சில நூறு கேள்விகளுக்கு
நேர்த்தியாய்
நிறைவாய்
ஒரே பதிலை
உதிர்த்துச் செல்லும்
உன் புன்னகையில்
பிரமித்து நிற்கிறேன்...!
சப்தங்களால்
என்ன செய்துவிட முடியும்...?
நிசப்தமாயிருந்து
தன்னையே
ஜீரணித்துவிடும் மௌனத்திடம்...!
இடிகளென்ன
மேகத்தை விட
பலசாலிகளா...?
சூறாவளியால்
வியர்வை விசிறிக்கொள்ளும்
மிருதுவானப்
பூங்கா நீ...!
உள்வாங்கிய
என்னை
உறவு கொள்ளாமல்
போகவும் விட்டுவிடுவாயா...?
ஆயுத எழுத்தாக்கும்
எத்தனிப்பில் நான்
பொதுவாக
என்னை போராளியென்கிறார்கள்...!
உயிர் விசிறிச்செல் காதலி...!
காதல்
ஸ்தம்பித்து நிற்கிறது
அவசர நெருக்கடியில்
உனையன்றி
எவர் உளர்
உள்ளத்தின் மொழியை
சொல்லாமல் புரிவதற்கு...?
துப்பட்டா
தொலைந்த நெஞ்சினால்
தூக்கிதான் நிறுத்தேன்
தொங்காமல்
விம்மி நிற்கட்டும்
முதலாவதாய் பம்மும்
என்
கம்பீர ஆத்மா...!
ஈவா வின்
மென் பாதச்சுடுகளில்
ஹிட்லரின்
கொடுஞ்சினம்
தளர்ந்து
இளைப்பாறிக்கிடக்கிறது...!
அணிவகுப்பாேடு சென்று
உண்மையிடம்
சத்தியப்பிரமாணம்
செய்துகாெள்கிறது கவிதை...!
கண் முன்பே
துளியும் கருணையின்றி
நீ
கொன்ற
நம் காதலை
தடுக்கத் திராணியின்றி
துடி துடித்து நின்றேன்
உன் மனைவிக்கும்
உனக்கும் எதிரில்...!
வாக்கும், சத்தியமும்
நிதி தூக்கி
வந்தவளைக் கண்டதும்
நினைவிழந்தே போயிற்றா...?
காலவதியானவனே
பொருள்கொண்ட
என் காதல்
பொருளின்றி
பொருளற்று போனதே...!
கண்ணகியல்ல
மதுரை எரிப்பதற்கு
மலர்விழி நான்
உன் மலட்டுக் காதலை
எரிக்கின்றேன்
என் திருமண எக்கியத்தின்
தீச் சுவாலையில்...!
வெட்கத்தை
அறுவடை செய்பவனே
என்னையும்
உன்
இதய பத்தாயத்திற்குள்
பத்திரப்படுத்திக்கொள்...!
பூவிற்கெதற்கு ஆபரணமென்று
என் நாணத்தை
நகைக்கும்
உன் குறும்பையும்
விரும்பவே செய்கிறது மனம்...!
நீ
மாயன்
ஆனாலும்
மந்திரக்காரனில்லை
சூட்சுமன்
ஆனாலும்
சூன்யக்காரனில்லை
உன்னை
தாண்டவே முடியாத
என்
எண்ணங்களுக்கு
நீ
யாது புரிந்து
எல்லையானாய்...?
திசுக்கள்
ஒவ்வொன்றிலும்
தினவு ஏற்படுத்துகிறாயே
உன்
பெயருக்குள்
எனதுயிரே
வசியப்பட்டுப் போகிறதே
யாரடா நீ...?
உன்னில்
நிறையாது
நான் எவ்விதம்
பூரணமெய்துவேன்...?
என்னுள்ளிருக்கும் பெண்மையை
எடுத்து எடுத்து
என்னிடம்
கொடுக்கிறாய்
அதை நானேவுனக்கு
நல்க வேண்டுமென்ற
நரித்தனமானடா...?
தடுக்கவும் கூடுமோ
நீ
மோட்சத்தை
அட்சதையிடும் போது...!
பனி விளிம்பிலிருந்து
ஆகாயம் நோக்கி
சாயும்
பாதாளம்
புலரிகள்
இருண்மையின்
அகோரத்தில்
அசூரத்துவத்தின் உச்சியில்
துறவு
எமனுக்கும் சிருஷ்டி
பிரம்ம கருமம்
அழுகை
ஆனந்தத்தின்
விலக்கு தினங்கள்
எதை என்னிடம்
வெளிக்காட்டுகிறதோ
அதையே
என்னால் காணமுடிகிறது...!
அன்பு
எதை என்னிடம்
அறிவிக்கின்றதோ
அதையே
என்னால் கேட்கமுடிகிறது...!
அன்பு
எதை என்னிடம்
போதிக்கின்றதோ
அதையே
என்னால் புலப்படுத்த முடிகிறது...!
அன்பைத்தவிர
நான்
அறிந்ததோ,
அறிவிப்பதோ,
உணர்ந்ததோ,
உரைப்பதோ ஒன்றுமேயில்லை...!
பேரிருண்மையிலும்
எனக்கு
வெளிச்சமுடுத்தி விடுவதும்
அன்பைத்தவிர
அடுத்தொன்றுமில்லை...!
தூரிகையை
தொட்டவர்களெல்லாம்
ரவிவர்மனுக்கே
ஆசிரியன் மாதிரி
அட்டகாசம் செய்வதைப் பார்த்து சிரிக்கின்றன
மதில் சுவற்றில்
அவசர அவசரமாய்
சிறுவன் பெய்துசென்று
சிறுநீர்த் தாரைகள்...!
மமதைக்கு மட்டும்
என்ன
மகத்துவமோ தெரியவில்லை
கால் வேக்காடுகளோடே
கால் கடுக்க
பயணப்படுகிறது...!
போகட்டும் போகட்டும்
பின்னே
அவர்களோடு
அறிவா துணைவரப்போகிறது...?
சப்பாணியின் வாய்க்காலா
சமுத்திரம்
எல்லா குரங்குகளும்
தாண்டி விடுவதற்கு...?
பீஷ்மரும்
வசிஸ்டரும்
பெற்ற
ஞான பேறுகாலம்
நாழிகைக்குள்ளா நடந்தது...?
கள்ளிலிருந்து
பாலை
பகுத்தெடுத்துவிடும்
அன்னப்பறவன்
நீ...!
என்
பால்தன்மையின்
பவித்திரம்
உணர்ந்ததில்
பரவசம் தான்...
வலியுறுத்தலின்
சுமை தாங்காமல்
வளைந்து கொடுக்கும்
அரைநிலை அபத்தமில்லையா...?
இசைந்து கொடுப்பதும்
கொள்வதுமே
இதம்
என்னில் என்னதான்
மீதமிருக்கிறது
நீ
ஊடுருவாமல்...?
தென்றலின் இதம்
புயலின் பலம்
நீ
உள்வாங்கி உற்சாகமுறும்
சூத்திரம்
பயல வேண்டாமா நான்...?
வருடி
வருடியே
உடைத்து விடுகிறாய்
துளியும் வலிக்காமல்
ரசிக்க ரசிக்க...!
இமியும் மீதமின்றி
எடுத்துக்கொள்
துளியும் குறைவின்றி
அன்புகொள்...!
ஏனெனில்
உன்னைவிடவும்
உனதன்பால் ஜீவனுறுகிறேன்...!
நானே பேசிக்கொள்ளும்
ஒரு
கூட்ட நெரிசலில்
தடயமேதுமின்றி
உன்னை
தொலைத்துவிட்டேன்...!
சந்தைவெளி
கூச்சல் குறைந்த பின்பும்
என்
மௌனத்தை மட்டும்
யாரோ
சப்தத்தில் கட்டிவைத்திருந்தனர்...!
அக்னிமழை
ஏன்
எரிமலை மீது
பெய்வதேயில்லை...?
எத்தனைப் பெரிய
முரண்படு மெய்ம்மை...
அதனாழமும் உச்சியும்
அதனுடைய
மையப்பகுதி
இருப்பதை விட
ஒவ்வொன்றிற்கு
மிக
அருகில் உள்ளது...!
மையப்பகுதி மட்டும்
நிசப்த அடத்தியோடே
நிலை கொள்கிறது
புரிந்துகொள்ளவே முடியவில்லை
இந்த காதலையும்
கடவுளையும்...!
என்னதான்
செய்துவிடப் போகிறோம்
புரிந்து
அனுபவித்து
ஆத்மா நிறையும்
அந்தாதியை விட்டு...?
அவசரமாய் வணக்கம்
அதனினும்
துரிதமாய் நலம் விசாரிப்பு
அதற்கான
பதிலைகூட
பார்க்கவொண்ணா பரபரப்பு
இத்தனை அவசரகதியில்
எங்கேயோடுகிறது
மானுடம்...?
புலியிடம்
தப்பிய மானாய்
எதற்கிந்த போர் ஓட்டம்...?
எதைத்தேடி
அல்லது
எதிலிருந்து தப்பிக்க...?
மரத்திலிருந்த
பழத்தின் பகுதியை
தின்றுவிட்டு
ஆசுவாசமாய் இறங்கிய
அணில்
என் படபடப்பின்மீது
செருப்பை எறிந்து செல்கிறது
நான் என்பதற்கு
மானுடமென்றும் பெயர்...!
செவியுறு காதலனே...!
நான் கூறியே
தொலைக்கவேண்டிய
உன்
கொடும் நிலைகளை
பாதுகாப்பென்று
கூறி
நீ போடும் வேலிகள்
என்
சுதந்திரத்தை ஊனமாக்குகின்றன
இப்போதுதான்
வந்தாய்
எப்போதுமிருக்கிறேன்
அக்கறையென்று கூறி
அச்சமூட்டுகிறாய்...!
நீ
பேசா நேரமெல்லாம்
என் அலைபேசி
நோம்பிருக்க
வேண்டுமென்கிறாய்...!
அம்மாவேயாயினும்
ஐந்து முறைக்குமேல்
அழைப்பு
காத்திருப்பிலிருந்தால்
அடுக்கடுக்காய்
தொடுக்கிறாய் வினாக்கள்...!
எதை நம்பவில்லை
சந்தேகனே
என்னையா
நம் காதலையா...?
எய்தமுடியாத போது
வலிய வலிய
பிரியம் செய்தாய்
இணக்கம்
கொண்டவுடன்
நலிய நலிய பேசுகிறாய்
சமரசமானால்
பெண்ணின்
நவரசம் போய்விடுமோ...?
உன்னிலும் உயர்வாய்
என்னை
எண்ணத்தோன்றினால்
காதல் கொள்...!
மாறின்
பெண்ணில்லா
பிரதேசத்தில் துறவுகொள்...!
என் கனவுகளை
யாராவது
கொஞ்சம் தாலாட்டி
உறங்க வையுங்களேன்...!
தொந்தரவு
தவத்திற்கு பெரிய இடையூறு
வரத்தை
அவசரம் சீர்குலைக்கிறது...!
திமிங்கலத்தின் மீது
வீடுகட்டி விளையாடும்
கனவுகளுக்கு
அடுப்பு மூட்டாதவரை
ஆபத்து இல்லை...!
உறங்காத களைப்பில்
நான்
வலம் வரும் அரண்
எங்கே
எதை சூழ்ந்து நிற்குமோ...?
பிரபஞ்சத்திற்கு வெளியே
யார்
காட்டிக் கொண்டிருப்பது
வேடிக்கையை
கனவுகள் கண்டு சிரிக்கும்
மகா
சுக கேளிக்கையை...?
மௌனம் கூட
நிசப்தக் கீற்றுகளை
அசைத்து அசைத்து
ஆனந்திக்கிறது...!
எவ்வாறு
உன்னில் நீ
மகிழ் துய்க்கிறாய்
நீயினுள்
எங்கும் வியாப்பித்திருக்கும்
நானும்
அறியா வண்ணம்...?
நேசானந்த குண்டலத்தில்
பஸ்பித்து பஸ்பித்து
பேரின்பனை
பூணுகிறாயா
மோகத் தீச்சுவாலையின்
ஈரத்தில்
குளிர்காய்ந்தபடி...!
அரங்கேறுகிறது
கறுப்பு தாம்பத்தியம்...!
காட்டுமிராண்டித்தனம்
வீரமென்று
அங்கீகரீக்கப்படுவது
பாேன்றே...!
உன்
பெயரையே சாெல்லிச்சாெல்லி
இரவெல்லாம்
என்னை
நச்சரிக்கும் இருளுக்கு
என்னடா காெடுத்தாய்
லஞ்சம்...?
கொடுக்கின்ற போது
பெறுகிறவரது முகத்தையும்
உதவியளிக்கின்ற போது
பெறுகிறவரது
சூழ்நிலையையும்
பார்...!
முகத்தின் மகிழ்ச்சியிலும்
சூழ்நிலையின் விடுதலையிலும்
அபூரண
தரித்திரத்திலிருந்து
பவித்திரம் பெறும்
மனித
பரிபூரணம் நோக்கிய
நீ
உன்னையே காணமுடியும்
சுய தரிசனத்தில்...!
ஒருபோதும்
பீத்திக்கொண்டதில்லை
உயிரின தாகத்தை
ஒருங்கே தீர்ப்பதில்...!
காற்று
ஒருபோதும்
பெருமிதம் பேசியதில்லை
ஜீவராசிகளுக்கெல்லாம்
உயிராவதில்...!
தீ
ஒருபோதும்
தற்பெருமை பேசியதில்லை
சேர்ந்ததையெல்லாம்
தனதாக்கிக் கொள்ளும்
பலத்தின் வல்லமைக்கு...!
வானம்
ஒருபோதும்
போற்று வாஞ்சை புரிந்ததில்லை
தர்மமே தனதான
தயாள குணத்திற்கு...!
பூமி
ஒருபோதும் புகழுரைத்ததில்லை
யாவற்றையும்
தாங்கி நிற்கும்
திட வலிமைக்கு...!
என்னிடம் மட்டும்
எவ்வாறு
எதிர்பார்க்கலாம் தோழி
எனது
உபரிகள் குறித்த
அபரிமிதத்தை...?
0 Comments: