செவ்வாய், 1 நவம்பர், 2022

வேணுகோபால பார்த்தசாரதி கோவில்...

#ஆலயதரிசனம்..

வேணுகோபால 
பார்த்தசாரதி கோவில்...

மகா விஷ்ணுவின் பல அவதாரங்களில் ராமா அவதாரமும் ஒன்று. அறமே வாழ்வின் ஆன்மிக ஜோதி. அறத்தை வளர்ப்பதற்கும், மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக அவதாரம் செய்தார். மனிதன் நீதிமுறைகள், ஒழுக்க நியதி மற்றும் ஆன்மீக வழக்கங்கள் குறித்து உறுதியான கொள்கையுடன் விளங்க வேண்டும் என்றும், இப்படித் தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவராக ராமா அவதாரம் உள்ளார். இந்த விஷ்ணுவின் அவதாரமான ராமர், மற்றொரு அவதாரக் கடவுளான பெருமாளை வழிபட்டத் தலம் எங்கே உள்ளது என தெரியுமா ?

கோவில் சிறப்பு..

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது இந்த பெருமாள் திருத்தலம். இருப்பினும் தனது பொழிவினை இழக்காமல் இன்றும் கம்பீரமாக உள்ளது. இந்தக் கோவிலுக்கும் 15 மீட்டர் தொலைவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கும் சுரங்கப்பாதை உள்ளது. போர்க்காலத்தின் போது மன்னர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், போர்க் கருவிகளை பாதுகாக்கவும் இந்தப் பாதையை பயன்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன....

வரலாறு...

ராமனுக்கும், ராவணனுக்கும் நடைபெற்ற போரின் போது ராவணன் கொல்லப்பட்டான். இதனால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. இதுகுறித்து பிரம்மனிடம் முறையிட்ட ராமருக்கு, இந்த தோஷத்தில் இருந்து நீங்க வேணுகோபால பார்த்தசாரதியை வழிபடுமாறு அவர் அறிவுறுத்தினார். ராமரும் இத்தலம் வந்து 13 நாட்கள் தொடர்ந்து வழிபட்டு தனது தோஷத்தை நீக்கிக் கொண்டார்....

தல அமைப்பு...

வருமையில் இருந்து மக்களுக்கு புதையலைத் தந்து காத்தவர் இந்த வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள். சங்க காலத்தில் குறுநில மன்னர் வரி வசூல் செய்ய செங்கம் வந்தபோது கட்டியதே இந்தக் கோவில். மகாமண்டபத்தில் கருங்கல்லால் செதுக்கப்பட்ட தூண்கள் மண்டபத்தைத் தாங்கியுள்ளன. கர்ப்பகிரகத்தில் மூலவர் செம்பொன்ரங்க பெருமாள் நான்கு கைகளுடன் காட்சியளிக்கிறார். அவருக்கு அருகில் பத்மாவதி அம்மையாரும், ஆண்டாளும் அருள்பாலிக்கின்றனர். அவர்களைச் சுற்றிலும் உற்சவ மூர்த்திகள் உள்ளனர்.

திருவிழா..

பெருமாளுக்கு உகந்த மாதமான வைகாசியில் 10 நாட்களுக்குத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது பெருமாளும், ஆண்டாள் அம்மையாரும் யானை வாகனத்தில் அமர்ந்து நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தைக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

நடைதிறப்பு .

அருள்மிகு வேணுகோபால பார்த்தசாரதி திருக்கோவில் நடை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும்...

வழிபாடு..

மனதளவில் பாதிக்கப்பட்டிருப்போர், அதிகப்படியான மன அழுத்தத்தால் விரக்தியில் இருப்போர், ஆழ்வார் சன்னதியில் அமர்ந்து வழிபட மன நிம்மதி நிலவும். திருமணத் தடை உள்ள பெண்கள் இத்தலத்தில் உள்ள பெருமாளை வணங்கி சன்னதியை சுற்றி வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை...

நேர்த்திக்கடன்

வேண்டியவை யாவும் நிறைவேறியதும் பெருமாளுக்கும், அம்மையாருக்கும் புத்தாடைகள் சாற்றி, சிறப்பு அலங்காரம் செய்து மாலை அணிவித்து தங்களது நேர்த்திக்கனடை பக்தர்கள் செலுத்துகின்றனர்...

அமைவிடம்..
திருவண்ணாமலையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செங்கம். தேசிய நெடுஞ்சாலை 77யில் ஐயன்பாளையம், நல்லூர், மண்மலை கடந்தால் ஜவ்வாது மலையடிவாரத்தில் உள்ள இந்த பெருமாள் திருத்தலத்தை அடையலாம். திருப்பட்டூர், போளூர் என சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் இங்கு வர பேருந்து வசதிகள் எளிய முறையில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...
Previous Post
Next Post

0 Comments: