வியாழன், 17 நவம்பர், 2022

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாளும், ராமானுஜரும்...

#ஆலயதரிசனம்..

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாளும், ராமானுஜரும்...

இத்தலத்தில் தான் ஸ்ரீ ராமானுஜர் அவதரித்தார். அவருக்கென இக்கோவிலில் தனி சந்நிதியொன்று உள்ளது. இங்குள்ள பெருமாள் தன் துணைவிகளான ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி அளிக்கிறார். 

ஒவ்வொரு கோவிலும் வைகுண்ட ஏகாதசிக்கு சொர்க்கலோக கதவை
திறப்பார்கள். ஆனால் இக்கோவிலே பூலோகத்தின் வைகுண்டமாக கருதப்படுவரால் வைகுண்ட ஏகாதசி அன்றைக்கு இக்கோவிலில் அடி எடுத்து வைத்தாலே சொர்க்க வாசலில் நுழைந்த முழு பலனைப் பெறலாம். 

இங்குள்ள தாயாரின் பெயர் யதிராஜவல்லி. தாயாருக்கென்று தனி சந்நிதியுள்ளது. அத்தோடு ஆண்டாளுக்கும் தனி சந்நிதி ஒன்று தனியாக உள்ளது. ஆண்டாளின் அழகை வர்னிக்க நம் அகக்கண் கூட பத்தாது. பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். பிறகு ராமருக்கும், வேணுகோபாலருக்கும் தனித்தனி சந்ந்திகள் உள்ளன. இப்பெருமாளின் திருநட்சத்திரம் திருவோணம். ஸ்ரீராமானுஜரின் திருநட்சத்திரம் திருவாதிரை. ஆகவே ஒவ்வொரு மாதத்திலும் இந்த நட்சத்திரங்கள் வரும் தினங்களில் திருவீதி உலா வரும் வைபோகத்தை நாம் காணலாம்.

தல வரலாறு..

இக்காலத்தில் ஸ்ரீபெரும்புதூராக அழைக்கப்படும் இத்தலம் முன்னொரு காலத்தில் பூதபுரி என்ற பெயரில் இருந்தது. இதற்கு காரணம் ஒரு நாள் சிவபெருமான் கைலாயத்தில் தன்னை மறந்து நடனமாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரையும் அறியாமல் அவர் உடம்பில் இருந்த வஸ்திரம் நழுவி விழுந்தது. இதை பார்த்த சிவகணங்கள் சிவனை பார்த்து சிரித்தன. 

இதை உணர்ந்த சிவபெருமான் சிவகணங்களை பூமிக்கு செல்லுமாறு சாபமளித்தார். இதனால் மன வேதனை அடைந்த சிவகணங்கள், சிவனின் அருளை மீண்டும் பெற பெருமாளை நோக்கி தவம் செய்தார்கள். இதனால் பெருமாள், ஆதி கேசவப் பெருமாளாக, கணங்களுக்கு காட்சி அளித்து , பின் ஆதிசேஷனை அழைத்து குளம் ஒன்றை எழுப்பினார்.

அவற்றில் அந்த பூத கணங்களை மூழ்கி எழச்செய்து அவர்களுக்கு சாப விமோச்சனம் பெற வழி செய்தார். பூதகணங்களுக்கு சாப விமோச்சனம் கிடைத்த இடமானதால் இந்த இடம் பூதபுரி என்ற பெயர் பெற்றது. பின் நாளடைவில் புதூர் என்று மாறி, பின் ராமானுஜர் அவதரித்தனால் ஸ்ரீபெரும்புதூராக மாறியது.

தோஷம் நீங்கும் ஆலயத்தின் விசேஷம்; ராமானுஜர் என்பவர் ஆதிசேஷனின் மறுபிறவிகளில் ஒன்றாக பிறந்து பெருமாளின் உடனிருந்து, அவறை என்றுமே பிரியாதிருப்பவர். ஸ்ரீராமர் காலத்தில் லக்ஷ்மணராக பிறந்து அவருடனே இருந்து உதவி புரிந்தவர். அதே போல ஸ்ரீ கிருஷ்ணர் காலத்தில் பலராமனாக பிறந்து கிருஷ்ணருக்கு உதவி புரிந்தார். 

இக்கலிகாலத்தில் ராமானுஜராகப் பிறந்து பெருமாளுக்கு தொண்டு செய்தார். அவரைப் பற்றி கூறிக் கொண்டிருந்தால் ஒரு கட்டுரையே பத்தாது. ஆக ஆதிசேஷணனின் அவதாரமாக பிறந்த இவரை வணங்கினால் ராகுவினால் ஏற்படும் மாங்கல்ய தோஷம், புத்தர பாக்கியமின்மை மற்றும் கேதுவினால் ஏற்படும் வாதக்கோளாருகள் போன்ற காலசர்ப்ப தோஷங்கள் நிவர்த்தியாகும்..
Previous Post
Next Post

0 Comments: