திங்கள், 16 அக்டோபர், 2023

சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு கொல்லங்குடி அருள்மிகு வெட்டுடையாகாளி அம்மன் ஆலயம்.

இன்றைய கோபுர தரிசனம் 

சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு கொல்லங்குடி அருள்மிகு வெட்டுடையாகாளி அம்மன் ஆலயம்.

மூலவர்:
வெட்டுடையா காளி

தல விருட்சம்:
ஈச்சமரம்

தீர்த்தம்:
தெப்பம்

பழமை:
500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்:
கொல்லங்குடி

மாவட்டம்:
சிவகங்கை

மாநிலம்:
தமிழ்நாடு

திருவிழா:
பங்குனியில் பிரம்மோற்ஸவம், ஆடிப்பெருக்கு, கந்தசஷ்டி, தைப்பொங்கல், சிவராத்திரி, ஆடி, தை வெள்ளி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, மார்கழி பூஜை, பவுர்ணமி பூஜை.

தல சிறப்பு:
கோயிலில் அம்பிகையின் நேர் எதிரே அய்யனார், பஞ்சகச்சம் கட்டி வலது காலைத் தொங்க விட்டு அமர்ந்துள்ளார். வலதுகையில் தண்டம் அணிந்து உள்ளார். இங்குள்ள காளியோ தன் வலது காலை ஊன்றி, இடதுகாலை தொங்கவிட்டு அமர்ந்துள்ளாள். இவள் வைத்திருக்கும் கத்தியும், கேடயமும், வில்லும், அம்பும் இன்னும் மற்ற ஆயுதங்களும் தூர இருந்து பார்க்கும் போதே நமக்கு பயத்தை தோற்றுவிக்கும். எவ்வளவு பெரிய தீய சக்தியாக இருந்தாலும் அதனை எல்லாம் அழித்து விடுவேன் என்று பராசக்தியின் அம்சமான அவள் சொல்வது போல இந்த காட்சி அமைந்துள்ளது. காளியின் சன்னதிக்கு எதிரில் ஆஞ்சநேயர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், சோலைமலை, விஷ்ணு, கருப்பசாமி, வீரப்பசாமி, முனியப்பசாமி, பேச்சியம்மன், சூலாட்டுகாளி, பைரவர் ஆகியோர் உள்ளனர். இவர்களில் நம்மை அதிகம் கவர்பவள் சூலாட்டுக்காளிதான்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, பவுர்ணமி நாட்களில் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு வெட்டுடையா காளி திருக்கோயில்,கொல்லங்குடி வழி, விட்டனேரி போஸ்ட்,அரியாக்குறிச்சி-623 556,சிவகங்கை மாவட்டம்.

போன்:
+91-90479 28314, 93633 34311

பொது தகவல்:
நீதிபதி அம்பிகை:
அம்பிகை வலது காலை மடித்து அமர்ந்து, எட்டு கைகளுடன் காலுக்கு கீழே அசுரனை வதம் செய்தபடி காட்சி தருகிறாள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நம்பிக்கை துரோகம், வீண்பழி, அவமரியாதையால் பாதிக்கப்பட்டோர், செய்யாத தவறுக்கு தண்டனைக்கு உள்ளானோர் தங்களுக்கு நீதி கிடைக்க இங்கு அம்பாள் சன்னதியில் காசு வெட்டிப்போட்டு வழிபடுகின்றனர். இந்த அநியாயங்களை எல்லாம் அம்பிகை தட்டிக்கேட்டு, குற்றவாளிகளைத் தண்டிப்பாள் என்பது நம்பிக்கை. இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் யாரேனும் தவறு செய்துவிட்டால், அவர்களைத் தண்டிக்க "நாணயம் தவறியோர்க்கு நாணயம் வெட்டிப்போடு' என்று சொல்லும் வழக்கமும் உள்ளது. வெட்டுடையார் காளியம்மன் மக்கள் பிரச்னைகளைத் தீர்த்து வைத்து, நடுநாயகமாக இருந்து நீதி வழங்குவதால் பக்தர்கள் இவளை "நீதிபதி' என்றே அழைக்கின்றனர். பவுர்ணமி, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இவளுக்கு விசேஷ பூஜைகள் உண்டு.

பிரார்த்தனை:
நோய் நீங்க, திருமணம், குழந்தை பாக்கிய தோஷங்கள் நீங்க அம்பிகைக்கு அபிஷேகம் செய்வித்தும், முடிகாணிக்கை செலுத்தியும் வழிபடுகின்றனர். மாங்கல்ய தோஷம் நீங்க அம்பாள் பாதத்தில் தாலி வைத்து வாங்கிச் செல்கின்றனர். குழந்தை பாக்கியத்திற்காக கோயிலுக்கு வெளியே உள்ள விசிறி மரத்தில் தொட்டில் கட்டுகின்றனர்.

கூடுதல் பிரார்த்தனை:
ஒன்றுக்கும் இல்லாத சிறிய விஷயம், தானே பெரியவர் என்ற குணத்தால் பிரிந்தவர்கள் பலர். இவர்கள் மீண்டும் ஒன்று சேர வழிபடும் பிரதான தலம் இது. பிரச்னையால் பிரிந்துவிட்டு மீண்டும் சேர விரும்பும் தம்பதியர், உறவினர், சகோதரர்கள் இங்கு "கூடுதல் வழிபாடு' என்னும் பிரார்த்தனை செய்கின்றனர். பிரிந்து சென்றோர் இங்கு வந்து அம்பாளுக்கு பொங்கல் வைத்து, அதை அம்பிகை சன்னதி முன் வைத்து ஒன்றாகக் கூடுகின்றனர். பின், பிரச்னை ஏற்பட்டவர்கள் தங்களுக்குள் அம்பிகை முன் சமரசம் செய்து, தாங்கள் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வழிபடுகின்றனர். அம்பிகையே இவர்களுக்கு நடுநாயகமாக இருந்து சேர்த்து வைப்பதாக ஐதீகம்.

நேர்த்திக்கடன்:

பக்தர்கள் தங்களுக்கு தீங்கு செய்தவர்களை தண்டிக்க அம்மனிடம் முறையிடுவதும், தீய சக்திகளால் பிரிய நேர்ந்தவர்கள் இக்கோயிலுக்கு வந்து சேர்ந்து கொள்வதும் இக்கோயிலின் தனிச்சிறப்பு ஆகும். குழந்தை வரம் கிடைக்கவும், பேசாத குழந்தைகளுக்கு பேச்சு நன்கு வரவும் இங்கு வேண்டிக் கொள்கின்றனர்.

தலபெருமை:
சங்காபிஷேகம்:
பங்குனியில் இங்கு 10 நாள் விழா நடக்கிறது. இவ்விழாவின்போது, சிவனைப்போலவே அம்பிகைக்கு 108 சங்காபிஷேகம் நடப்பது விசேஷம். இந்நாட்களில் அம்பிகை கேடயம், பூதகி, கிளி, அன்னம், காமதேனு, காளை, சிம்மம், தங்கக்குதிரை ஆகிய வாகனங்களில் பவனி வருவாள். விழாவின் 9ம் நாளில் தேர்பவனியும் உண்டு. ஆடிப்பெருக்கன்று அம்பாள் சன்னதி முழுதும் பூக்களை நிரப்பி, பூச்சொரிதல் விழா விசேஷமாக நடக்கும்.

இவர்களில் நம்மை அதிகம் கவர்பவள் சூலாட்டுக்காளிதான்.

அமைவிடம்:
சிவகங்கையில் இருந்து காளையார்கோவில் செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில் கொல்லங்குடி உள்ளது. இவ்வூரில் இருந்து 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். கொல்லங்குடியில் இருந்து பஸ் கிடையாது. ஆட்டோ உண்டு.

அருகிலுள்ள ரயில் நிலையம்:
சிவகங்கை

அருகிலுள்ள விமான நிலையம்:
மதுரை

தங்கும் வசதி:
காரைக்குடி
Previous Post
Next Post

0 Comments: