அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோவில்
மாவட்டம் : கடலூர்
இடம் : விருத்தாசலம்
முகவரி : விருத்தாசலம், கடலூர்.
தாலுகா : விருத்தாசலம்
வரலாறு : அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில், கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ள சைவ சமய சிவன் கோவிலாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.
சிவபெருமான் முதன்முதலில் இங்கு மலை வடிவில் தான் தோன்றினார் என்றும், இந்த மலை தோன்றிய பின்பு தான் உலகில் உள்ள அனைத்து மலைகளும் தோன்றியது என்றும், திருவண்ணாமலைக்கும் முந்திய மலை என்றும் புராணங்கள் கூறுகின்றன.
தல வரலாறு :
இத்தலம் முன்னொரு காலத்தில் குன்றாக இருந்தது. விபசித்து முனிவர் முத்தா நதியில் மூழ்கி இரவு திருக்கோவிலில் தங்கியதால் அருள் கிடைக்கப்பெற்று திருப்பணி செய்யும் பேறு பெற்றார். இத்திருக்கோவிலில் தலமரமாக உள்ள வன்னி மரத்தின் இலைகளை திருக்கோவிலின் திருப்பணியின்போது விபசித்து முனிவர் தொழிலாளருக்கு வழங்க அந்த இலைகள் அவர்களின் உழைப்பிற்கு ஏற்றவாறு பொற்காசுகளாக மாறியது என்றும் மரபுவழியாகப் பேசப்பட்டு வருவதாகும்.
இத்தலத்து ஈசனான முதுகுன்றப்பெருமானை பாட மறுத்துச் சென்ற சுந்தரரை இறைவன் தடுத்து ஆட்கொண்டு தன்னை பாட வைத்து பன்னீராயிரம் பொன் கொடுத்ததோடு அல்லாமல் 'மணி முத்தா நதியில் அவற்றை போட்டு திருவாரூர் குளத்தில் எடுத்துக்கொள்' என்று சொல்ல, சுந்தரர் பொன்னை பெற்றுக் கொண்டார் என்பது தல வரலாற்றுச் செய்தி.
தல சிறப்பு :
இந்த கோயிலின் மிக முக்கிய சிறப்பு 5 என்கிற எண்ணாகும். இந்த கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது.
63 நாயன்மார்கள் சிலை காண்பதற்கு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அது வரலாற்றின் சிறப்பை உணர்த்துகிறது.
இக்கோவிலின் தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது. இந்த மரம் பல ஆண்டுகள் ஆகியும் இன்றும் உயிருடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. கோவில் வெளிப்பிரகாரத்தில் 22 ஆகம லிங்கத்திற்கு தனிசன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலில் குரு சன்னதிக்கு அருகில் விநாயகர் சிலைக்கு முன்பு பாத வடிவில் பலிபீடம் இருக்கின்றது. இது பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி என்றும் கூறப்படுகிறது.
பிரார்த்தனை :
இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது.
இத்தலத்து துர்க்கையம்மனை வழிபடுவோர்க்கு கல்யாண வரம் கைகூடப் பெறுகிறது. மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.
இருப்பிடம் :
உளுந்தூர்பேட்டையிலிருந்து 23 கி.மீ. தூரத்திலும், கடலூரிலிருந்து 60 கி.மீ. தூரத்திலும், சிதம்பரத்திலிருந்து 45 கி.மீ. தூரத்திலும் திருத்தலம் அமைந்துள்ளது.