வியாழன், 5 ஜனவரி, 2023

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 5/1/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 5/1/23
இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 5/1/23


வாசித்துவிட்டு
நகர்ந்து விட்டேன்
மகளுக்கு
மிதிவண்டி பழக்கிக்கொடுக்கும்
மாசற்ற தகப்பனாய்
பின்னோடோடியே வருகின்றன
சர்வத்தின்மீது
நீயெறிந்து சென்ற
சாசுவதக் கவிதைகள்...!

நான்
பாக்கியசாலியென்பதில்
எப்போதுமே
கொஞ்சம் 
உன் வள்ளல்தனம்...!

இனம் யாவும்
வைத்துக்கொண்டு
இனத்தின்
பெயர் கூறுவது
குற்றமென வாதிக்கும்
அரசாங்கம் மாதிரி...!

பொங்கி வழியும்
மோகங்களுக்கு
பெயர் கூறவே
பிரிதோர் ஐயமுனக்கு...!

நேச பருவத்திற்கு
நியதியெல்லாம் கற்பிக்கிறாய்...!

படுபாச பறவைகளுக்கு
வானம்கூட
எல்லையில்லை...!

மறுமொழி கூறியே
நீ
மறுதலிக்கும் உன்மனம்
உன்னை
வென்று தின்ற பின்னும்
வியாக்கியானம்
பேசுகிறாய்...!

புனைவுகளில்
பொருத்திப் பொருத்தி
பார்க்கும்
உனதாசைகள்
என்னிடம்
உன்னை நகைக்கின்றன...!

எந்த 
பூவினால்
மகரந்தத்தை
மடியினுள் மறைத்துவைக்க
முடிந்தது...?

வாடி
போகப் புயலே
உன்
பருவம் முழுவதையும்
என்மீது
கொட்டி எரிக்கிறாய்...!

எரிந்து எரிந்து
ஈரமாகும்
என் 
ஆண்மையின்
அவஸ்தை ரசிக்கிறாய்...!

நீயென்ன
கந்தகத்தின் வயிற்றில்
பிறந்தவளா
எண்ணினாலே
தீ 
மூளுகிறது தேகமெங்கும்...!

உன்னைக் கண்டால்
விசுவாமித்திரனின்
பாட்டனும்
வீரியம் கொள்வான்

பொலிகாளை 
நிலையுள்ளவன்
எவ்விதம்
பொறுமை காப்பேன்...?

நீ
மட்டுமென்ன
நீர் எருமையா...?

அரேபியன் குதிரையென்பதற்கு
உறுப்புகள்
ஒவ்வொன்றும்
சாட்சி...!

பூகம்ப வேளையிலும்
வான்கோழி
கலவி கொள்ளுமாம்
பேரின்பச் சூழலிலும்
பின்வாங்குதல்
ஏனோ...?

வா
ஆடி ஆடி களைப்போம்
களைத்து 
களைத்தும் ஆடுவோம்...!

எங்குமே நிற்காத
மனது
ஒரு புள்ளியில்
லயித்து
திளைத்து நிற்கிறதே
அச்சிறு புள்ளியில்
பெரிய எழுத்துக்களில்
உன்
பெயரெழுதப்பட்டிருக்கிறதே
அந்த 
சொர்க்க முக்திதான்
காதலா...?

தாய்மடி
தேடி நிற்கும்
என் 
தாளாத சூழ்நிலைகளிடம்
நீ 
வாய்மொழிகூட பேசுவதில்லை...!

எப்போதும்
உன்னிடம் புழக்கத்திலுள்ள 
ஒரே
சுப்ரபாதம்
புரிந்துகொள்ளவில்லை

புரிந்துகொண்டதாலேயே
உயிர்
உன்னிடம்
புகலிடம் பூண்டதை
மறுபிறவியிலாவது
மறுமொழியின்றி ஏற்பாயா...?

கண்டுகளித்தலின் 
சுகம்
எண்ணி சுகிக்கையிலும்
இருக்கப் பெறுமேயானால்
நாமென்பது
ஒன்றாகிவிட்டதை
உறுதி செய்யுமாம்
அவ்வாறே 
நீள வேண்டுமா ஆயுள்...?

எனக்கு மட்டும்
இல்லாமலா இருக்கிறது
துயிலை
தூங்க வைத்துவிட்டு
இரவெல்லாம்
விழித்து
களித்திருக்கும்
நம் ஞாபக நினைவுகள்...?

ஒரு வரம்
கிடைத்துவிடாதா
தேவைகளேயற்ற தீவில்
நாம் மட்டும்
திரிந்து திரிந்து
நம்மை நாமே
நிரப்பி நிறையும் 
நித்தியானந்த நிலை...?

படைத்தவனின்
பரமபதத்தை 
வாசகன் ஆடிவிட்டால்
கவிதை
வாசகனுக்கானது...!

பனிமலையின்
கதகதப்பில்
சூரிய அடைகாத்தல்
ஜனனமென்னவோ நிலவு...!

சந்திர கிரகணம்
பூவிற்குள் இன்று
உனக்கு
விலக்கு தினம்...!

பாட்டி அழைத்த
உன் பெயரில் ஒலிச்சரிவு
மாட்டிக்கொண்டது
என் உயிர்...!

என்
இரவுகளின் மீது
வெள்ளையடிக்கும்
உன் 
நினைவுகள்
உன்னை விடவும் ஈரமற்றவைகள்...!

நானே
உனக்கான உலகமென்கிறாய்
பிறகேன்
பிரவேச குளறுபடிகள்...?

தேடலையேத் தேடும்
ஒரு
விசித்திர
தேடல் நீ
உன் தேடலின்
நிறைவுப் புள்ளியில்
நான்
நின்றிருக்க எத்தனிக்கிறேன்...!

உலகமே
கூடு ஆவதும்
கூடே
உலகமாவதும்
பறவை
உணரும் பரவசத்திலிருக்கிறது
ஆயினும்
வானம் சிறிதில்லை...!

பச்சோந்தித்தனத்தின்
பகிரங்கமான வெளிப்பாடுதான்
அளப்பரிய அன்பும்
அதீத மரியாதையும்
சுயத்தில்
வெளிச்சம் பட்டவுடன்
வெளுத்துவிடுகிறது
சாயம்...!

சாயம்
பாவம்
உத்திரவாதமற்றது
சாயத்தின்
ஆலாபனைக்கேட்டு
நிறமிகள்
சுயம்
தொலைப்பதில்லை...!

மஞ்சத்திற்கு
எஞ்சிய கணங்களிலும்
அன்பு
மிஞ்சி நிற்காத
உன்
கஞ்சத்தன கையாள்கை
நேச பஞ்சத்தை
நிறுவிச் செல்கிறது
அஞ்சானே...!

உம் என்றே 
கழியும்
கம் பொழுதுகளை
தம் பிடித்து நகர்த்தும்
தண்டனையை
உனக்கு வழங்கியது யார்...?

நிறைவு சூழ்ந்த இல்லத்தில்
பரிவற்ற
துறவு எதற்கு
அமைதியென்பது
அரவணைப்பு அல்லாதவர்க்கு
அவசியப்படுவது
நீ ஏன்
நிர்மூலனை நேசிக்கிறாய்...?

அறிவின் முதிர்ச்சி
ஞானம்
அன்பின் முதிர்ச்சியே
ஞாலம்
எல்லா ஞானமும்
அன்பை நிலைநிறுத்த
கண்டெடுக்கப்பட்ட 
சித்த கோலங்களே...!

மலிவானச் செலவில்
சாெற்ப முயற்சியில்
முதியாேர் இல்லம்
தேடுகிறான் மகன்...

சிறந்த பள்ளி
உயர்ந்த கல்லூரி
நல்ல செல்வாக்கு
தேடிக்கொடுத்தப் பெற்றாேருக்கு...!

வாழ்க்கை
என்னிடம்
வரவு செலவு கேட்டது

நானும்
அசல்களையும் நகல்களையும்
அப்படியே
சமர்ப்பித்தேன்...!

பரிசிலித்து 
பார்த்துச் சொன்னது

புகழ்கால
வைப்புநிதியில்
இருப்பு குறைகிறதாம்...

பொழுதுகள்
பொறுப்பின்றி
கழிக்கப் படுகிறதாம்...

திமிங்கிலத் திறனெல்லாம்
கெண்டை மீன்
பிடிப்பதில்
விரயமாகிறதாம்...

லாபம்
குறையும் தொழில்கள்
முச்சந்தியில் நின்று
வசை பாடுகிறதாம்...

சரிகள் எதுவும்
சரியாக
செய்யப்பட வில்லையென்று
குறைகள்
குறை கூறுகின்றனவாம்...

அடப்பாவி வாழ்க்கை
என்னமாய்
பரிகசிக்கிறது...!

என்னதான் செய்வது...?

வாழ்க்கையும்
வாழ்வதும்
முரண்பட்டே கிடக்கிறது
மனித சரித்திரம்
முழுவதும்...!

இந்த வாழ்க்கை
எவரோடுதான்
திருப்தியாய்
வாழ்ந்து நிறைந்தது...?

மரண தருவாயிலும்
மலிய மலிய
பிழைகூறியே
பிழைத்துக் கொண்டிருக்கிறது

மரணத்தை விடவும்
வாழ்க்கை
கொடூரமானது...!

மகிழ்ச்சி
எங்கே இருக்கிறது...?

விலை
நிர்ணயமே
வாழ்க்கையாய்
கொண்ட பணத்திடமா...?

கொள்ளும்
உதவியை குன்றாகவும்
கொடுக்கும் 
உதவியை மலையாகவும்
பொருள் மாற்றிப் புரியும்
சொந்தத்திடமா...?

பாதாளத்தையும் ஆகாயத்தையும்
கண நேரத்தில்
கையில் கொடுக்கும்
காதலிடமா...?

எட்டையப்பனையும்
கர்ணனையும்
இடம் வலமாய்
ஏற்றே பயணப்படும் நட்பிடமா...?

இருப்பதாகவும்
இல்லாததாகவும்
நீளும்
சந்தேக விஸ்வரூபம்
தெய்வத்திடமா...?

எங்குதான்
இருக்கிறது
இந்த மகிழ்ச்சி...?

இறைவன்
இல்லா இடத்திலும் கூட
இருக்கவே செய்கிறது
மகிழ்ச்சி...!

இலகுவாக இதயமிருந்தால்
எதிலுமிருக்கிறது
பவித்திர மகிழ்ச்சி...

நீயென்ன
கர்வகுண்டலத்தோடே
பிறந்தவனா...?

புன்னகைக்கும்
மிதப்பு 
கற்றுக் கொடுத்திருக்கிறாய்...!

அன்பிலும்
அடிமைத்தனம் அகற்றுகிறாய்...!

கரடு முரடான
கனிவன் 
நீ
ஏனடா
இரக்கத்திலும் அரக்கனாகவே
இருக்கிறாய்...?

புலன்களையும் மனதையும்
புரட்டிப் புரட்டி
போடுகிறாய்...!

இருந்தும்
ஏனடா
சினமே வரவில்லை...!

கனிவைப்போலவே
உன்
கர்வமும்
பிடிக்கவே செய்கிறது

என்னிலிருந்து
நான்
வெளியேறினாலும்
நீயிருப்பாய் நிரந்தரமாக...!

இந்த நிலையை
எவ்வாறு
உணர்த்துவேன்
உன்
கோரப் பிரியத்தின்
கொடியப் பார்வைக்கு...?

காமமும்
நியதி ஏற்கிறது
ஆசை தளர்ந்துபோன பின்...!

அனைத்து நீதியும்
அநீதியின்
பலாத்காரத்தில் பிறந்தவைகள்...!

அதனால் தானோ
என்னவோ
சத்தியத்தை
அசத்தியம்
சட்டை செய்வதேயில்லை...!

பாவம்
தேவனும்
என்னதான் செய்வார்
சாத்தானின் சர்வத்தில்...?

அவனவன்
ஆற்றுகின்ற போது
குற்றத்திற்கும்
தர்மம் கற்பிக்கிறான்...!

மரணமில்லாது இருந்திருந்தால்
மனிதகுலம்
அசூரகுலமாகி
ஆண்டுகள்
பல நூறு கடந்திருக்கும்...!

வாடா காதலா
குத்தட்டத்தோடு கும்மாளமிட்டு
கூப்பாடு போடுகிறது
காதல்
அசைவத்தை
கொட்டிக் கொட்டி கொடுத்து
அரவம் அடக்குவோம்...!

என்னடா
பெரிய எல்லைக்கோடுகள்
தாண்டித் தாண்டி
பின்
தடமானதுதானே
பாதைகளும் நீதிகளும்...!

சரி
தவறுகளை
நாமும்தான் கொஞ்சம்
சரிபார்த்து கூறுவோமே
மறுபரிசீலனை
ஆராய்ச்சியை விடவும்
அலாதியானதில்லையா...?

விரைந்து வா
பூமியே
தன் சுழற்சி வேகத்தை
மெல்ல மெல்ல 
கூட்டிக்கொள்கிறதாம்
நாம்தான்
விஞ்ஞான விசுவாசிகளாச்சே...!

கடும் பாறையிலும்
 உயிர்கள் துளிர்க்கின்றன 
எவர்மீதும்
அன்பு பொழியப்படட்டும்...!

நல்லகவிதை
பிறக்கும் போதும் வலிக்கச்செய்கிது
படிக்கும் போதும்
வலிக்கச்செய்கிறது...!

அதனாலென்ன
தாய் கூறினாள்
வலிதானே பிரதானச் சுகம்...!

சிறந்த ஓவியமொன்று
கண்டெடுக்கப்பட்டது
திறந்தவெளி குப்பைக்கிடங்கின் 
பரந்தவெளியில்
திறக்கவோ பிரிக்கவோ
 முடியாத
நிலையில்...!

ஓவியத்தில்
ஒட்டியிருந்த அழுக்கில்
ஞானஸ்தானம்
செய்துகொண்டது 
ஞானம்...!
Previous Post
Next Post

0 Comments: