திங்கள், 6 மார்ச், 2023

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 6/3/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 6/3/23
இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 6/3/23

சற்று
செவியுற்று நில் காதலி...!

க்கும்
உன் சலிப்பும்
இனிக்கவே செய்கிறது
இந்த
பரபரப்பனுக்கு

காதல்மீது
எனக்கு
காதலில்லையோயென்ற
உனது 
ஐயங்களுக்கு
ஈர முத்தங்களைவிட
ஏது சாட்சி...?

கனவுகளும்
காலமும் 
என்னை மென்று தின்று
அவைகள்
மீட்சி கொள்கின்றன

யாவும்
கைகூடும் காலம்
அதோ
பார்வைக்கு பக்கத்திலேயே...!

சந்தேகம் தொலை
எந்நேரமும்
நீயே என்
நிம்மதியின் ஊற்றலை...!

எத்தனைதான்
கணக்குப்போட்டு பார்த்தாலும்
காதலைவிட
பெரிய பூரிப்பு
பூமியில்
இல்லவேயில்லை...!

பெரும் திரளை
வாய் பிசைந்துகொள்ள 
வைப்பதைத் தவிர
புகழுக்கு வேறு
புளகாங்கிதம் எதுவுமில்லை...!

இப்படியே இரு
எழிலாளினியே...!

நொபெலுக்கு
சிபாரிசு செய்கிறேன்
இத்தனை
எழிலான குறுங்காவியத்தை
எவர்
எழுதியிருக்கக்கூடும்
இதழ்களில்...?

நீ
சொல்லும் பொய்யும்
நேசத்தினால்
நேசத்திற்காகவே என்றறியும்போது
மேலும் 
காதல் பொலிவுறுகிறதடா
நேசக் கள்வனே...!

நீ
என்ன செய்தாலும்
நியாயம் கற்பிக்கும்
என்
படுபாச மனதிற்கு
நெடுநீள தித்திப்பை
கெடுவின்றியளிக்கும்
குறும்ராட்சனே...!

உன்னை
ருசிக்க ருசிக்க
அத்தனை திட்ட வேண்டும்
நீ
இனிக்க இனிக்க ரசிப்பதை
என்
புலன் ஐந்தும் 
பசிக்கப் பசிக்க புசிக்கவேண்டும்...!

என்னை
கொன்றுக் கொன்று
உன்னை
உயிர்ப்பிக்கும்
என்ன காதலடா இது...?

ஏதாே ஒரு
இனம் புரியாத வலி
உயிர் முழுவதிலும்
உலா வந்து காெண்டேயிருக்கின்றது...!

உன் பெயரை
சத்தமாக 
கூறிக்காெண்டே....!

காெஞ்சம் 
இரு காதலி

பிரபஞ்சம் முழுவதும்
பிரகடனம் செய்து விட்டு
வருகிறேன்...! 

உன் நாணத்தை
காதலின் குறியீடாக...!

யாரடி நீ...?

பெண்ணுருவில்
அப்படியே
என்னைப் பிரதிபலிக்கிறாய்...!

என்
காலம் முழுவதும்
பெண்கள்
கடந்து சென்றிருக்கிறார்கள்
பூக்களையும்
புளகாங்கிதத்தையும்
எறிந்து சென்றவர்களே
ஏகம்...!

நீயென்ன
தீப்பிழம்பை தின்று வளர்ந்தவளா...?

அக்னிச்சுவாலைகளை
அள்ளி வீசுகிறாய்
எரிமலையின் மீதே...!

உன்
சின பிடிவாதம்
ஆண்களின்
சிதையுற்ற சிதில்கள்மீதே

உன்
ஆண்சாரம் கேட்டு
என் வீரம்
கர்வம் கொண்டது

ஆண்
தொலைந்த தெருக்களில்
கம்பீரம் 
தேடுகிறாய் நீ...!

சோம்பிகள் மட்டுமே
சுற்றியிருப்பதால்
வீம்பன்களுக்கு
விலாசம் கூட இல்லையென்கிறாய்...!

எதிர்கொண்டவனெல்லாம்
உன்னிடை
தாண்டாதவனாகிப் போனதால்
உன்னைத் தாண்ட
ஆணே
இல்லையோயென்று
ஆலோசிக்கிறாய்...!

பிழைவாதம்
பிரியமானவளே

சபல விகாரங்களை
மட்டுமே
சந்திக்க நேர்ந்தது
சூழ்நிலைச் சதியாக இருக்கலாம்

கடுமையை விடவும்
இனிமையிருக்கிறது
உன்னிடம்
உன் வன்மையை 
வென்றவனுக்கே
அது சொந்தமென்ற
வரையறையும் வைத்திருக்கிறாய்...!

வீழ்த்துபவனின்றி
வீறுகொண்டு நிற்கிறாய்

நீ வீழ்வாய்
ஏனெனில்
நீ வெல்லப்படுவதை
விரும்புபவள்
நீ வீழும்போது
அங்கேயொரு
ஆணின் கைத்தாங்கலிருக்கும்
உன்
கனிவை கோதிவிட....!

இத்தனை வளமாய்
வெறுமையை
பயிர் செய்துவிட்டு
அறுவடையையும்
கொள்முதலையும்
ஏனடா
என்னையே
கொள்ளச் செய்கிறாய்...?

வலிகளுக்கு
எத்தனை வழிகளிருக்கிறதோ
அத்தனையையும்
என் பக்கமே
திறந்துவிடும்
உன் இரக்கத்தில்
காதல்
தற்கொலைக்கு தயாராகிறது...!

எல்லா
தற்கொலைக்கு பின்னும்
கொலையாளி ஒளிந்திருப்பான்
நீயும்
கொலையாளியா காதலா...?

பற்று
சற்று இற்றுப்போகும் 
போது
தொற்றுத் தொற்றாய்
தொற்றிக்கொள்கின்றன
சற்றும் யோசிக்காத
முற்றிய
வெக்கை நோய்கள்...!

கதகதப்பாய்
இருக்கக்கூடும் காய்ச்சல்
வெதுவெதுப்பு தானே
காரணம்
வெதும்புவதற்கும்...!

தெளியாத நிலைக்கு
தீட்டுவதும்
தேய்ப்பதும்
ஒன்றாகவே உணரப்படுகிறது
பாகுபாடு
எவ்வாறு புரியும்
பன்றிக்கு
நந்தவனத்தில் நடந்தாலும்...?

குருவியின் தனிமை
ஆகாயத்தை
அநாதையாக்கியது...!

அங்கீகாரமென்பது
உலகத்தின்மீது வைக்கப்படும்
அடுத்த பரிந்துரை
சிபாரிசை 
ஏளனம் செய்கிறது
தரம்...!

அழுதுவிடாதே
உன் கண்ணீரை
உலகம்
அத்தனை நேசிக்கிறது
மீண்டும் மீண்டும்
நச்சரிக்கும் 
விருப்பம் எப்போதும்
பிடிவாதம் செய்யும்...!

உறுதியாக சொல்லி வை
நீ 
சொன்னாலும்
வந்துவிடக் கூடாதென்று
கண்ணீருக்கு...!

எனக்கும்
கவிதைக்கும் இடையில்
வாழ்க்கை
நாடகமாடுகிறது
ஒரேயொரு ஆறுதல்
அரசன் 
வேடமேயில்லை...!

புத்தனின்
கனவில் குதித்த
சித்தார்த்தன் கேட்டான்
உங்களின்
துறக்கமுடியாத ஆசைதானே
துறவு...?

பதில்
கூறவேயில்லை புத்தன்
சித்தார்த்தனை
சித்தார்த்தன் 
துறக்கும் வரை...!

கனவு 
துறந்தபோது
புத்தன் 
ஜீவ முக்தியில்
ஞான ஆசைகள்
சீடர்களாய் சூழ்ந்து நின்றன...!

சமயங்களில்
பெண்கள் பாறைகள்தான்
ஆயின்
இளக்குவதற்கு
எதற்கு நீங்கள்
பாரை தேடுகிறீர்கள்...?

அச்சமயங்களில்
உயிர் வருடி
மனம் கோதிவிடுங்கள்
நெகிழ்ந்து நெகிழ்ந்து
உயிர்நிலையையே
தளர்ந்த நிலமாக்கித் தருவார்கள்...!

சமுத்திரம் வேண்டி
அவர்கள்
சண்டையிடுவதில்லை
கரிசனமான
திவலை ஈரத்தில்
திராணி நனைந்து போகிறார்கள்...!

எரிமலையாய் 
இருக்க நேர்ந்தாலும்
பெண்மை 
எண்பது சதவீதம் தாய்மையானதே...!

செல்லப்பிராணிக்கு
கொடுக்கப்படுகின்ற
அன்புகூட
இல்லத்தரசிகளுக்கு
கிடைக்காமல் போவது
ஆண்களின்
மூடத்தனமேயன்றி வேறென்ன...?

மரத்தைவிட
பெருத்திருந்தாலும்
மங்கையர்களென்றும்
பாசக்கொடிகளே...!

யாவற்றையுமளித்து
ஏதோவொன்றிற்காக
வேள்வியிருக்கும் 
அவர்களுக்கு
நாம் ஏன்
யாவதுமாய் ஆவதேயில்லை...?

ஏனடா
உன்னை
கொடுமை படுத்தாத
என்
நினைவுகளையும்
கூறுபோட்டுக் கொல்கிறது
உன் நினைவுகள்...?

வதைபடும்
என் உயிரில்
குளிர்காய்கிறாய்
இருந்தும்
எரிய எரிய நேசிக்கிறேன்
உன்னை
எறிய முடியாமல்...!

என்
சாம்பல் மீதும்
நீயே 
பூத்து நிற்பாய்
ஆம்பலாய்
அப்போதும் உன்னை
நானே தாங்கி நிற்பேன்
நீ
வலியுணராவண்ணம்...!

ஏனெனில்
நானுன்னை
காதலிக்கிறேன்...!

எல்லாம்
கவிதைக்குள்
குதித்துவிடுவதில்லையென்பதை
கவிதை
எத்தனை இசைவாய்
இயம்புகிறது...!

வழிவது
நிரம்பியதன் மிச்சமா...?

நிரம்ப வேண்டியும்
சமயத்தில் 
வழிகிறது உச்சம்...!

ஆயுளின்
அன்புப் பொதியையெல்லாம்
ஒரு மணியினுள்
என்மீது
உருட்டி விட்டு
உள்ளார்ந்து மகிழ்கிறாய்...

தாங்கும்
வல்லமை தருவாயா
உன்
அகன்ற மார்பின்
கதகதப்பில்
அணைத்துக் கொண்டபடி...!

ஆத்மாவையோ 
மனதையோ
ஏதோவொன்று 
ஆட்கொள்ளுமென்றால்
அதனுள் 
சிறையிருக்க
உயிர் சிநேகிக்கிறது...!

அது
நீயென்றான போது
ஆயுள்கைதியாவதில்
ஆவல் 
கூடுகிறது...!

சிறையிருப்பதும்
சுகமாகத்தானிருக்கிறது
பொருள் புரியாத
கவிதையின் கரு மாதிரி...!

நீ
எங்கே எங்கே
என்று கேட்டு
நச்சரிக்கும்
உன் நினைவுகளுக்கு

யாரைக் காண்பித்து
சமாதானப்படுத்த...?

திறந்தவெளி
தென்றலாய் வந்தாய்

மனம் முழுவதும்
மையல் காெண்டாய்

சிறுபிள்ளையாய்
செல்லச் சண்டைகள் புரிந்தாய்

எது கசந்ததாே
தூரத்திற்கு அருகில்
இடை வெளி
நீட்டிக்காெண்டாய்...?
Previous Post
Next Post

0 Comments: