ஞாயிறு, 5 நவம்பர், 2023

அருள்மிகு பாலாம்பிகா சமேத கார்க்கோடேஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு பாலாம்பிகா சமேத கார்க்கோடேஸ்வரர் திருக்கோயில்
மாவட்டம் : அரியலூர்
இடம் : காமரசவல்லி
முகவரி : காமரசவல்லி, அரியலூர்
தாலுகா : திருமானூர்

வரலாறு : இங்கு கிழக்குப் பார்த்த திருக்கோலத்தில் ஈசனும்,தெற்குப் பார்த்த கோலத்தில் அன்னை பாலாம்பிகாவும் அருள்பாலிக்கின்றனர். நாகங்களின் அரசரான கார்க்கோடகன், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தவம் இருந்து, ஈசனை பூஜித்த தலம் காமரசவல்லி, கார்க்ககோடகன் பூஜித்த ஈசனான சவுந்தரேஸ்வரர், பின்னாளில் கார்க்கோடேஸ்வரர் ஆனார், புராணங்கள் ஒரு பக்கம் இந்தக் கதைகளைச் சொன்னாலும், ஆலயத்தில் அமைந்த சுமார் 45 கல்வெட்டுக்களும் காமரசவல்லி ஆலயத்தின் புராதனத்தை நாம் பிரமிக்கும் வண்ணம் எடுத்துச் சொல்கின்றன. காமரசவல்லிக்கு திருநல்லூர், கார்க்கோடீஸ்வரம், சதுர்வேதிமங்கலம், ரதிவரபுரம், காமரதிவல்லி என்று பல பெயர்கள் உண்டு. இங்குள்ள கார்க்கோடேஸ்வரர் திருக்கோயில், சுந்தர சோழன் என்கிற ராஜகேசரிவர்மனால் (கி.பி 957-974). கி.பி962 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகக் கல்வெட்டுத் தகவல்கள் கூறுகின்றன. தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜசோழனின் தாத்தாவே இந்த ராஜகேசரிவர்மன் ஆவான். கி.பி. 1260 ஆம் ஆண்டில் போசள மன்னன் வீர ராமநாதன் என்பவனின் தளபதி ஸ்ரீரங்க தண்டநாயக்கரால் இந்த ஆலயம் சீர்செய்யப்பட்டது.

சோழர்கள் தவிர பாண்டியர்கள், போசளர்கள் போன்ற மன்னர்கள் வழி வழியாக இந்த ஆலய வழிபாட்டில் சிறப்புக் கவனம் செலுத்தி வந்திருக்கிறார்கள். சுந்தர சோழன், உத்தம சோழன், முதலாம் ராஜராஜன் முதலாம் ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் மற்றும் மூன்றாம் குலோத்துங்கன், கடாவர்மன் போன்ற மன்னர்கள் தங்கள் காலத்தில் காமரசவல்லி திருக்கோயிலை நிர்வாகித்து வந்ததாகக் கல்வெட்டுத் தகவல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு வருடமும் இந்த ஆலயத்தில் நடந்த வேத பாராயண போட்டி பற்றியும், மார்கழி மாதத்தில் நடக்கும் திருவாதிரை விழா பற்றியும், அந்த விழாவில் நடைபெறும் சாக்கக் கூத்து என்கிற கூத்து பற்றியும் கல்வெட்டுகளில் தகவல் இடம் பெற்றுள்ளது. இந்த ஊரில் நடந்த ஒரு நிலத் தகராறு பற்றிய வழக்கை விசாரிக்க கி.பி. 1240-ல் போசள மன்னன் வீரசோமேஸ்வரன் காமரசவல்லிக்கு வந்து தீர்ப்பு வழங்கிய விவரத்தையும் ஒரு கல்வெட்டு சொல்கிறது. ஆலய வழிபாடுகளுக்கு மாலைகள் கட்டுவதற்கு நந்தவனம் அமைத்த பகுதி பிச்சதேவன் நந்தவனம் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நந்தவனத்தைப் பராமரித்து வந்தவர்கள் வசிப்பதகென ஒரு பகுதியை இருந்துள்ளது. அது திருத்தொண்டன் தொகையன் வளாகம் என வழக்கப்பட்டுள்ளது. காமரசவல்லியில் திருஞானசம்பந்தர் திருமடமும் இருந்து வந்துள்ளது. காஞ்சி மகா பெரியவா 1950 ஆம் ஆண்டில் இந்த ஆலயத்துக்கு வந்து தன் கையாலேயே ஸ்ரீகார்க்கோடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டுச் சென்றிருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.
Previous Post
Next Post

0 Comments: