிரில் உள்ள நிலங்களும் *‘குமார வட்டம்’* என்று முருகன் பெயரால் வழங்கப்படுகின்றன.

கோயிலுக்கு வெளியே – திரிபுர சம்ஹார காலத்தில் தேர் அச்சு முறிந்திட, உடனே பெருமானை விடையாக இருந்து தாங்கியதாகச் சொல்லப்படும் *கரிய மாணிக்கப் பெருமாள் கோயில்* உள்ளது.

*திருக்கூவப்புராணம்* – தலபுராணம் உள்ளது. துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இத்தலபுராணத்தைப் பாடியுள்ளார்.

அமைவிடம்....
அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில், கூவம் கிராமம், கடம்பத்தூர் அஞ்சல் – (திருவள்ளுர் (வழி), திருவள்ளுவர்.

கூவம் செல்லும் போது ஊருக்கு அண்மையில் இடப்புறமாக ஒரு கோயில் உள்ளது. இது *தர்க்கமாதா* என்னும் அம்மன் கோயிலாகும்.

திருவாலங்காட்டு நடராசப் பெருமானுடன் தர்க்கித்து நடனமாட, சிலம்பு முத்துக்கள் வீழ்ந்த இடம் இதுவென்றும், இதனால் அம்பாளுக்குத் *‘தர்க்க மாதா’* என்றும் பெயர் வந்ததென்றும் சொல்லப்படுகிறது. சிவாலயம் ஊரினுள் உள்ளது....
Previous Post
Next Post

0 Comments: