ஞாயிறு, 5 நவம்பர், 2023

அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்
மாவட்டம் : அரியலூர்
இடம் : கல்லங்குறிச்சி
முகவரி : கல்லங்குறிச்சி, அரியலூர்
தாலுகா : அரியலூர்

வரலாறு : அரியலூர் சிதளவாடியில் 250 ஆண்டுகளுக்கு முன் வன்னியகுலத்தில் கோபாலன் என்பவர் வாழ்ந்து வந்தார். இவருடைய மகன் மங்கான், மாடுகள் நிறைந்த மந்தை ஒன்றை நிர்வகித்து வந்தார். மந்தையில் கருவற்ற நிலையிலிருந்த அழகிய பசு, மேயச் சென்ற போது காணாமல் போனது. மூன்று நாட்கள் தேடியும் கிடைக்காததால் துயரமடைந்தார். 

மூன்றாம் நாள் இரவு, அவர் கனவில் "அன்ப! கவலைப்படாதே, காணாமல் போன பசு கன்றுடன் மேற்புறமுள்ள காட்டில் இரண்டு மைல் தொலைவில் ஆலமரத்துக்கும், மாவிலிங்க மரத்துக்கும் இடையே சங்கு இலை புதர் அருகேயுள்ளது. காலையில் அங்கே கன்றுடன் பசுவை காண்பாய்!” என இறைவன் கூறி மறைந்தார். காலையில் மங்கான் பணியாட்களுடன் சென்று பார்த்த போது, பசு அம்மாவெனக் கதறி அவரிடம் வந்தது. கன்றுடன் பசு நின்றிருந்த இடத்தில் சாய்ந்து கிடந்த கம்பத்தையும் கண்டார். அதன் மீது பால் சொரிந்திருந்தது. அக்கம்பத்தை மங்கானும், அவரது பணியாட்களும் தொட்டு வணங்கினர். பசு கிடைத்த ஏழாம் நாள் இரவு, மீண்டும் மங்கான், கனவில் "எண்ணாயிரம் ஆண்டு யோகம் செய்வோர் கூட காணக்கிடைக்காத பெரும் பொருளைக் கண்டு வணங்கி வந்த பேதையே! பொய்ப்பொருளாம், உன் பசுவை அழைத்துச் சென்று மெய்ப்பொருளாம் என்னைக் கைவிட்டாய், என்னை உன் அறியாமை! உன் முன்னோர்க்கும் எனக்கும் உள்ள உரிமைத் தொடர்பை நீ அறியாய், சீதளவாடியில் வாழ்ந்து திருமாலை வணங்கிய உன் முன்னோர் பெருமாள் கோயில் கட்ட எண்ணி, கற்கம்பம் கொண்டு வரும்போது வண்டி அச்சு முறிந்ததால் உச்சிமுனை உடைந்து கம்பமாய் என்னை அங்கேயே விட்டு வந்தார்கள். அதே கம்பம் தான் நீ காண்பது'' என அசீரீரி ஒலித்தது. தொடர்ந்து கவலை கொள்ளாதே, கம்பத்தை நிலைநாட்டும் உரிமை உன்னுடையது. 

கம்பத்தை நிலைநிறுத்தி நாளும் வணங்கு. என்னை நீ உணரவே உன் பசுவை மறைத்து வைத்தேன். உன்னையும் உன் வழித்தோன்றல்களையும் காக்க வந்தவன் யான் என்பதை அறிக. கலியுகத்தார் கவலையை நீக்கவே தோன்றினேன். என் பெயர் கலியுக பெருமாள் எனக் கூறி இறைவன் மறைந்தார். மங்கான், அந்த இடத்தில் கோயில் கட்டி வழிபாட்டை துவக்கினார். இந்த கோயில் தற்போது கல்லங்குறிச்சி கலியுகவரதராஜப் பெருமாள் கோயிலாக உள்ளது.
Previous Post
Next Post

0 Comments: