பிரிய வேண்டி இருக்கின்றது...
நீ விட்டுச் செல்லும்
தடயங்கள் அனைத்தும்
நீண்ட நாள் எம்மோடு
உயிர் வாழ வேண்டும்...
கற்பித்துச் செல்லும்
பாடங்களெல்லாம்
கடைசி வரை எம்மோடு
பயணிக்க வேண்டும்...
உயிர்ப்பித்த
வணக்கமெல்லாம்,
இனியும் எம்மில்
உண்மையாய் தொடர வேண்டும்...
படைத்தவனோடுள்ள
நெருக்கம் - இன்னும்
பற்றுடன் அதிகரிக்க
வேண்டும்...
அலங்கரிக்கப்பட்ட
நற் செயல்களெல்லாம்,
அப்படியே நம்மை
ஒட்டிக் கொள்ள வேண்டும்...
ரமழானிய மனிதர்களாயன்றி
நாமனைவரும்
ரஹ்மானுக்கு உரியவர்களாய்
மாற வேண்டும்...
எம்மை விட்டுச் செல்லும்
இனிய ரமழானே!
எதிர்பார்ப்புடன் காத்திருந்திருப்போம் நாமிங்கு...
மீண்டும்...
உன் வருகைக்காக....
நல்லெண்ணங்களை
நாள் தோறும்
கூட்டக் கற்றுத் தந்தாய்!
தப்பபிப்பிராயங்களை
தவறாது தினமும்
கழிக்கக் கற்றுத் தந்தாய்!
கொடைளிப்பதினால்
கோடிகளைப்
பெருக்கக் கற்றுத் தந்தாய்!
அனுபவத்தினால் அனைத்தையும்
அழகிய முறையில்
வகுக்கக் கற்றுத் தந்தாய்!
விடை தெரியா
வினாக்களுக்கு- சில
சூத்திரங்கள் கற்றுத் தந்தாய்!
சில ஏற்ற இறக்கங்களை
சிறப்பாய் மதிப்பிட
வரைபுகள் கற்றுத் தந்தாய்!
உண்மைகளை நிச்சயமாய்
உறுதிப்படுத்த
தேற்றங்கள் கற்றுத் தந்தாய்!
சந்திக்கும் சவால்களை
சரிசெய்ய - பல
சமன்பாடுகள் கற்றுத் தந்தாய்!
வாழ்க்கை வட்டத்தினை
வரையறுத்துக் கொள்ள
நேரத்தைக் கற்றுத் தந்தாய்!
தெரியாதவற்றை
தெளிவாக அறிந்திட
தெரியாக் கனியங்களைக் கற்றுத் தந்தாய்!
வாழும் காலத்தினை
வடிவாய் அமைத்திட
அமைப்புக்கள் கற்றுத் தந்தாய்!
கற்றவையனைத்தும்- வாழ்க்கை
காலத்தில் உதவுமென்பதை
திறம்படக் கற்றுத் தந்தாய்!
நமக்களிக்கப்பட்ட
நாட்கள் முடிவுற்று விடும்.
உலகத் தொடர்புகள்
உறுதியாகத் துண்டிக்கப்படும்.
இறுதி மூச்சுக் காற்றும்
உறுதியாய் வெளியேறி விடும்.
கடைசியாய் நம்
கண்கள் இறுக மூடப்படும்.
உன்னைச் சுற்றி
உறவுகளின் அழுகுரல்கள் கேட்கப்படும்.
குடும்பத்தின்
குமுறல்கள் வெளிப்படும்.
அடக்கத்திற்கான நிகழ்வுகள்
அவசரமாய் முன்னெடுக்கப்படும்.
கழுவித் துடைத்து
கடமைகள் நிறைவேற்றப்படும்.
வெள்ளைத் துணி கொண்டு
வெகு அழகாய் அணிவிக்கப்படும்.
ஆறடிக் குழி தோண்ட
ஆயத்தங்கள் நடைபெறும்.
நம் உடலை ஏந்தியவாறு
நம் உறவுகள் புறப்படும்.
இவ்வுலக வாழ்வின்
இறுதிப் பயணம் தொடங்கப்படும்.
மண்ணறைக்குள்
மனித உடல் அடக்கப்படும்.
சம்பாதித்தவை அனைத்தும்
சப்தமின்றி நின்று விடும்.
நல்லமல்கள் அனைத்தும்
நம்மோடு வந்து விடும்.
நிலையான தர்மங்கள்
நிச்சயமாய் கை கொடுக்கும்
நல்ல குழந்தைகள் நமக்கு
நன்மைகளை ஈட்டித் தரும்.
மகத்தான உலக வாழ்வு
மண்ணறை வாழ்வை அழகாக்கித்தரும்.
மற்றவர்களின் மரணம்
மனிதர்களுக்கு படிப்பினை தரும்.
பறக்கச் சொல்லும்
உலகம்...
குரல்வளையை நசித்துவிட்டு
பாடச் சொல்லும்
அவலம்...
வண்ணங்களை கலைத்துவிட்டு
வரையச் சொல்லும்
கேவலம்...
உணர்வுகளைத் தகர்த்துவிட்டு
வாழச் சொல்லும்
கோலம்...
படைத்தவனின் முன்
படைப்புக்கள் வெறும்
ஜாலம்...
நம்பிக்கையுடன் - வீர நடைபோடு உனக்கும் வருமொரு
காலம்...
_______
நீண்டதோர்
இரயில் பயணத்தில்,
நினைத்தும் பாராத - ஓர்
இரம்மிய சந்திப்பு...
காற்றைக் கிழித்த
இரயிலின் வேகம்,
காணக் கிடைத்த
இயற்கையின் எழில்.
சாதாரண
மக்கள் கூட்டம் - சிறு சிறு
சலசலப்புகள்
மனதை கலைத்தன.
'இஸ்ஸொ வடை'
வியாபாரியின் சத்தம்
இரயின் சத்தத்தை விட
வியாபித்து ஒலித்தது.
மிதி பலகையில் நின்று
பயணத்தை இரசித்த நான்.
மிதந்து வந்த குளிர்காற்றின்
பக்கம் திரும்பினேன்.
யன்னலோர
இருக்கையில் அமர்ந்து
கன்னத்தை ஒரு கையில் தாங்கி
இயற்கையை இரசித்துக் கொண்டிருந்தாள் அவள்.
கண்டதும் காதல் என்பதை
காவியங்களில் மட்டுமே
படித்து
பரிகசித்திருக்கின்றேன்.
ஆனால்,
அவளைக் கண்டதும்
பட்டாம் பூச்சிகள் பல
பறக்கின்றன.
மாநிறம் கொண்ட
மங்கையவள்.
பச்சை நிறச் சுடிதாரில்
பளிச்சென்று இருந்தாள்.
கருமை நிறக் கூந்தல்
காற்றுடன் விளையாட,
கோபம் சிறிதுமேயின்றி
கோதி விட்டுக் கொண்டிருந்தாள்.
அருகில் இருந்தது
அம்மாவாய் இருக்க வேண்டும்.
கதை பேசி, சிரித்ததும்
கன்னங்கள் குழி விழுந்தன.
என்னை அவள் பார்க்க
என்னாலான முயற்சிகள் செய்தேன்.
பல நிமிட நேரத்தில்
பலனும் கிட்டியது.
விழிகள் சந்தித்தன.
வித்தியாசமான உணர்வது.
அவளினுள்ளும் அது
அதிர்வை ஏற்படுத்தியிருக்கும்.
பார்வைகள் தொடர்ந்தன
பரவசமாய் இருந்தது.
இரயில் பயணமும்
இரம்மியமாய் தொடர்ந்தது.
வினாக்கள் பலதை செய்கைகளாலே
வினவினேன்.
மௌனமாகவே
மெதுவாய் தலை அசைத்தாள்.
காகித சீட்டொன்றில்
கவனமாய் எழுதினேன்,
என் பெயரையும்
என் தொடர்பிலக்கத்தையும்.
அப்போது நான்
அறிந்திருக்கவில்லை - என்
காதலும்
காற்றோடு சங்கமமாகுமென்று.
மடித்த காகிதத்தோடு
மனது நிறைய காதலோடு,
நேரம் பார்த்திருந்தேன்
நேரடியாய்க் கொடுத்து விட.
அம்மாவின் கை கோர்த்தபடி,
அடுத்த நிறுத்தத்தில்,
இறங்கிப் போவாளென்று
இம்மியளவும் நினைக்கவில்லை.
கடைசியாய் அவள் பார்த்த
காதல் பார்வை
ஆயிரம் வருடங்கள் அவளோடு
ஆனந்தமாய் வாழ அழைத்தன.
அன்றிலிருந்து இன்றுவரை
அவள் பயணித்த இரயில்
அவளைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்.
என்றாவது ஒரு நாள்
அவளின் துணைவனோடேனும்
என்னைக் கடந்து
அவள் செல்வாளென..
உலகத்தின் கதாநாயகியாய்
தென்படுவாய்!
நீ நடக்கும்
சாலைதோரும்,
நீ தேவதையாய்
உலா வருவாய்!
செவ்விதழ் அசைத்துப்
பேசினால், அனைத்தும்
செந்தாமரையாய்
மலரக் காண்பாய்!
அர்த்தமுள்ள உன்
செயல்களை,
அகிலமே போற்றக்
காண்பாய்!
உன்னைக் காதலித்துப் பார்.....
உருண்டையான உலகம்
உள்ளங்கையில் இருப்பதை
அறிவாய்!
தன்னம்பிக்கையுடைய உன்
ஆற்றல்களில் - ஓர்
தனித்தன்மை இருப்பதை
புரிவாய்!
திடகாத்திரமான உன்
எண்ணங்களில்
திறமைகள் பல ஒளிந்திருப்பதை உணர்வாய்!
மற்றவர் புண்படாத உன்
நடத்தையினால், சிறந்த
மங்கையாய்
மிளிர்வாய்!
உன்னைக் காதலித்துப் பார்.....
கனத்த இதயமும் கூட
பஞ்சாக மாறி
பரிதவிக்கும்
உன் புன்னகையில்...
ஆயுள் கற்பித்த
ஆழமான காயங்களும்
கணப்பொழுதில்
காணாமல் போகும்
உன் புன்னகையில்...
வலிகள் தந்த
வடுக்கள் அழிந்து
நெஞ்சறைக்கூடும்
நெகிழ்ந்து போகும்
உன் புன்னகையில்...
அகிலத்தின் அனைத்து
அல்லல் தரும் விடயங்களும்
தொலைதூரமாய்த்
தொலைந்தே போகும்
உன் புன்னகையில்...
எல்லாம் மறந்து
எல்லாம் துறந்து
அள்ளிக் கொஞ்சி
அணைக்கத் தோன்றும்
உன் புன்னகையில்...
________
ஓர் ஞாயிற்றுக் கிழமை
ஒரு வேலை நிமித்தமாய்
வெளியே சென்றிருந்த
வேளை...
எதிர்பாராத விதமாக
எதிர் கொண்டேன். என்
கல்லூரித் தோழியொன்றை
கண்ணெதிரே!
இரண்டு ஆண்டுகள் என்னைவிட
இளையவள்
எனக்கு முன்பே திருமணம்
என்ற பந்தத்தில் நுழைந்தவள்.
பள்ளிப் பருவத்திலேயே
படுகெட்டிக்காரி அவள்.
அறிவோடு சேர்த்து
அழகையும் ஒருங்கே பெற்றவள்
இப்போது மிகவும்
இளைத்துப் போயிருந்த தேகம்
அவளை அடையாளப்படுத்தவே
அவஸ்தைப்பட்டது.
இடையிடையே எட்டிப் பார்த்த
இளநரை - வாழ்க்கையின்
வடுக்களை
வரைந்து காட்டியது.
சாதாரண சில
சம்பாஷணைகளின் பின்னர்
கவலையோடு அவளது
கதையைப் பகிர்ந்துகொண்டாள்...
பருவ மங்கை அவளை
பள்ளிப் படிப்பின் பின்
மணமுடிக்கவென
மணமகன்கள் முண்டியடிக்க
தந்தையின் வியாபாரப்பங்குதாரரின்
தமையன் - ஒருவனே
திருமணம் முடிக்கவெனத்
தீர்மானிக்கப்பட்டான்.
ஆரம்ப வருடங்கள்
ஆனந்தமாகக் கழிந்திட
குழந்தைச் செல்வமும் வாழ்வை
குதூகலப்படுத்தியது.
காலங்கள் உருண்டோடின
கணவனின் நடத்தை மாற்றம்
போதைப் பொருளுக்கு
போதையாகிவிட்டதை உணர்த்தியது.
குடும்பத் தலைவன்
குடியில் வீழ்ந்தால்,
வீட்டின் நிலைமையை
விவரிக்கவா வேண்டும்?
தலைவன்
தடம்புரளும் போது
எல்லாம் சரியாகிவிடும் என
எப்படி எண்ணிக் கொள்வது?
தீய நண்பர்களின்
தீண்டல்களும்,
அவனின் நடத்தைக்கு
அளப்பரிய பங்காற்றியது
வீட்டிற்கு வெளியே இருந்து வரும்
வித்தியாசமான பழக்கங்கள்
அவ்வப்போது வீட்டினுள்ளும்
அரங்கேற்றப்பட்டன.
சண்டைகளும் சச்சரவுகளும்
சகிக்க முடியாத வார்த்தைகளும்
பச்சிளம் குழந்தைகளின் முன்னே
பழக்கப்பட்டுப் போயின.
முக்கிய சில குடும்பத்தினரின்
முன்னே
கலந்தாலோசிக்கப்பட்டு
கருத்துக்களும் பெறப்பட்டன.
மருத்துவர்கள், மனோதத்துவ நிபுணர்கள் என
அனைவரின் அறிவுரையும்
அணுகப்பட்டது.
காலம் சரிசெய்யும் எனக்
காத்திருப்பதில் பயனில்லை. தான்
திருந்த வேண்டுமென
திடகாத்திரமாய் முடிவெடுக்கும் வரை...
வாழ்க்கை முழுவதும்
வதைப்படுவதா?
துணையைப் பிரிந்து தனியே
துன்பப்படுவதா?
முடிவெடுக்க முடியாது
முடக்கப்பட்டவளாக இன்று
காலத்தைக் கழிப்பதாக
கண்ணீரோடு கூறி முடித்தாள்.
இப்போதை எத்தனையோ
இல்லங்களின்
மகிழ்ச்சியை
மறக்கடித்து விட்டது.
இப்போதை பல இலட்ச
இளசுகளின் எதிர்காலத்தைப்
பாரபட்சமின்றி
பாழாக்கிவிட்டது.
போதும் இந்தச் சமூகச் சீர்கேடு.
போதையற்ற
உலகொன்றை அழகாய்
உருவாக்கிட
அறிவு ஜீவிகளின்
அறிவுரைகளுடன்
ஒன்றாய்
ஒன்றிணைந்தால்,
எதிர் காலச் சமூகம்
எம் அனைவரையும்
காலம் முழுதும் நன்றிக்
கண்ணோடு நோக்கும்.
மனம் கொண்ட
மனிதன் வாழும்
மண்ணில்,
மழையில் நனையும்
மஞ்சட் குஞ்சுகளை
மழைத்துளி அணைக்காது
மரித்திட்ட உன்
மனம்
மகத்தானதடா!
==================
கரம் பிடித்த நாள் முதல்
கடைசிக் காலம் வரை
கண்ணே நாம் பட்டதில்லை
கடுகளவும் கோபம்...
வாழ்க்கைப் படிகளில்
வறுமையை உணர்ந்தபோதும்
வாடி வதங்கவில்லை நம்
வதனங்கள் எப்போதும்...
ஓட்டுக் கூறை வீட்டில்
ஒற்றுமையாய் வாழ்ந்தபோதும்
ஒரு நாளும் செய்யவில்லை
ஓர் ஆடம்பக் கோலம்...
உறவுகள் சிலபோது
உருக்கமாய்ப் பேசியபோதும்
உடைந்து போகவில்லை நம்
உள்மனம் எப்போதும்...
விருந்தோம்பல்,
விட்டுக்கொடுப்பினால்
விலகியோர்,விரும்பியோர் யாரும்
விட்டதில்லை நமக்கு சாபம்...
துன்பங்கள் வந்து
துயரங்கள் தந்த போதும்
துளியளவும் நாம்
துவண்டு விடவில்லை இப்போதும்...
பல பிள்ளைகள் பெற்று
பக்குவமாக வளர்த்தெடுத்து,
வடிவாக அவர்கள்
வாழ்வதே நமக்கு வீரம்...
ஆடம்பர வாழ்வொன்றை
ஆசைப்படாத போதும்
ஆத்ம திருப்தியோடு
ஆனந்தமாய் வாழ்ந்ததே போதும்...
முதுமை நம்மை
முழுவதுமாகத் தழுவியபோதும்
முழுமையாய் உள்ளது நாம்
முதற் கொண்ட பாசம்...
உங்களை காண்பதே- ஓர்
மனமுருகும் காட்சி!
நீங்கள் கடந்து வந்த
பாதைக்கு - உங்கள்
கரங்களே சாட்சி!
தங்களைக் கலங்க வைத்த
உள்ளங்களுக்கு
இல்லை மனச்சாட்சி!
கலங்க வேண்டாம் தந்தையே
படைத்தவனிடத்தில் என்றும்
உங்களுக்கில்லை வீழ்ச்சி!
வீதியோரங்களில் நடந்த
காலங்கள்
கடந்துவிட்டன..
தோள் சாய்ந்து
தோழமை கொண்டாடிய
தருணங்கள்
தொலைந்துவிட்டன..
கதை பேசிக்
களிப்புற்ற நாட்கள்
பரந்து விட்டன..
வருகைக்காக
வாசலோரம் நின்ற நேரங்கள்
மறைந்து விட்டன..
தந்தையே!
உங்கள் விரல் கோர்த்து
உற்சாகமாய்,
உங்களோடு
சுவனத்துப் பாதைகளில்
சுற்றி வரும்
காலத்திற்காக காத்து நிற்கின்றேன்.
கடினமான வார்த்தைகள்
பலநூறு வருடங்களுக்கும்
பலமாகக் கொல்லும்!
விழிகள் சிந்திய நீரெல்லாம்
விரக்தியாகிப் போக
கண்கள் பாலைவனமாக
காய்ந்தே போகும்!
இன்னல்களையே சந்தித்த
இதயத் தசைகள் சற்று
களைப்பாரும்
காலம் வரும்!
ஆழமான பெருமூச்சுக்களுக்கு
அடிமையான நுரையீரல்களில்
சில காலத்தின் பின்
சிக்கல்கள் தோன்றும்!
பயத்தினால் குலை நடுங்கி
பலமுறை நடுநடுங்கி
உதிரம் உடம்பினில்
உறைந்தே போகும்!
அவமானத்திற்குல்
அகப்பட்டுக் கொண்ட
நாடி நரம்புகள் எல்லாம்
நலிவடைந்தே போகும்!
பாசம் வைத்து
பரிதவிக்கும் என்
அன்பினை
அறியும் போது,
உனக்காக சேமித்த என்
உண்மைக் காதலை உணரும் போது
நீ அழைக்கும் தூரத்தில்
நானிருக்க மாட்டேன்!
------------------------------------------
சம்பிரதாயச்
சடங்குகளாக மாறும்
பெண் பார்க்கும் படலம்.
மறு ஜென்மம் வரை
மாற்றங்கள் பலதோடு
தொடரும் அவலம்.
வறுமைக்கு மத்தியிலும்
வடிவாக வரவேற்கும்
இனிய தருணம்.
பல குறை தேடும்
பார்க்க வந்தோரின்
சில பல வசனம்.
அறிமுகமற்றோரின் முன்
அழகிய வெட்கத்தில்
மணமகளின் வதனம்.
பக்கத்து வீட்டுப்
பட்டாம் பூச்சிகளெல்லாம் வந்து
எட்டிப் பார்க்கும் புதினம்.
இனிப்புப் பலகாரங்களோடு
இரண்டறக் கலந்துவிட்ட
உறவுகளின் சலனம்.
அனைவரின் மத்தியிலும்
அணுஅணுவாய் அளவெடுக்கும்
உறவுக்காரியின் கவனம்.
முடிவுகள் இறுதியில்
முழுமையாக இருக்க,
வேண்டி நிற்கும் நிமிடம்.
குமரிகளைக் கரை சேர்ப்பதோ
குடும்பத் தலைவனுக்குப்
பெரும் கடினம்.
ஏழைப் பெண்களின்
ஏக்கக் குரல்கள்
எப்போது வரை தொடரும்?
உலகைக் காண்.
உள்ளம் தொலை.
விதிப்பதில்லை தடை.
பரவசம் அடை.
இயற்கையோடு சிரி.
மனதை விரி.
கண்கள் திற.
கவலை மற.
நல்லதே நினை.
உனக்கில்லை வினை.
உள்ளதைக் கொடு.
மனதைத் தொடு.
காட்டாதே பெருமை.
வராது என்றும் சிறுமை.
மற்றவரைத் தூற்றி.
கிடைப்பதில்லை வெற்றி.
கைவிடாத முயற்சி.
வைக்கும் உன்னை உயர்த்தி.
கண்மணியே!
உலகத்தை முழுமையாய்
உன்னால் திருப்திப்படுத்தி
வாழ்வை நீ
வடிவமைக்க முடிவதில்லை.
படைப்புக்களை விட
படைத்தவனை - நீ
திருப்திப்படுத்திப் பார்
தித்திக்கும் உன் வாழ்க்கை.
ஒட்டு மொத்த சரிகளிலும்
ஓரிரு தவறுகளை மட்டுமே
கண்டு - பிறரைக்
காயப்படுத்தும் காலமிது!
வளர்ச்சிகளை
வாழ்த்துவதை விட
வீழ்ச்சிகளுடன் களிப்புற
விளையாடும் காலமிது!
குற்றமென்றே பார்ப்பவர்
குறை சொல்லித் திரிகையில்
தலை நிமிர்ந்து நின்று
தன்னம்பிக்கை கொள்...
எரியும் கற்களை
எதிர்த்து நின்று
படிக் கற்கலாக்குவதும்,
பாராங்கற்களாக்குவதும் உன்கையிலே!
உடைந்து போகாதே - நீ
உண்மையாக இருக்கும் வரை
தோல்விகள் உன்னைத்
தொடப்போவதில்லை.
மலிவான விலையில்
செப்பமாய் என்னை
செதுக்கிக் கொண்டேன்.
பசுமை நிறைந்த
பரந்த வயல்வெளிகளிலே
இயற்கையோடு சேர்த்து
இன்பம் கண்டேன்.
காற்றடித்த போதெல்லாம்
களிப்போடு நின்று
மேலே செய்வதிலேயே
மோகம் கொண்டேன்.
தலை(க்)கனம் எனக்கு
தன்னகத்தே இல்லாததால்,
உயரப் பரப்பதில்
உச்சம் தொட்டேன்.
மழை மேகம் என்னை
மறைந்திருந்து பார்க்கையில்
பக்குவமாய் சற்று
பதுங்கிக் கொண்டேன்.
சூராவளிகள் சிலபோது
சுழற்றிப் போட்ட போதும்
தன்னம்பிக்கையோடு நான்
தனித்து நின்றேன்.
வானுயர வைத்த
வண்ண நூலினை விட்டால்,
திக்குத் திசையறியாது
திண்டாடிப்போவேன்.
இலக்கைத் தொட்டாலும்
இன்பம் அடைந்தாலும்
நான் எப்போதும் நூலிற்கு
நன்றி மறவேன்.
காகிதமென்று என்னைக்
கசக்கிப் போட்டோரையும்,
அண்ணார்ந்து பார்த்து
அதிசயிக்க வைத்தேன்.
எளிமை நிறைந்த
என் வாழ்கையில்
பார்ப்போருக்கு நல்ல
படிப்பினை தந்தேன்.
இப்படிக்கு,
பட்டம்.
உயர்த்திப் பார்ப்பதும்,
இல்லாதவனை
இழிவாகப் பார்ப்பதும்,
நிலையாக அனைத்தும்
நிலைத்திருக்கும் என்பதினாலா?
கணப்பொழுது போதும்
கரைந்து போக,
நொடிப்பொழுது போதும்
நொருங்கிப் போக,
அற்ப நேரம் போதும்
அழிந்து போக,
பதுக்கிப் பார்க்காதே
பகிர்ந்து பார்..
அள்ளிக் கொடு
அனைத்தும் பெறுவாய்!
மனிதா என்றும்
மறந்து விடாதே!
எதைக் கொண்டு வந்தாய்?
எதைக் கொண்டு செல்ல?
பெருமை சூட்டப்பட்ட
அன்னையின் அருகிலிருக்கும்,
அப்பாக்களின்
பெருமை எப்போதும்
பெரிதாகப் பேசப்படுவதில்லை.
அப்பாக்களின் தியாகங்கள்
அட்டைப்படங்களில்
கண்கவர
காட்சிப்படுத்தப்படுவதில்லை.
பக்குவமாக மறைக்கப்பட்ட
பலநூறு வலிகள்
கவிதைகளால்
கணிக்கப்படுவதில்லை.
சிரிப்பின் பின்னால்
சிறைப்பட்டிருக்கும் காயங்கள்
வசனங்களால்
வடிக்கப்படுவதில்லை.
உழைப்பின் இறுதியில்
உறைந்து போன வாழ்வு
மேடைகளில்
மேலோங்கப் புகழப்படுவதில்லை.
வாழ்க்கை முழுதும் சுமந்தும்
வளைகாப்பு வேண்டுமென்று
ஒருபோதும் நம்
ஒருத்தரையும் கேட்டதில்லை.
சரியான நேரத்தில்
சற்றும் சளைக்காது
ஒரு ஹீரோவாக அவர்கள்
ஒத்துழைக்கத் தவறியதுமில்லை
சுகமான ஒரு
சுமை தாங்கியாகி,
அலுவல்களில் ஒருபோதும்
அலுப்படைந்ததுமில்லை.
செப்பமாக நமக்கு
செய்துதந்த வேலைகளை,
சொந்தங்களுக்கு மத்தியில்
சொல்லிக் காட்டியதுமில்லை.
தந்தைக்கு நிகராக
தரணியில்
எமக்கு இனி
எவரும் கிடைக்கப்போவதுமில்லை.
#poems #tamil #father #poem #தமிழ்
வானத்திற்கும், பூமிக்கும் எல்லைகளின்றி பனிப்போர்வையினால் உலகம் தன்னை இழுத்து மூடிக் கொண்ட ஓர் தருணம்.
உடம்பிலுள்ள கலங்களனைத்தும் குளிரினில் உறைந்து போயிருந்தாலும், இயற்கையினை இரசித்துப் பருக, பச்சைப் பசேலென்ற புற்களின் நடுவே ஓர் ஒற்றைப் பாதை.
அணு அணுவாய் அளவெடுத்து ,கை தேர்ந்த வல்லுனர்கள் பல சேர்ந்து அச்சுப் பிசகாது செய்த மனிதனின் படைப்புக்கள் அனைத்தும் இறைவனின் கை வண்ணத்தின் முன்னால் வெறும் பூச்சியமே....
0 Comments: