புதன், 22 நவம்பர், 2023

அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோவில்

அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோவில்
மாவட்டம் : கடலூர்
இடம் : திருச்சோபுரம்
முகவரி : திருச்சோபுரம், கடலூர்.
தாலுகா : குறிஞ்சிப்பாடி

வரலாறு : சம்பந்தர் பாடல் பெற்ற மங்களபுரீஸ்வரர் திருக்கோயில், தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் திருச்சோபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் அகத்தியர் வழிபட்ட தலம் என்று கூறப்படுகிறது.

தல வரலாறு : 

கயிலாயத்தில் சிவன், அம்பாள் திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த தென்திசை வந்தார் அகத்தியர். அவர் வரும் வழியில் பல இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். 

வங்கக்கடற்கரை வழியாக சென்றபோது அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. சிவனிடம் தன் வலி தீர்க்க முறையிட விரும்பி, கடல் மணலால் லிங்கம் அமைக்க முயன்றார். ஆனால், எவ்வளவு முயன்றும் லிங்கத்தை சரியாக அமைக்க முடியவில்லை. 

சிவன் தன்னை சோதிப்பதை உணர்ந்த அகத்தியர், அருகிலிருந்த மூலிகை செடிகளை பறித்து, அதன் சாறை மணலில் சேர்த்தார். அக்கலவையால் லிங்கம் அமைத்து வணங்கினார். வலி நீங்கியது. இந்த லிங்கம் இருந்த இடத்தில், பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது.

தல பெருமை : 

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 

இத்தலத்தில் சோபுரநாதர், சதுர வடிவ பீடத்தின் மீது, மணல் லிங்கமாக காட்சி தருகிறார். லிங்கத்தின் மேல் பகுதியிலுள்ள சிறிய உருண்டை போன்ற அமைப்பை, கங்காதேவியின் வடிவம் என்கிறார்கள். லிங்கத்தை அகத்தியர் அமைத்தபோது ஏற்பட்ட கைதடமும் இருக்கிறது. 

அகத்தியர் அமைத்த லிங்கத்திலேயே அம்பாள் ஐக்கியமாகி விட்டதாகவும், அதன் காரணமாக சிவலிங்கத்துக்கு மஞ்சள், குங்குமம் வழிபாடு நடப்பதாகவும் ஐதீகம். 

சில தலங்களில் கையில் வீணை ஏந்தியபடி இசைக்கு அதிபதியாக காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் இசையின் வடிவமாகவே அருளுகிறார். 

தட்சிணாமூர்த்தி சிலையை தட்டிப்பார்த்தால் சப்தஸ்வர ஓசை எழுகிறது. வழக்கமாக வலது கையில் நாகமும், இடது கையில் அக்னியும் ஏந்தியிருக்கும் தட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் வலது கையில் அக்னி, இடது கையில் நாகம் என மாற்றி வைத்துள்ளார். 

இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவிக்காமல், வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுவது சிறப்பம்சம்.

பிரார்த்தனை : 

இசைப்பயிற்சி மாணவர்கள் இங்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக் கொள்கின்றனர்.

திருமணத் தடை உள்ளவர்களும், நோயால் அவதிப்படுபவர்களும் சுவாமிக்கு குளியல் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து வழிபடுகின்றனர்.

போக்குவரத்து :

கடலூரிலிருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் 13 கி.மீ. தூரத்தில் ஆலப்பாக்கம் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து பிரியும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் மங்களபுரீஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ளது.
Previous Post
Next Post

0 Comments: