குடும்ப அமைதிக்கு வெண்கடுகு...
வெண் கடுகு சாமான்யமான பொருள் அல்ல. அது கடவுள் தன்மையைக் கொண்டது. அது தேவ கணம் ஆகும். வெண் கடுகை குறித்த ஒரு கதையைப் படியுங்கள். அதன் சக்தி புரியும். மகத நாட்டை ஆண்டு வந்த மயில்வண்ணன் என்ற மன்னன் பெரும் கொடையாளி. மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்து வந்தான். ஆகவே அவனது புகழ் எங்கும் பரவி இருந்தது. அவன் மீது பொறாமைக் கொண்ட விரோதிகள் அவன் மீது தீய ஏவல்களை ஏவி விட்டார்கள். அதனால் நாளடைவில் அவனால் எதையும் சரிவர யோசனை செய்ய முடியாமல் தத்தளித்தான். அவன் குடும்பத்திலும் அமைதி குலைந்தது. ஆகவே அவன் தனது ராஜ குருவை அழைத்து தன்னுடைய சங்கடங்களைக் கூறி அதற்குப் பரிகாரம் கேட்டான். ராஜகுருவும் அவனுக்கு ஒரு விசேஷ பூஜையை செய்யுமாறு அறிவுரை செய்தார். அதன்படி ஒரு மண்டலம் பைரவப் பெருமானுக்கு வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்கையும் கொண்டு பாத பூஜை செய்தப் பின் சாம்பிராணியை தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகைப் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்டினால் தீய சக்திகள் ஓடிவிடும் என்றும் கூறினார். எதற்காக பாத பூஜையிலும் சாம்பிராணிப் புகையிலும் வெண் கடுகை பயன்படுத்த வேண்டும் என்று மன்னன் கேட்க ராஜ குரு கூறினார் ‘ மன்னா, வெள்ளைக் கடுகுச் செடிகள் குளிர்ச்சியை தருபவை. அவை இமய மலையை சுற்றிக் காவல் புரியும் பைரவரின் தேவ கணங்கள். ஆகவேதான் அவை அதிகம் இமய மலை அடிவாரங்களில் காணப்படும். பிரபஞ்சத்தின் அனைத்து தீய சக்திகளைளையும் அடக்கி ஒடுக்கி வைத்துள்ளவர் பைரவர் ஆவார். ஆகவே வெண் கடுகு உள்ள இடத்தில் தீய சக்திகள் இருக்க முடியாது. அவை புகையாக மாறும்போது, அதன் உள்ளே உள்ள தேவ கணங்கள் தீய ஆவிகளை அடித்துத் துரத்தும்.
சாதாரணமாக ஸூதர்சன ஹோமங்களில் ஓதப்படும் மந்திரங்களில் சர்வ சத்ரு நாசன மந்திர உச்சாடனமான ஓம் க்லீம் க்ருஷ்ணாய என்று துவங்கும் வார்த்தைகள் வலிமை மிக்க மந்திர ஒலிகள். அதை ஓதும்போது பகவான் விஷ்ணுவே ஸூதர்சனராக வந்து சத்ருக்களை அழிப்பார். அப்படிப்பட்ட ஹோமத்தில் வெண்கடுகை ஸமித்து ஹோமம் செய்யும் போது சர்வ சத்ருக்களும் அவர்களுடன் சேர்ந்த தீய ஆவிகளும் அழிவார்கள். அது போலவே போர்களில் அடிபட்டு இறக்கும் தறுவாயில் உள்ள வீரர்கள் பூமியில் கிடக்கும்போது அவர்களை சுற்றி உள்ள இடங்களில் வெண்கடுகைத் தீயிலிட்டுப் புகையை உண்டாக்கினால் யம பகவான் அவர்களின் உயிர்களை பறிக்க வர மாட்டார் என்ற நம்பிக்கை சங்க காலங்களில் இருந்துள்ளது. அதற்குக் காரணம் வெண்கடுகுப் புகை ஸூதர்சனார் வருகை தரும் நிலையைக் குறிப்பதாகும் . ஆகவேதான் வெண் கடுகு கடவுள் தன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்டது’ என்று விளக்கம் அளித்தார். தனது ராஜ குரு கூறியதைப் போலவே மன்னன் மயில்வண்ணன் வெண் கடுகைப் போட்டு பூஜையும், யாகமும் செய்ய அனைத்து தீய ஆவிகளும் வீட்டை விட்டு வெளியேறின. அவர் குடும்பத்தில் மீண்டும் அமைதி ஏற்பட்டது.
0 Comments: