ஞாயிறு, 1 ஜனவரி, 2023

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 1/1/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 1/1/23
இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 1/1/23

கொஞ்சம்
பொறு பணமே...!

நீ
எப்போதுமே
சாரதிதானென்பதை
தப்பாமல்
உனக்கு உணர்த்துகிறேன்...!

ஒளிந்துகொண்டு
தேடவிடும் 
நில்லாமூச்சி விளையாட்டில்
நீ 
மட்டுமே
வெல்வாயென்றால்
பிதா நான்
பின்வாங்கியா விடுவேன்...?

நீயும்
தேவதாசி வழிவந்ததாலோ
நியாவான்களை
நெருங்க நடுங்குகிறாய்...?

கையாளத்தெரிந்தவன்
வீட்டு
கடிக்கும் நாய் நீ
எனக்கும்
தெரியவே தெரியும்
உன்னை
வேலைக்காரனாக்கும் 
தந்திர வித்தை...!

பகலிரவு பாராது
புலம்பும் மானுடமே...!

சாகும் போதுகூட
சலிப்பதேயில்லை
நத்தை
வாழ்க்கையை பாரமென்று...!

சோம்பேறிகளே
உங்களுக்கு
ஆறாம் அறிவும் வீணே...!

என்னில்
புரட்டவேப்படாத பக்கங்களில்
எத்தனை சுவாரஸ்யம்
வரி வரியாய்
நீ
வாசித்தப்போது
எனக்கும்
ருசி ருசியாய் சுவைத்தது...!

புழங்கப்படாது
பூட்டியேக் கிடக்கும்
பூவையின் மனவறைக்குள்
எத்தனை புழுக்கம்...!

பெண்ணுள் ஏற்படும்
எல்லா
கதகதப்பும் இதமாவதில்லை
ஓர்மையில் நிகழும்
சிலவை
உயிருக்கு மாட்டிய கடிவாளம்...!

நானுமறியாத
என் 
தேவைகளை 
தேடி
தெரிந்து தெளிந்து
தீர்த்துவைக்கும் நீ யாரடா...?

கண நேரம்
கடவுளை நம்பவைக்கும்
நீ
எவ்வாறு
நாத்திகனாகக்கூடும்...?

நீதி
நிர்க்கதியாய்
நிற்கிறது
நீதிமன்றங்களுக்கிடையில்...

எந்த

நீதிமன்றத்தில்
நீதி கிடைக்கும்
என்று புரியாமல்
நிலை குலைந்துபாேய்...

செலவழிக்கப்படாத
புனிதங்கள்
ஒருபோதும்
பூரணமெய்தியதில்லை...!

அவ்வாறிருக்க

நீயேன்
உன் கஞ்சக்கிடங்கிற்குள்
யாவையும்
துருபிடிக்கச் செய்கிறாய்...?

சூன்யமான
ஞானம்
சூட்சியென்றாகிறது

அடக்கி வைத்த
பேரன்பு
பைத்தியம் தரிக்கிறது

வெளிர
வாய்ப்பிழந்த காதல்
பகலிலும்
வெறிபிடித்து
பாவியென்றாகிறது

அத்தனை
மென்மையும்
அடக்குமுறையால்
புரட்சிக்குள் புகுந்து தீவிரமாகின..!

தன்னுள்ளேய
தவம் நிறுத்தப்பட்ட பருவம்
சுயபயனின்றி
தன் வெறுப்போடு
தரித்திரப்படுத்திக் கொள்கிறது...!

செலவுகள்
செலவின்றி போனால்
வரவுகளும்
இருப்புகளும்
பிறவிப்பயன் எய்துவதெப்படி...?

ஆசையை
செலவிட்டு
பேரானந்தத்தை பெற்றுக்கொள்...!

யாவற்றையும்
வெறுத்த
புத்தனும்
முக்திமீது
மோகமுற்றே கிடந்தார்...!

யாரடி நீ
சாளரத்தின் இடுக்கிடையே
கசியும்
ஈரக்காற்றாய்
பிரவேசித்தாய்...!

பாய்ந்த மின்சாரம்
முழுவதையும்
தனதாக்குவது மாதிரி

உபரியேயின்றி
அபகரித்துக் கொண்டாய்...!

உன்னாவல் தீர
எரிமலையும்
விழுங்க விரைகிறது
மனம் 

நீ
தேவதைகளின்
தேர்ந்த தோழி

கண்களில்
பருவத்தின் நவரசம்

இதழ்களின்
ஈரம் 
மன்மத பழரசம்

நயனம்
பேராவலின்
பிரளயம்

வழக்காடுவது
பணிதான் கண்களுக்கும்...!

வனப்புகள்
கொஞ்சம் கூடினால்
எட்டித்தொட்டுவிடும்
பேரழகின் எல்லையை...!

சிலநூறு
ரோஜாக்களின்
கூட்டணியா வதனம்...?

என்னையும்
அவ்வப்போது
பார்க்கச் சொல்லுவது
எழிலின்
நூதனம்

கொஞ்சநேரம்
பார்த்திருந்தால்
எழுதிவிடுவேன்
உனதுபெயரில்
ஏக புதினம்

உயிரில்
ஒளிந்து கொண்டு
கண்களால்
எட்டி எட்டிப் பார்க்கிறாய்...!

எடுத்துக் கொள்
உயிரை
உன் மனதைவிடவா
இனிய
அரியணை
இருந்துவிட முடியும் அகிலத்தில்...

நீ
என்னை
உற்றுநோக்கி
உன்
பிம்பம் பார்க்கிறாய்
பிறகு
என்னிடம் சொல்கிறாய்
உன்னை
விரும்புகிறேனென்று
உண்மையில்
எனக்குள்
உன்னையே நீ
விரும்புகிறாய்...!

எப்போதும்
பொங்கி பூரித்தெழாமலிருக்கும்
அன்பு
அவ்வப்போது
இறந்து கொண்டிருக்கிறது

செப்பிடு வித்தைக்காரி
அனேகம்
சிநேகம்
கொல்கிறாள்...!

பொழுதுபோக்கிற்காக
உயிரெடுக்கும்
எமனுக்கு
ஜீவ மகத்துவம்
தெரிந்திருக்க
வாய்ப்பேயில்லை தான்...!

நீர்மத்திற்குள்
தீயை மறைத்து 
வைத்திருக்கும்
மண்ணெண்ணையாய்
நீயிருப்பதில்
மனத்தாங்கல்
தாங்கவே முடியாமல்...!

அதிகம்
கடைந்தால்
அமுதே நஞ்சாகுமாம்
நேசம் எம்மாத்திரம்...?

சுமப்பவனின்
வலியை
பல்லக்கில்
அமர்ந்திருப்பவன்
என்றறிந்திருந்தான்...?

நேசத்திலும்தான்...

சுதி பேதங்களுக்கும்
விதி பேதங்களுக்கும்
கதியாகியா நிற்கும்
நய உள்ளடக்கம்...?

கல்லெறிந்தாலும்
கத்தியெறிந்தாலும்
நாதம்
தருவதைத் தவிர
பேதங்கள் தெரியவில்லை
இசைக்கும் வாத்தியத்திற்கு...!

தடுமாறும் கால்
விழவைத்து விடுகிறது
மொத்த மெய்யையும்...!

அழுத்தம்
வலிக்கத்தான் செய்கிறது
யாது செய்வேன்
அழுதழுதும்
இனிக்கச் செய்வதே
என்
பிறவிக்கடன்...!

என்னை
விரும்பியவரே
சிராய்து சிராய்து
சிலுமிஷம் செய்து
பெரு மகிழ்வு 
பெறத் துடிக்கிறார்...!

ஒருவேளை
அவருக்கு
தெரியாதிருக்கக்கூடும்
அவரின்
வேட்கைகளில்
துடித்து நெளியும் எனது தாகம்...!

நீ
பூக்களையே எறிவதாக
இருந்தாலும்
பொறுமையாக எறி
நீ
எறிவதே வலிக்கிறது...!

உன் பதில்
எனக்கு அவசியமில்லை
நான்
காதலித்துக் கொண்டே இருப்பேன்...!

முகமூடி குறித்து
மாெத்தமாய் 
விவாதிக்கப்படுகிறதே

அப்படியானால்
முகத்தின் முக்கியத்துவத்தை
முகமூடி
நெருங்குகிறதா,  
முந்திவிட்டதா...?

இல்லை
ஆக்கிரமித்து விட்டதா...?

அழும் நிழல்
=============

என்ன
ரணங்களாே தெரியவில்லை
என் பிம்பத்திற்கு
என்னைப்பாேலவே
விம்மி
வேதனையுற்று
முகம்
மூடிக்காெள்கிறது...!

நல்லுறக்கமும்,மகிழ்ச்சியும்
ஏழ்மையிடம் மட்டுமே
வாழ்க்கைப்பட்டு
ஏவல் செய்து
கிடக்கிறது...!

மனித 
மதிப்பீடுகள் மாறி
மனிதனை அளக்கும்
அளவுகாேலாக
பரிணாமித்து நிற்கிறது பணம்...!

எல்லாவற்றையும்
தனதாக்கும் எத்தனிப்பில் 
பேரம் பேசாமல்
வாங்குகின்றது உலகத்தை...!

என்னுடைய
வெற்றி
யாரோ ஒருவருடைய
தோல்வி

என்னுடைய
தோல்வி
யாரோ ஒருவருக்கு
வெற்றி

இதில்
என்னுடையது
என்னவிருக்கிறது
முயற்சியைத் தவிர...?

நீயென்ன
சொல் சூப்பியாடி...?

சொன்னதையே
திரும்ப திரும்பச்சொல்கிறாய்

வந்துகொண்டேயிருக்கும்
விருந்தினரும்
சொல்லிக் கொண்டேயிருக்கும்
சொல்லும்
பொருள் நீர்த்து போகின்றன...!

ஆனாலும்
அழகாய்த்தானிருக்கிறது
ம்ம்ம் க்குள்
ஒளிந்திருக்கும் காதலும்...!

ஆனந்தத்தை
ஆண்டு பார்த்துவிடவே
வேண்டுமென்ற
ஆழ் மனத்தேவையை
உன்
மோகமுடுத்திய
கண்கள் 
மொழிந்து கொண்டேயிருக்கின்றன...!

நம்மை
பந்தாட வேண்டுமென்று
களம்
வழி மொழிந்தபின்
ஆட்டத்தை
அலைக்கழிப்பது பேதமையல்லவா...?

வெல்லும்
வல்லையுள்ளவள்
தள்ளி நின்றால்
ஆட்டம் எவ்வாறு சூடுபிடிப்பது...?

ஏறுவதைவிட
இறங்குவதை கடினப்படுத்தும்
இந்த காதல்
பூகோள விதியையே
புறக்கணிக்கிறது...!

பாதைமேடையின் ஓரத்தில்
உறங்குவன்
நந்தவனத்தில்
வாசம் செய்கிறான்
நித்திரைக் கனவுகளில்...!

பஞ்சு மெத்தையின்
நடுவில்
படுத்துறங்குபவன்
பாதாளப் பேய்களின்
பயமுறுத்தலில்
தூக்கம் தொலைக்கிறான்...!

அச்சுறுத்தலில்
கழியும் காலத்தை விட
அனுபவித்து
நிறையும் காலம்
நிம்மதியாய் இருக்கும் வரை

வாழ்வின்
நிதர்சனத்தில்
நான்
எவ்வாறு
நம்பிக்கை இழக்க இயலும்...?

முகம் சுளித்து
நிற்கிறது மொட்டு
பூக்களே
பத்திரம் தரியுங்கள்...!

கானங்களால்
சூழப்பட்டிருக்கும்
என்
ஆகாயத்தில்
நிசப்தங்கள் பேசுவது
யாருக்கும் கேட்பதில்லை...!

மௌனத்திற்கு
ஓலமிட 
தெரிவதேயில்லை
முஹாரியில் மூழ்கினாலும்,
ஆனந்த லஹரியில்
ஆர்ப்பரித்தாலும்...!

அவர்களை
ஏன் தேடுகின்றீர்கள்...?

அவர்கள்
அவர்களாகவே
அவர்களை 
தொலைத்துக்கொண்டவர்கள்...!

வேண்டாம்
தேடும் முயற்சியில்
உங்களையும்
தொலைக்க வைத்துவிடுவார்கள்...!

வேதம் சொல்கிறது
தேடல்
அர்த்தமற்றது
தெளிவு
பொருள் பொதிந்தது
விட்டுவிடுங்கள்
கழித்தலில்
ஒருபோதும் வரவு இல்லை...!

வானத்தின் தாரைகள்
தேவதைகளின்
கண்ணீரில்லை
ஏன்
தேவதைகளுக்கு கண்ணீரேயில்லை...?

ஒரே ஒரு வலி
கூறிச்செல்கிறது
வாழ்வின் 
அத்தனை மர்மங்களையும்...!

நம்மை
இறுக்கும் முடிச்சுகளெல்லாம்
ஏதோ கவனத்தில்
நாம்
கட்டிய கட்டுக்களே...!

எமன்
கையிலிருப்பதற்கு
பெயர் கூட
பாசக்கயிறுதான்...!

குறிப்பிட்ட
காலத்திற்கு பிறகு
அப்பா
முத்தம் கொடுப்பதை
நிறுத்திக்கொண்டார்...!

என் குழந்தைக்கு
நான்
முத்தம் கொடுக்கும் போதெல்லாம்
அப்பாவின் முத்தம்
அவசியப்படுகிறது எனக்கு
நிறுத்திக்கொண்ட பிறகும்
அப்பாவிற்கு
தேவைப்பட்டிருக்கக் கூடும்
எனது முத்தம்...!

வனம்
வருந்தியென்ன பயன்
நரிகளை வளர்த்த
குற்றத்திற்காக...?

மனப் புழுக்கத்திற்கு
விசிறி விடக்கூடும்
கவரிமான்களின் காலடித் தடங்கள்...!

அரணாக மாத்திரமல்ல 
பதுங்குக்குழிகள்
ஆபத்தின்
பெட்டகமாகவும் கூட...!

போர் யுக்திகள்
சன்னியாசியின் வீரத்தை
என்ன
செய்துவிடும்...?

பாவம்
மூளையின் ராஜதந்திரம்
நிராயுதபாணி
மனதிடம்...!

சிந்திக்க வைக்காத
கவிதை மாதிரி
சந்தித்த நினைவுகள்...! 

பிறந்தவுடன் அழுவது
பசியால் அல்ல
சிசுவிற்கும் வலியுண்டு
பிரசவத்தில்...

தோள் தருகிறேன்
கொஞ்சம் 
இளைப்பாறிக் கொள்
கொஞ்சம் மடிகொடு
களைப்பாறிக்கொள்கிறேன்...! 

நாமே
நமக்கு துணை
நாளையின் கைகளில்
நமக்கான வேளை...! 

இன்றின் அழுத்தத்தில்
புடம் போடப்பட்ட 
நாம்
நாளையின் தோள்களில்
மாலையாய்...! 

எரிமலைகளையே
தின்றுவிடும் நெஞ்சுரம் 
இந்த
நெருக்கடிகள் 
எவ்வாறு செய்யும்
நம்மை சோரம்...! 

உயரமென்பது
ஏறுவது மட்டுமன்று 
வளர்வதும் தான்...! 

தேவதையின் உள்ளங்கையில்
புதுயுக வெதுவெதுப்பு
காதலின் நாட்குறிப்பில் 
சுகயுக கதகதப்பு...!

கண்ணீரும் அழகு
==================

உன்
கண்ணீரும் அழகாயிருந்தது
நம் காதலுக்காக
நீ
அழுதபாேது...!

கொஞ்சமிரு காதலே...!

என்னமோ தெரியவில்லை
காமம்
அவசர அவசரமாக
அழைக்கிறது

போர்முரசதேதும் முழங்கிவிட்டதோ
புரியவில்லை
அடங்காத
ஹார்மோன்ஸ்களை
வதம் செய்து
வருகிறோம்...!

பிறகு
நாம் விளையாடுவோம்
ஆதவ வெளிச்சத்தில்
ரொசெட்டாக்களை
கோலிகளாக்கி
சந்திராட்டத்தை...!

தண்ணீர் அறிந்திருக்கிறது
என்
விடாய்த்துக் கிடக்கும்
தாகங்களை...!

எல்லாவற்றையும் அறிந்திருப்பதாய்
என்
நினைவுகளிடம்
பிரசங்கிக்கும்
நீ...!

என்
தேவைகளின்
நாடித்துடிப்பை
தெரிந்திருக்காததேனோ...?

பவித்திரமென்றும்
புனிதமென்றும்
பழுதுபட்ட
பாட்டையெல்லாம்
பண்ணோடோ பாடுகிறாய்...!

உன்னதனே
உனக்கு தெரியுமாடா...?

கசங்காத
பூக்களெல்லாம்
நரக
பயணிகளென்பது...!

வெறும் சொற்களிலேயே
வாழ்ந்து கிடக்கும்
அன்பு
எவ்வாறு
இன்ப முக்தியெய்தும்...?

என் 
தேவைகளையும்
உன்
தேவைகளையும்
சந்திக்க விட்டு
நம் தேவைகளாக்கு...!

எதிர்பார்ப்பு
விரக்தியாகி
வெறுப்பாகி
சினமாகி
சின்னா பின்னமாவதும்
விகித வித்தியாசம்
கொண்ட புரிதலால்தான்

தேவைகள்
வாழ்வின் அவசியம்
அவசியங்களே
வாலிபத்தின் தர்மம்

தர்மம் மீறாமல்
அதர்மம் செய்வோம்
மன்மதனின்
நெறிகளுக்குட்பட்டு...!

மனதின் மகிமைகள்
போதும்
உறுப்புகளின்
உன்னதம் உணர்வோம்...!

பேரானந்த வெளிக்கு
சிறகு கொடுக்காத
காதல்
தார்மீக தகுதியிழக்கிறது.
Previous Post
Next Post

0 Comments: