மைசூரு தசரா விழா அரிய தகவல்கள்
மகிஷாசூரனை மைசூரு சாமுண்டி மலையில் வைத்து வதம் செய்தார்.
நன்மைக்கும், தீமைக்கும் நடந்த போராக கருதப்படுகிறது.
கலை, கலாசாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் மைசூரு தசரா விழாவைப் பற்றி இங்கு காண்போம்.
பார்வதி தேவியை வேண்டினர்
விஜயதசமி நாளில் மைசூருவின் சாமுண்டீஸ்வரி அம்மன் மகிஷாசூரனை வெற்றி கொண்ட நாள் தான் மைசூரு தசரா விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது மகிஷாசூரன் என்ற கொடூர அரக்கன் மக்களை கொடுங்கோல் ஆட்சியால் வாட்டி வதைத்து வந்தான். அதையடுத்து மக்கள் தங்களை காக்க வேண்டி காவல் தெய்வமான பார்வதி தேவியை வேண்டினர். அதன்பேரில் அவர் சாமுண்டீஸ்வரி அம்மனாக பிறந்தார். பின்னர் விஜயதசமி நாளன்று சாமுண்டீஸ்வரி அம்மன், படைகளுடன் சென்று மகிஷாசூரனை மைசூரு சாமுண்டி மலையில் வைத்து வதம் செய்தார். அதைத்தான் மைசூரு தசரா விழாவாக கொண்டாடுவதாக கூறப்படுகிறது. மேலும் இது நன்மைக்கும், தீமைக்கும் நடந்த போராக கருதப்படுகிறது.
மகிஷாசூரன் என்கிற பெயரில் இருந்து தான் மகிசூர் என்ற பெயர் தோன்றியதாகவும், பிற்காலத்தில் அது மருவி மைசூரு என வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2010-ம் ஆண்டு கொண்டாடப்பட்ட மைசூரு தசரா விழா 400-ம் ஆண்டு தசரா விழா ஆகும்.
தனியார் தர்பார்
கர்நாடக மக்களின் கலை, கலாசாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் மைசூரு தசரா விழா விஜயநகர பேரரசர்களால் 15-ம் நூற்றாண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. பெர்ஷியன் தூதுவர் அப்துர் ரஜாக் `இரண்டு புனித நட்சத்திரக் கூட்டங்களின் எழுச்சியும், இரண்டு கடல்களின் சங்கமமும்' என்ற புத்தகத்தில் மகாநவமி என்ற பெயரில் தசரா கொண்டாட்டங்கள் நடந்ததாக குறிப்பிட்டுள்ளார். விஜயநகர பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மைசூருவை ஆண்ட உடையார் வம்ச அரசர் ராஜ உடையார் இந்த தசராவை ஸ்ரீரங்கப்பட்டணாவில் (மண்டியா மாவட்டம்) கொண்டாடினார்.
தசரா கொண்டாட்டங்களில் கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் சிறப்பு தர்பார் இடம் பெற்றது. இந்த தர்பார் மைசூரு அரண்மனையில் கூடியது. அரச குடும்பத்தினரும், சிறப்பு விருந்தினர்களும், அதிகாரிகளும், பொதுமக்களும் இந்த தர்பாரில் பங்கேற்றனர். அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழாவின்போது தனியார் தர்பார் நடந்து வருகிறது. மஹாநவமி என்று சொல்லப்படும் ஒன்பதாவது தினம் அரசரின் வாள் யானையின் மேல் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இந்த ஊர்வலத்தில் யானைகளுடன் ஒட்டகங்களும், குதிரைகளும் பங்கேற்கும்.
தங்க அம்பாரி
முதலில் மைசூரு மன்னர்கள் மற்றும் அரண்மனை சார்பில் கொண்டாடப்பட்ட தசரா விழா பின்னர் கர்நாடக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா விழாவின் கடைசி நாளில் ஜம்பு சவாரி ஊர்வலம் நடைபெறும். அதாவது சாமுண்டீஸ்வரி அம்மன் எழுந்தருள 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை ஒரு யானை சுமந்து கொண்டு யானைகள் புடைசூழ செல்ல, அதனை தொடர்ந்து மற்ற யானைகள் அணிவகுத்து வரும். யானைகளுக்கு முன்னர் பல்வேறு கலைக்குழுவினர், அலங்கார வண்டி அணிவகுப்புகள் நடைபெறும்.
மேலும் பீரங்கிகளும் முழங்கும். ஒட்டகங்கள், குதிரை படைகள், போலீசாரின் இசைக்குழு ஆகியவற்றுடன் ஜம்பு சவாரி ஊர்வலம் களைகட்டும். ஜம்பு சவாரி ஊர்வலம் மைசூரு அரண்மனையில் இருந்து தொடங்கி பன்னிமண்டபத்தில் உள்ள தீப்பந்து விளையாட்டு மைதானம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் நடக்கும். இந்த சந்தர்ப்பத்தில் வழிநெடுகிலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஜம்பு சவாரி ஊர்வலத்தை கண்டு ரசிப்பார்கள்.
தீப்பந்து விளையாட்டு மைதானத்தை அடைந்ததும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாணவேடிக்கை நடைபெறும். முன்னதாக பன்னி(வன்னி மரங்கள்) வெட்டும் நிகழ்ச்சியும் நடத்தப்படும். பாண்டவர்கள் தங்களது ஆயுதங்களை அந்த மரத்தில் தான் மறைத்து வைத்திருந்தார்கள் என்றும், அதனால் தான் பன்னி மரத்தை வெட்டும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. அரசர்கள் இந்த மரத்தை வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள் என்று கூறப்படுகிறது.
மின்விளக்கு அலங்காரம்
இதுஒருபுறம் இருக்க தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனை வண்ண, வண்ண மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும். அதுபோல் தற்போது மைசூரு நகரம் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகிறது. தீப்பந்து விளையாட்டு மைதானத்தில் போலீசாரின் சாகச நிகழ்ச்சிகள், பல்வேறு வீரர்களின் சாகசங்கள், லேசர் கதிர்கள் மூலம் ஒளி வாயிலாக நடத்தப்படும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறும்.
முன்னதாக மன்னர் குதிரை சவாரி செய்து ராணுவ மரியாதையை ஏற்றுக் கொள்வார். இது ராஜாவிடம் இருக்கும் படை பலத்தை வெளிக்கொண்டு வந்து மக்களின் மனதில் தங்களை ராஜா காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை விதைக்கும் என்று கூறப்படுகிறது. இப்படி பல்வேறு சிறப்புமிக்க மைசூரு தசரா விழா இந்த ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.