ஞாயிறு, 5 நவம்பர், 2023

அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில்
மாவட்டம் : அரியலூர்
இடம் : தீயனூர்
முகவரி : தீயனூர், அரியலூர்
தாலுகா : உடையவர் தீயனூர்

வரலாறு : இரண்டாம் ராஜராஜன் காலத்தில் கற்றளியாக கி.பி. 1166ல் கட்டப்பெற்ற பழமையுடையது. இவ்வூரின் தொன்மையான பெயர் தீயனூர். இவ்வூருக்கு மனுகுலகேசரி நல்லூர் என்ற பெயர் இருந்ததாக, கங்கை கொண்ட சோழபுரத்தில் எழுதப்பட்ட முதலாம் ராஜாதிராஜன் கல்வெட்டு சொல்கிறது. தற்போது உடையவர் தீயனூர், பெருமாள் தீயனூர் என்னும் இரண்டு சிற்றூர்கள் உள்ளன. சிவன் கோயில் அமைந்த பகுதி உடையவர் தீயனூர்; விஷ்ணு கோயில் அமைந்துள்ள பகுதி பெருமாள் தீயனூர்.

வெப்பம் மிகுந்த பிரதேசமாதலால் தீயனூர் என்றழைக்கப்பட்டது. புராண காலத்தில் இப்பகுதி வில்வ மரங்கள் நிறைந்த வனப்பிரதேசமாக இருந்தமையால் வில்வாரண்யம் என்று அழைக்கப்பட்டது. இந்த வனத்தில் சப்தரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவர் சிவபெருமானை நோக்கி தவம் செய்வதற்காக இங்கு வந்து தங்கி வில்வ மரத்தின் கீழ் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அந்த லிங்க மூர்த்தமே, ஜமதக்னீஸ்வரர் ஆனது. (அக்னி வழிபட்டதால் அக்னீஸ்வரர் என்ற திருப்பெயரும் உண்டு.)

திருக்கோயிலை ஒட்டியுள்ள தீர்த்தக்குளம் அக்னி தீர்த்தமாகவும், இங்கு ஓடும் மருதையாறு, புண்ணிய தீர்த்தமாகவும் திகழ்கிறது. ஜமதக்னியின் அறிவுரைப்படி பரசுராமர் தன் தாய் ரேணுகாதேவியைக் கொன்ற தோஷம் நீங்க, பழுவூருக்கு வடக்கில் ஓடும் மருதை ஆற்றில்தான் நாள்தோறும் தீர்த்தமாடி ஈசனை வழிபட்டு வந்தார். எனவே, இந்த நதி பரசுராம நதி என்ற சிறப்புப் பெயராலும் அறியப்படுகிறது.
Previous Post
Next Post

0 Comments: