தரிசனம்
சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு இளையான்குடி அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் ஆலயம்.
*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்*
*மூலவர்:*
ராஜேந்திர சோழீஸ்வரர்
*உற்சவர்:*
சோமாஸ்கந்தர்
*அம்மன்/தாயார்:*
ஞானாம்பிகை
*தல விருட்சம்:*
வில்வம்
*தீர்த்தம்:*
தெய்வபுஷ்கரணி
*பழமை:*
1000-2000 வருடங்களுக்கு முன்
*புராண பெயர்:*
இந்திரஅவதாரநல்லூர்
*ஊர்:*
இளையான்குடி
*மாவட்டம்:*
சிவகங்கை
*மாநிலம்:*
தமிழ்நாடு
*திருவிழா:*
*மகாசிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை.*
*தல சிறப்பு:*
*63 நாயன்மார்களில் இளையான்குடி மாறநாயனார் இத்தலத்தில் அவதரித்து, முக்தி அடைந்துள்ளார்.*
*திறக்கும் நேரம்:*
*காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 4.30 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.*
*முகவரி:*
*அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில், இளையான்குடி- 630 702,சிவகங்கை மாவட்டம்.*
*போன்:*
*+91- 4564 - 268 544, +91- 98651 58374.*
*பொது தகவல்:*
*சிவன் சன்னதிக்கு பின்புறம் வெங்கடேசப்பெருமாள் தனிச்சன்னதியில் இருக்கிறார்.*
*கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி இரண்டு சீடர்களுடன் மட்டும் காட்சி தருவது வித்தியாசமான அம்சம்.*
*பிரகாரத்தில் மகாகணபதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், பைரவர், நவக்கிரகம், சனீஸ்வரர், சூரியன், சந்திரனுக்கு சன்னதி இருக்கிறது.*
*பிரார்த்தனை:*
*பிறருக்கு உதவி செய்யும் குணம் வளரவும், உணவிற்கு பஞ்சமில்லாத நிலை உண்டாகவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.*
*நேர்த்திக்கடன்:*
*பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமிக்கு அன்னம் படைத்து, பக்தர்களுக்கு அன்னதானம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.*
*தலபெருமை:*
*தண்டுக்கீரை நைவேத்யம்:*
*இக்கோயிலில் மாறநாயனாருக்கு சன்னதி இருக்கிறது. அன்னதானம் செய்து சிவனருள் பெற்றவர் என்பதால் இவருக்கு, "பசிப்பிணி மருத்துவர்' என்ற சிறப்புப்பெயர் உண்டு. குருபூஜையன்று மாலையில் சிவன், அம்பாள், மாறநாயனார், அவரது மனைவி புனிதவதி ஆகிய நால்வரும் ஒரே சப்பரத்தில் எழுந்தருளி புறப்பாடாவது விசேஷம். அன்று சிவனுக்கு தண்டுக்கீரை பிரதான நைவேத்யமாக படைக்கப்படும்.*
*இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் மாறநாயனார் வாழ்ந்த வீடும், அவர் பயிர் செய்த நிலமும் இருக்கிறது. இந்நிலத்தை "முளைவாரி அமுதளித்த நாற்றாங்கால்' (இறைவனுக்கு அமுதளிக்க நெல் விளைந்த வயல்) என்கிறார்கள். நாயனார் அன்னதானம் செய்து, சிவனருளால் முக்தி பெற்ற தலமென்பதால் இங்கு பக்தர்கள் அன்னதானம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். உணவிற்கு பஞ்சமில்லாத நிலை ஏற்பட, இங்கு சிவனுக்கு அன்னம் படைத்து வழக்கம் உள்ளது.*
*தெய்வானையுடன் முருகன்:*
*சுவாமி, அம்பாள் ஞானாம்பிகை இருவருக்கும் தனித்தனி வாசல் உள்ளது. அம்பாள், சிவனுக்கு வலப்புறம் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் ஞானம் தருபவளாக இருப்பதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறாள்.*
*குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெற இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். சிவன் சன்னதி முன்மண்டபத்தில் முருகன், தெய்வானையுடன் இருக்கிறார். உடன் வள்ளி இல்லை. இந்திரன் லிங்கம் ஸ்தாபித்து வழிபட்ட தலமென்பதால், தெய்வானை மட்டும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.*
*தல வரலாறு:*
*மகரிஷி ஒருவரிடம் பெற்ற சாபத்திற்கு விமோசனம் வேண்டி பூலோகம் வந்த இந்திரன், பல தலங்களில் லிங்க பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்து வழிபட்டான். அப்போது இங்கும் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டான்.*
*இவ்வூரில் வசித்த இளையான்குடி மாறனார் என்ற செல்வந்தர், சிவன் மீது தீராத அன்பு கொண்டவராக இருந்தார். அடியார்களுக்கு அன்னமிட்டு உபசரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருசமயம் அவரை சோதிக்க எண்ணிய சிவன், மாறனாரின் செல்வத்தை குறைத்து வறுமையை உண்டாக்கினார். ஆனாலும் மாறனார், அடியார்களுக்கு அன்னமிடுவதை நிறுத்தவில்லை.*
*ஒருநாள் இரவில் சிவன், அடியார் வேடத்தில் அவரது இல்லத்திற்கு வந்தார். அவருக்கு படைக்க வீட்டில் உணவு ஏதுமில்லை. ஆனாலும் கலங்காத மாறனார், வயலுக்குச் சென்று அன்று காலையில் விதைத்த நெல்லை, எடுத்து வந்தார். அவரது மனைவி அதை உலர்த்தி, அரிசி எடுத்து, அன்னம் மற்றும் கீரை சமைத்தார். அப்போது சிவன் சுயரூபம் காட்டி அவருக்கு முக்தி கொடுத்தார். நாயன்மார்களில் ஒருவராகும் அந்தஸ்தையும் கொடுத்தருளினார். இவருக்கு காட்சி தந்த சிவன், "ராஜேந்திர சோழீஸ்வரர்' என்ற பெயரில் அருளுகிறார்.*
*சிறப்பம்சம்:*
*அதிசயத்தின் அடிப்படையில்:*
*63 நாயன்மார்களில் இளையான்குடி மாறநாயனார் இத்தலத்தில் அவதரித்து, முக்தி அடைந்துள்ளார்.*
*இருப்பிடம்:*
*பரமக்குடியில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் 10 கி.மீ., தூரத்தில் இவ்வூர் இருக்கிறது. பஸ் ஸ்டாப்பிற்கு அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.*
*அருகிலுள்ள ரயில் நிலையம்:*
பரமக்குடி
*அருகிலுள்ள விமான நிலையம்:*
மதுரை
*தங்கும் வசதி:*
காரைக்குடி
*கோபுர தரிசனம் தொடரும்...*
*வாழ்க வளமுடன்...*
*வாழ்க வையகம்...
0 Comments: