ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

தைப்பூசம் ஸ்பெஷல்



தைப்பூசம் ஸ்பெஷல்


அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
  
வள்ளலார் வடலூர் ராமலிங்க சுவாமிகள் ஜோதியில் இரண்டறக் கலந்தது, ஒரு தைப்பூச நன்னாளில்தான். அதனால்தான் வடலூரில் அமைந்துள்ள தலத்தில், வருடந்தோறும் தைப்பூசத் திருநாளின் போது, சிறப்பு பூஜைகளும் ஜோதி தரிசன வழிபாடும் விமரிசையாக நடைபெறுகிறது.

தீபத்தையே தெய்வமாகப் பார்க்கிறது சாஸ்திரம். தீப வழிபாடு என்பது நம் பூஜைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தீபத்தில் இறைவன் குடிகொண்டிருக்கிறான் என்றும் இறைசக்தி வியாபித்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அத்தனை பெருமையும் கீர்த்தியும் பெற்ற தீபத்துடன், ஜோதியுடன் ஐக்கியமானவர்... ராமலிங்க அடிகளார்.

வடலூர் பெருமான் என்றும் வடலூர் ராமலிங்க அடிகளார் என்றும் வள்ளல் பெருமான் என்றும் போற்றப்படுகிறார் ராமலிங்க சுவாமிகள்.

இந்த அகண்ட உலகில் மிகப்பெரிய நோயாக, தீராப் பிரச்சினையாக, பிணியாக இருப்பதே பசி. எல்லோர்க்கும் உணவு, எல்லா உயிரினங்களும் பசியாற வேண்டும் என்பதையே லட்சியமாக, குறிக்கோளாக, பிரார்த்தனையாகக் கொண்டவர் வள்ளல் பெருமான் ராமலிங்க அடிகளார்.

வள்ளல் ராமலிங்க அடிகளார் அருளிய ஜீவகாருண்யம் மிகப்பெரிய தாக்கத்தை மக்களிடத்தில் ஏற்படுத்தியது. இவரின் சமரச சன்மார்க்க நெறிமுறைகளும் அஹிம்சையும் மிகப்பெரிய ஆன்மிகச் சிந்தனையை நமக்குள் ஏற்படுத்தின.

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என அருளிய வள்ளல் பெருமான் ராமலிங்க அடிகளார், ’அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை’ என்று அருளையும் ஜோதியையும் கருணையையும் நமக்குப் போதித்தார். தான் ஏற்றிய ஜோதியிலேயே, இறை சொரூபமாகத் திகழும் ஒளியிலேயே ஐக்கியமானார் ராமலிங்க சுவாமிகள் என்கிறது வள்ளலார் பெருமானின் சரிதம்.

வள்ளல் வடலூர் ராமலிங்க சுவாமிகள் ஜோதியில் இரண்டறக் கலந்தது, ஒரு தைப்பூச நன்னாளில்தான். அதனால்தான் வடலூரில் அமைந்துள்ள தலத்தில், வருடந்தோறும் தைப்பூசத் திருநாளின் போது, சிறப்பு பூஜைகளும் ஜோதி தரிசன வழிபாடும் விமரிசையாக நடைபெறுகிறது.

வள்ளலார் பெருமானை மனதார வழிபடுவோம். தீபத்தில் இரண்டறக்கலந்த ஒப்பற்ற அருளாளரைப் போற்றிப் பிரார்த்திப்போம். வழிபடுவோம். பசிப்பிணி போக்கி அருளுவார். வறுமை நிலையில் இருந்து நம்மை மீளச் செய்வார்.

நோயற்ற வாழ்வைத் தந்து மலரச் செய்வார் ராமலிங்க சுவாமிகள். தைப்பூசத் திருநாளில் ஜோதியில் அருட்ஜோதியெனக் கலந்த மகானைப் போற்றுவோம். வணங்குவோம்.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை
பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணைநிதி வேண்டும் நோயற்ற
வாழ்வில் நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே
தண் முகத்துய்ய மணி உண் முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

தருமம் செய்வார் மிக்குள்ள சென்னையி லுள்ள கந்த கோட்டத்துள் வளரும் திருக்கோயிலில் எழுந்தருளும் கந்த வேளே, தண்ணிய முகத்தை யுடைய தூய மணிகளுட் சிறந்த சைவமணியாகிய ஆறுமுகங்களை யுடைய தெய்வமணியே, ஒரு நெறிப்பட்ட மனத்துடன் நின்னுடைய மலர் போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்களின் உறவே எனக்கு வேண்டும் , உள்ளத்தி லொன்றும் புறத்தி லொன்றுமாகப் பேசும் வஞ்சகர் உறவு என்னை யடையாவாறு காக்க வேண்டும்; பெருமை சான்ற நினது புகழையே நான் பேசுபவனாகவும், பொய்ம்மை மொழிகளைப் பேசாதவனாகவும் இருக்க வேண்டும்; பெருமை நல்கும் நெறியையே கடைப் பிடிப்பவனாக அமைய வேண்டுமே யன்றி மத மென்னும் பேயாற் பிடிபடாதவனாக இருக்க வேண்டும்; இயல்பாகவே தோன்றுகிற பெண்ணாசையை என் மனம் மறந்தொழியவும், அதற்கீடாக உன்னை மறவா தொழுகும் தன்மை என் நெஞ்சில் நிலை பெறவும் வேண்டும்; மதி நுட்பமும் உன் கருணையாகிய நிதியமும், நோயற்ற வாழ்வும் உடையனாக வேண்டும்; இவற்றை அருளுக. எ.று.

தருமம், ஈண்டுக் கொடை மேற்று. தருமம் செய்வார் மிக்கிருத்தல் தோன்றத் “தருமம் மிகு சென்னை” என்று சிறப்பிக்கின்றார். பல தலைப்படாமல் ஒருதலையாக ஒரு நெறிக்கண் இயங்கும் மனத்தின் நினைவு ஒருமை நினைவாதலால், “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்” என்று கூறுகின்றார். “ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன்” என்பர் திருஞான சம்பந்தர். தம்மை உற்றாரையும் ஒருமை நினைவினராக்குவ ரென்பது பற்றி “உத்தமர் தம் உறவு வேண்டும்” என்று கூறுகின்றார். நினைவார் மனத்தின்கண் தங்கித் தன் அருளொளியால் மலர்விக்கும் மாண்புடைமை பற்றித் திருவடி யென்றொழியாமல் “நினது திரு மலரடி” எனப் புகல்கின்றார்.

உள்ளத்திலொன்றும் வாயில் ஒன்றும் பேசுபவர் வஞ்சமும் பொய்யும் உடைய தீயராதலின் அவரது உறவு அறவே கூடா தென்றற்கு “உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்” எனப் பல சொற்களால் விரியக் கூறுகின்றார். நம் அறிவறியாமே தாமே வந்து கலந்து கொள்பவாதலின், “வஞ்சர் உறவு கலவாமை வேண்டும்” என முருகன்பால் முறையிடுகின்றார். முருகன் புகழ், பொருள் சேர் மெய்ப் புகழாதலின் பேசத்தகுவது என்பது பற்றி, “பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்” என்று கூறுகின்றார்.

“பேசிப் பிதற்றப் பெருமை தருவார்” (பாசூர்) என்பர் திருஞானசம்பந்தர். தலையாய அறமாதலால் “பொய்ம்மை பேசாதிருக்க வேண்டும்” என எடுத்து மொழிகின்றார். “பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று” (குறள்) எனத் திருவள்ளுவர் உரைப்பது காண்க. பெருமை தரும் செம்மை நெறி பெருநெறி; அதனைக் கடைப்பிடித் தொழுகல் இன்றியமையாமையால் “பெருநெறி பிடித் தொழுக வேண்டும்” என்றும், அதனைக் கெடுக்கும் இயல்புடைமை பற்றி, “மதமான பேய் பிடியா திருக்க வேண்டும்” என்றும் கூறுகின்றார்.

உடல் வளரும் போதே உடன் வளர்ந்து அறிவை மயக்குவதனால், “மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்” எனவும், மறக்கத் தக்கது பெண்ணாசையாகிய காமமெனினும் மறவாமைக்குரியது யாதென்றெழும் வினாவிற்கு விடையாக, “உனை மறவா திருக்க வேண்டும்” எனவும் முருகனிடம் வேண்டுகின்றார். பொருள் வாழ்வுக்கு இயற்கையறிவாகிய “மதி வேண்டும்” என்றும், அருள் வாழ்வுக்கு நெறி வழங்குதலின் “கருணைநிதி வேண்டும்” என்றும், உடல் வாழ்க்கை உறுதி பயத்தற்கு “நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்” என்றும் இயம்புகின்றார்.

இதனால், ஒருமை நினைவுடைய உத்தமர் உறவு முதல் நோயற்ற வாழ்வு ஈறாக வுள்ள நலம் பலவும் வேண்டுமென முறையிட்டவாறாம்.  

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை.


Previous Post
Next Post

0 Comments: