ஈகையின்
கல்லறை மீது
தானம் வேண்டி
கையேந்தி நிற்கிறது செல்வம்
கருணையின்
சவ ஊர்வலத்தில்...!
சிறந்த கவிதைக்கு
மாற்று வடிவம்
தந்துவிடுகிறான் ஓவியன்
கோணல்மாணலான லிபியில்...!
செவி
சிலாகிக்க முடியாத
சிறுகுறை தான்
எனது பெரும்பசி
இதற்கு
உணவிட வேண்டுமென்பதுதான்...!
ஒரே நேர்க்கோட்டில்
நிறுத்த முடியுமா
கலைகளை
முரண்களின் முடிச்சை
எந்த
கவண் கொண்டு வீழ்த்த...?
இருளில் வரைந்த
ஓவியம் நீ...!
இனி
ஓவியப் பிதாக்களுக்கும்
உனை வரையும்
திறனில்லை...!
ஏன்
தீட்டியவனே
மறுமுறை தீட்டமுடியாத
அழகின்
சூத்திரம் நீ...!
வாழ்ந்தால் காழ்புணர்ச்சி
காெடுத்தால் புகழ்ச்சி
காெடுத்ததை கேட்டால்
வஞ்சப்புகழ்ச்சி
நாம் வென்றால்
அது சூழ்ச்சி
தாேற்றால் வந்துவிடும்
யாவர்க்கும் புத்துணர்ச்சி
இப்படியே சாெந்தங்களிருக்க
எவ்வாறு எய்துவது
மகிழ்ச்சி...?
யாவற்றையும்
செதுக்கச் சொல்கிறது
வடிக்கும்
எத்தனிப்பில்
கிறுக்கி விடுகிறேன்...!
காலம்
கரவொலித்தாலும்
எதிர்காலம்
ஏனோ
அகோர பற்களோடு
இளிக்கிறது
கடந்து செல்லும்
புலியை
செந்நாய் செருமுமே
அத்தகையில்...!
அங்கீகரிக்கப்பட்ட
நேற்றைய
கிறுக்கல்கள் தானே
இன்றைய எழுத்துக்கள்...!
உயிர்த் தொடும்
யுக்தியறிந்த கிறுக்கல்கள்
கால ஓவியமாய்
வாழ்ந்தே தீரும்...!
ஒளியை வைத்தே
பொழப்பு நடத்தும்
தீபத்தை மாதிரி
சில
ஞானவான்களின்
பெயர் சொல்லியே
பிழைக்கிறது காலம்...!
மிகச் சிறந்த
கருணையாளனா...?
ஆயின்
நிறைந்த
சிரமமாளனும் நீயே...!
ஈவென்பது
முள்கிரீடம்
வலிதாங்கும்
வல்லமை பெற்றவரையே
ரத்தக் கண்ணீர்
வடிக்கச் சொன்னது...!
சத்தியமும், இரக்கமும்
ஒட்டிப்பிறந்த
இரட்டை நல்லதங்காள்
பலி கொடுப்பதும்
பலியாகிப் போவதுமே
வாழ்க்கை தர்மமாக
வாய்க்கப் பெற்றவர்கள்...!
பனிக்கட்டியால்
அடுப்பெரிக்க வேண்டிய
அவலமும்
அனுபவித்தே
நிறையும் போலிருக்கிறது
இரட்டை நல்லதங்காளின்
நிலையும்...!
எத்தனை பிடிக்குமோ
அந்த பிரியமே
உன்னிலிருந்து
தூரப்படுத்திக்கொள்ள
காரணியாகி நிற்கிறது...!
நானொரு
ஈரப்போர்வையை
போர்த்தி நடக்கும் அக்னிப்பறவை
இருந்தும் நீ
துருவ பிரதேசத்துக்காரன்...!
ஒருவேளை
உன்னிலேயே
உறைந்து போவேனோ
எப்போதும்
ஐயமெனக்கு...!
நீ
நீர்த்திவலைகளை
பொழிந்தாலும்
தீச்சுவாலைகளை
எறிந்தாலும்
என்னுள் என்னவோ
தித்திப்புகளே பூக்கின்றன...!
நீ
பெண்களின்
நாடித்துடிப்பை
பிசகில்லாமல் பிடிக்கத்தெரிந்தவன்
அதனாலேயே
என்
படபடப்புகளும்
பாடாய் படுத்துகின்றன...!
என்னதான் என்னுள்
தோள் சாய்ந்து
உயிர் கலந்துவிட வேண்டுமென்ற
பரிபாலன ஈர்ப்பா...?
இல்லையாயென்பதும்
தெரியவேயில்லை
எது
எப்படியோ
உன்னை எதிர்கொள்ள
நேராவிட்டால்
காதலை
நான் சந்தித்திருக்கமாட்டேன்...
என் உற்சாகம்
சற்று
சோம்பல் முறித்துக்கொள்ளட்டும்
என்
கனவுகள்
சந்தித்ததேயில்லை
இப்படியொரு
பேரின்ப பேரிடரை...!
பின்னடைவு ஏற்படாமலிருக்க
கவிதைகளுக்கு
முன்னேற்பாடு
செய்துகொள்கிறேன்...!
அப்பாவிகள்
எக்காலத்திலும்
மறுதலிக்கப்பட்டவர்களே
ஏனெனில்
நீதிகள்
காலம் நெடுகிலும்
அநீதிமான்களாலேயே
ஆட்சி செய்யப்பட்டிருக்கிறது...!
விடுதலைகள் அனைத்தும்
விடுதலையாவதற்கு
முன்பேனும்
விடுதலை பெறுமா
விடுவிக்கவே முடியாத நீதி...?
ஏன்
என்னுயிர் எனக்கு
துணை நிற்பதேயில்லை...?
விரயமாகிப் போகிறார்கள்
நளாயினிகள்
கூகூல் குமாரர்களுக்கு....!
நல்ல கவிதைகள்
மின்னலை விடவும் அதிவேகம்
பிடிக்க
தகுதியில்லாதவரை
திரும்பிக் கூட
பார்ப்பதில்லை...!
பொறியில் பூதாகரம்
கண்டவனுக்கே
சுண்டுவிரல் கொடுக்கின்றன...!
ஆயுளேயின்றி தரிக்கின்றன
தாங்கியவனின்
உயிர் வாங்கி
நித்தியம் கொள்கின்றன...!
பனித்துளிக்குள்
படுத்துக்கொண்டு
சூரியனையே மிரட்டுகின்றன...!
எளிதில் நிறைவதில்லை
பல்லாயிரம்
தாய்களை தின்று
சிலவைகளே
பரமாக்கிரமம் பெருகின்றன...!
பசியை
கர்ப்பம் சுமக்கச்சொல்லி
பாடாய் படுத்துகின்றன...!
சாதாரணத்திற்கு
ஆயுளில்லையென்பதால்
அநுமன் பலமாவது
அடிப்படை
அவசியமென்கின்றன...!
புரிந்து கொள்ளத்தான்
வேண்டியிருக்கிறது
சிலநூறு
பூகம்ப அதிர்வுகளை
புலனடக்கி
தன்னில்
பூவாய் வைத்திருக்கும்
ஒவ்வொரு
கவிதைகளையும்....!
சறுக்காதவன்
எப்படி
வாலிபனாய் இருக்கக்கூடும்...?
தேடி ஓடுகிறது மனிதகுலம்
வாழ்விலும்
உறவிலும்,
நட்பிலும்...!
பலூனைப் பார்த்த
குழந்தையின் மனநிலையாேடு...!
என்னிடம்
மூர்க்கமாய் முரண்டுபிடிக்கிறது
உன் பெயரை
தவிர்த்து
பிறிதாென்றை
எழுத எத்தனிக்கிற பாேது...!
இதயச்சுவற்றில்
ஆங்காங்கே
உன்னழகு குறித்து
நீ வரைந்திருந்த
நேச கிறுக்கல்களையெல்லாம்
வெள்ளையடித்துக் காெண்டிருக்கிறாள்
என் செல்லமகள்
சின்னச்சின்ன
புன்னகைகளால்...!
இலகுவாய் அனுமதித்தேன்
இத்தனை கனக்கிறதே...!
காதலென்ன
மென்மையா,
வன்மையா...?
எடை
இழக்கச் செய்து
எனை
பறக்க வைப்பதில்
மென்மைதான்
என்னையே
பாரமாக்கி
தன் சுமையையும்
என்மீது வைப்பதால்
வன்மைதான்
உண்மையும்
பொய்யுமாய்
மாறி மாறி நிற்கிறது...!
பொய்
நிர்வாணமாய் திரிகிறது
மெய்
ஆடையணிந்து கொள்கிறது...!
ஏக சுகமாகவும்
எல்லா வலியாகவும்
நேர்
எதிரெதிராய் நிற்கிறது...!
எப்படித்தான்
கையாள்வது...?
எதிர்ப்பதங்கள்
கைகோர்ப்பதால் தானே
எல்லா
ஜனனங்களும் நிகழ்கின்றன...!
ஆம் காதலி
நாமும்
ஒத்த உணர்வுள்ள
நேரெதிர் தானே...!
உன்
ஞானத்தை
தீட்டிக்கொண்டேயிரு...!
மாறின்
ஏதோவொன்றில்
அதிசயித்து
அதோடே லயித்து
சயனித்துப்போவாய்...!
உன்னடையாளம்
அறவே
மறக்கடிக்கப்படும்
சுயம்
ஜொலித்து மிளிரத்தெரியாத
எதன் பெயரையும்
காலம்
சுலபமாக
தொலைத்துவிடுகிறது...!
உன்னையொரு
அபாரம்
கடத்தியாகவே
அடையாளம் கொள்...!
தில்லை நடராஜனாகு
அரங்கங்கள்
அது அதுவாகவே
முளைக்கும்
சஞ்சீவி மூலிகையுண்டே
பிறக்கும்
உன் படைப்புகள்
காலத்தை
கைத்தாங்கலாய்
அழைத்துச் செல்லட்டும்...!
உகந்ததை
உலகத்தின் மீது
எறிந்து கொண்டேயிரு...!
மீதம்
எதுவுமில்லாத போது
உயிரையும்
உலகத்தின் மீதே
விட்டெறிந்து
சென்றவர்கள்தான்
உன் மூத்த உத்தமன்கள்...!
வீணை
மௌனம் கலைப்பதேயில்லை
நீயும் தான் காதலி...!
எல்லைகளை
கடந்து
இன்பம் துய்ப்போம்
அதையே
காதலுக்கு
வரம்பாக வகுப்போம்...!
வாழ்க்கையின்
எச்சங்கள்
பின்னொரு நாளில்
தத்துவங்களாவது மாதிரி
போதும் போதும்
நம்
காதலின் பாரத்தை
கட்டிலில்
இறக்கி வைப்போம்
சுமந்து தான்
மகிழட்டுமே மஞ்சமும்
நம்மோடு
காதலின் பாரத்தையும்...!
காதலுக்கும்
கடவுளுக்கும்
எவர் விதிப்பது நியதி...?
அகல
நீளங்களோடு
அவைகளே
அவதரித்துக் கொள்கின்றன
அநுமானங்களில்
அவைகள்
கட்டுண்டு போவதில்லை...!
வாடி நேசகியே
நித்தியத்தை
அநித்தியம் நாம்
அனுபவிக்க முற்படுவோம்...!
ஏன் வந்தாய்...?
என்று
கேட்கத் தாேன்றுவதேயில்லை...!
அது
எதிரிக்காகவும்,
துராேகிக்காகவும் வரும்பாேதுகூட...!
பிரசவிக்கும் சிப்பி...?
ஈதென்ன விந்தை
மாணிக்கத்தை
ஈன்று
மடியில் அமர்த்தியிருக்கிறது...!
ஓடாதீர்...!
அது
வெறிநாய் மாதிரி
விரைந்து விரட்டும்
நின்று எதிருங்கள்...!
நிலைகுலைந்து
நிர்மூலமாகும்
அல்லது
நிவாரணம்கூறி
நில்லாமல் செல்லும்...!
நின்று செல்லடி எழிலழகியே...!
அழகு
காத்துக்கிடக்கிறது
உன்னை காண்பித்து
தன்னை
அடையாளப்படுத்த...!
ஒரு வார்த்தை
பேசித்தான் செல்லேன்
சங்கீதம்
தன்னை
சிக்கெடுத்துக் கொள்ளட்டும்...!
பார்த்துநட
வனப்பு
வழிந்துவிடப்போகிறது
வாங்கிக்கொள்ள
நந்தவனம்
பூக்களேந்தி ஏங்கி நிற்கிறது...!
கிளியோபாட்ரா
பூங்கொத்தை தாங்கி நிற்கிறாளாம்
உன்னை தரிசித்து
ஆத்மா
நிறைந்து போக...!
என்ன
கொடுமையடி
என்னிடம் அடங்காத
என்
சில கவிதைகளும்
உன்னிடம்
மயங்கி நிற்கின்றன...!
வென்று விடுவேனென்று
எதிர்காலம்
இனி
தம்பட்டயடிக்கவே முடியாது
அழகின் விடயத்தில்...!
காதலைத் தவிர
வேறெதையும்
எனக்கு
காதலிக்கவே தெரிவில்லை...!
அதனாலோ என்னவோ
காதலுமென்னை
அவ்வாறாய்
காதலிப்பதுமில்லை...!
என்ன
இயற்கையின் நியதியிது
ஓடிச்செல்வதன்
பின்னாலேயே
உயிர் வலிக்க ஓடுகிறது மனம்...?
இருக்கட்டும் இருக்கட்டும்
நான்
வெறுக்கும் தினத்திலாவது
என்னை
நினைக்காமலா போகும்
இந்த
லூசுபிடித்த காதல்...?
சத்தமில்லாமல்
சபித்தாயா காதலி...?
என் வானம்
விடியாமலே கிடக்கிறதே...!
ரட்சிப்பினாலேயே
மீட்சியென்கிறது
காதல் வேதாந்தம்
ஓடிவந்துகொண்டிருக்கிறேன்
வாசல் திறந்து வை
உயிர்நிலைகளை
பரவசமாக்கிக் கொள்வோம்...!
இப்படி சிரிக்காதே
உன் நாணம்
மீண்டும் வதைக்கிறது
உன்
விரியெழு
குகைக்குள்ளேயே
சிறைபட்டுக்கிடப்பதே
இந்த
சிங்க ராஜாவிற்கு
பெரு சுதந்திரம்...!
பிருந்தவனமென்பது
வேறென்னடி
நீயும் நானும்
சேர்ந்திருக்கும்
ஒருமையைத் தவிர...?
எந்த மீனையும்
சாக விடுவதில்லை
சாகரம்...!
வீட்டு வாசலில்
விட்டுச்செல்கிறேன்
கவிதைகளை
அழைத்துக்கொள்வதும்
அழைத்து வருவதும்
உனக்கான அவகாசமே...!
நீ
வரும்வரையோ
அல்லது
நான் வரும்வரையோ
காதலின் துணையோடு
கடக்கச்செய்வோம்
காலத்தை...!
அல்லல்
பட்டுத்திரிய விடாமல்
அரவணைத்துக்கொள்
என்னிலும்
கவிதைகள் அப்பாவிகள்...!
இடைப்பட்ட தூரத்தில்
ஏதேதோ
இருப்பதாய் உளறுகிறாய்
மெய் சிலிர்த்து
நிற்கும் காதலை
மெய்யாக
என்றுதான் உணர்வாய்...?
அணுக்களுக்கெல்லாம்
அருவி நீராட்டும்
உன்
பொய்கை நேசத்தை
பொய்யென்று பிழைபுரியும்
மெய்யற்றவனா
நான்...?
வாடி நேசகியே
மகிழ்ந்து மகிழ்ந்து
நெகிழ்ந்து போவோம்
நெகிழ்ந்து நெகிழ்ந்து
ஒன்றாய்
உறைந்தே போவோம்
இரண்டில்
என்னதான் இருக்கிறது
ஒன்றைவிட
உயர் உல்லாசமாய்...?
காதல்
நீ
ம்ம்ம் சொன்னதும்
உனக்கும்
இனித்ததே உணர்ந்தாயா...?
கொலை
உன் தார்மீகத்தில்
தர்மமில்லை
இருக்க
எவ்வாறு கொல்லக்கூடும்
நம் காதலை...?
நாம்
சம்மதித்து கொண்டதில்
காதல்
ஒன்றாகிப் போனதை
கண்டாயா...?
வாடி காதலி
சுண்டி
அழைப்போம்
சொர்க்க மோட்சத்தை
எமையின்றி எய்தவும் கூடுமோ
ஆனந்தத்தை
அவைகள்...?
மன்மதனையும்
காழ்ப்படையச் செய்யோம்
மகிழ்ந்து மகிழ்ந்து
குதூகலித்து...!
வாழ்க்கையென்றிருந்த
நம் காதலை
எழுப்பிய
கவிதைகளுக்கு
கௌரவம் செய்வோம்...!
நமக்கு முன்
சங்கமித்து மகிழ்ந்ததும்
அவைகள் தான்
கவிதைகளை
நாம் உருவாக்குவதாய்
கூறித் திரிகிறோம்
நம்மையும்
நமக்கு காண்பித்து
ஆராவாரமின்றி
அமைதியாய் ஆனந்திக்கின்றன
கவிதைகள்...!
நம்
ஏக்க பிரதேசங்கள்
விடாய்த்துக் கிடந்ததை
கிள்ளி
ஞாபமூட்டி
கிளர்ச்சியுறச் செய்ததும்
அவைகளல்லவா...!
தாமதித்து
தாமதித்தே
காலம் தாழ்த்தியது போதும்
கவிதைகள் அடிப்பதற்கு
கைத்தடி
எடுக்கும் முன்பு
கலந்து நிறையோம்...!
கடமையாற்றி
கழிவதா
உறுப்புகளின் பொறுப்பு...?
இன்பத்தின் உச்சத்தை
எட்டுவதல்லவா
அவைகளின் சிறப்பு...!
கடன் வாங்கும்
அத்தனைப் பெண்களாலும்
அதை
தமதாக்கிக்கொள்ள
முடிவதில்லை...!
தமதாக்குவது தாரகம்
அதில் நீ
பூரணம்...!
உன்னை
சொந்தம்
கொள்ளக்கூடுமெனும் போது
எதற்காக
உனைக் கோர வேண்டும்...?
நான்
கோருவதால்
நீ
அந்நியப்படுவதை
எங்ஙனம்
சகித்துக்கொள்ளும்
நம் ஈர நேசம்...?
நேர்க்கோட்டில் பிரயாணிக்கும்
நம் பந்தம்
நித்தியத்துவத்தின்
இதயத்தை
தொட்டுத் தொட்டு
மகிழ்கின்றது...!
நம்
இருவருக்கும்
திரையாக
காதலே நிற்கிறது
ஒவ்வொரு நாளும்
தன்னை
புதுப்பித்துக்கொண்டே
நம்மை
பூரணப்படுத்த முயல்கிறது
நிர்வாணக் காதல்...!
நம்
ஆலிங்கனத்தின்
நடுவில்
எத்தனை நிசப்தமாய்
நின்று
நம்மை நிர்மானிக்கிறது
காதல்
ஆத்மாவின் ஏட்டில்
உயிரின் கரங்களால்
எழுதப்பெற்ற
பிரம்மத்தின் வார்த்தையே
காதல்...
0 Comments: