புதன், 22 நவம்பர், 2023

அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோவில், பரங்கிப்பேட்டை

அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோவில், பரங்கிப்பேட்டை
மாவட்டம் : கடலூர்
இடம் : பரங்கிபேட்டை
முகவரி : பரங்கிப்பேட்டை.சிதம்பரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் திருத்தலம் அமைந்துள்ளது.
தாலுகா : புவனகிரி

வரலாறு : இமயமலை மகா அவதார புருஷர் பாபாஜி பிறந்த தலமும் இதுவே. இவருக்கு இங்கு கோவில் உள்ளது. பாபாஜியின் தந்தை சுவேதநாதய்யர் இதே ஊரிலுள்ள முத்துக்குமர சுவாமி கோவில் அர்ச்சகராகப் பணியாற்றினார். பரங்கிப்பேட்டை, தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

தல வரலாறு : 

என்றும் பதினாறு வயதுடையவராக இருக்க மார்க்கண்டேயர் வரம் பெற்றது போல, என்றும் 12 வயதுடையவராக இருக்க சித்திரகுப்தர் வரம் பெற்ற தலம் பரங்கிப்பேட்டையில் ஆதிமூலேஸ்வரர் கோவிலாகும். காஷ்யப மகரிஷி ஒருசமயம் சிவனை வேண்டி யாகம் நடத்தியபோது, வருணன் மழையைப் பொழிவித்தான். இதனால் அவரிடம் சாபம் பெற்று தன் சக்தியை இழந்தான். இழந்த சக்தி மீண்டும் கிடைக்க, சிவனை வேண்டினான். வருணனுக்கு அருள்புரிந்த சிவன், அவனது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். இவருக்கு 'ஆதிமூலேஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது.

தல பெருமை : 

சித்திரகுப்தர் சிவனருள் பெற்று, எமதர்மனின் கணக்கராக பணி பெற்ற தலம் இது. சித்திரகுப்தர் என்றும் 12 வயதுடையவராக இருக்கும்படியான அருள் பெற்றார். அம்பாள் சன்னதி எதிரே சித்திரகுப்தர் சன்னதி உள்ளது. 

வேண்டுவோருக்கு அமுதம் போல அருளை வாரி வழங்குவதால் இத்தல அம்பிகைக்கு அமிர்தவல்லி என்று பெயர். அம்பிகை சிலையின் கீழ் ஶ்ரீசக்கரம் உள்ளது. 

சித்திரை மாதத்தில் முதல் ஏழு நாட்கள் சிவன், அம்பிகை மீது சூரிய ஒளி விழும். இந்நாட்களில் இங்குள்ள சூரியனுக்கு முதல் பூஜை நடக்கும். 

வருணன் அருள் பெற்ற தலமென்பதால் குறைவின்றி மழை பெய்யவும், அதிக மழைப்பொழிவால் சேதம் உண்டாகாமல் இருக்கவும் இங்கு வேண்டிக் கொள்ளலாம். துர்க்கையை சுற்றி வந்து வழிபடும் வகையில் சன்னதி இருக்கிறது. 

திருநள்ளாறு போல, கோவில் முகப்பில் சனீஸ்வரர் கிழக்கு நோக்கியிருக்கிறார். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு எள் தீபமேற்றி வழிபடலாம்.

பிரார்த்தனை : 

ஆயுள் விருத்தியடையவும், மரண பயம் நீங்கவும், நோய் தீரவும், சஷ்டி அப்தபூர்த்தி, சதாபிஷேகம், செய்து கொள்கிறார்கள். ஞானம், மோட்சம் தரும் கேது பகவானுக்கு அதி தேவதை சித்திரகுப்தர், அதனால் சித்திரகுப்தரை வணங்கினால் இவ்விரண்டும் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். 

இந்த கோவிலில் சித்திரகுப்தருக்கும், பைரவருக்கும் பூஜை செய்து நடை சார்த்தப்படுகிறது. அர்த்தஜாமத்தில் சிவனுக்கு சித்திரகுபதர் பூஜை செய்வதாக ஐதீகம். சித்ராபௌர்ணமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஆயுள்விருத்திக்கு தயிர்சாதம் நைவேத்தியம் செய்கிறார்கள்.

போக்குவரத்து :

சிதம்பரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் திருத்தலம் அமைந்துள்ளது.
Previous Post
Next Post

0 Comments: