வியாழன், 11 ஏப்ரல், 2024

சுகவாழ்வு அளிக்கும் திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர்!

ஆலயதரிசனம்..

சுகவாழ்வு அளிக்கும் திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர்!

புராண வரலாறு..

திருக்கட்டளை என்பது திருக்கற்றளியில் இருந்து மருவி வந்த சொல் ஆகும். கல்+தளி என்றும் என்று பிரிக்கவேண்டும் தளி என்றால் கோயில் என்று பொருள் எனவே கற்றளி என்பது கற்கோயிலைக்குறிக்கிறது என்பது புரியும். செங்கல்,சுண்ணாம்பு போன்றவை இல்லாமல் பாறைக்கற்களை மட்டுமே அடுக்கிக்கட்டப்பட்ட கோயிலைத்தான் கற்றளி என்று நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

இவ்வாறு முழுவதுமே கற்களினாலாயே கட்டப்பட்டதால்தான் 1150ஆண்டுகளுக்கு மேலாக அழகு குறையாமல் இன்னும் மிளிர்கிறது. இங்குள்ள உள்ள அருள்மிகு மங்களநாயகி சமேத சுந்தரேஸ்வரர் மிகப்பழமையான பரிவார வகைக்கோயிலாகும.; இந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் விஜயாலய சோழீச்சுவரம் கோயில், 

கொடும்பாளுரில் உள்ள மூவர் கோயில் போன்றவiயும் பரிவார வகைக்கோயில்கள்தான், ஆனால் இவையெல்லாம் உள்நாட்டு, வெளிநாட்டு மன்னர்கள் படையெடுப்பால் சிதைக்கப்பட்ட நிலையில் உள்ளன. ஆனால் திருக்கட்டளையில் மட்டும்தான் கட்டப்பட்ட காலத்திலிருந்து அப்படியே கலையழகும், ஆன்மிக உயர்வும் குறையாமல் பரிவார வகைக்கோயில் அமைப்பு விளங்குகிறது. இதனைப்பார்ப்பதே கண்கொள்ளக்காட்சி அகும். 

பரிவார வகைக்கோயில் என்றால் நடுவே சிவபெருமான் அமைந்திருக்கும் சுற்றிலும் வெளிப்பிரகாரத்தில் மதில் சுவரோடு சூரியன், ஏழு கன்னிமார்கள், மூலவிநாயகர், முருகன், ஜேஷ்டாதேவி, சந்திரன், மற்றும் சண்டிகேஸ்வரர் போன்ற கடவுளரின் ஆலயங்கள் தனித்தனியாகக் கட்டப்பட்டிருக்கும். அதுபோல இங்கே அனைத்தும் இருக்கிறது. இக்கற்கோயில் அளவில் சிறியதாக இருக்கலாம் ஆனால் தஞ்சையில் சோழப்பேரரசன் ராஜராஜன் அமைத்த பெரிய கோவிலுக்கு இக்கோயிலும் ஒரு முக்கிய மாதிரியாக விளங்கியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. 

சிவலிங்கம் உள்ள கருவறை மீது எடுப்பிக்கப்பட்டுள்ள ஐம்பது அடி கோபுரத்தின் (விமானம்;) மேல் தட்டில் நான்;கு திசைகளிலும் நான்கு நந்திகள் வைக்கப்பட்டிக்கிறது. இதுபோல தஞ்சைப்பெரிய கோயிலும் மூலவர் வீற்றிருக்கும் கருவறை மீது கட்டப்பட்டிருக்கும் விமானத்தின் மேல் தட்டிலும் நந்தி திரு உருவங்களைக்காணலாம். 

இங்குள்ள கல்வெட்டுக்கள் மூலமாக சிவபெருமான், கார்குறிச்சி கற்றலைப்பெருமானடிகள், பின்னர் ஈஸ்வரமுடையார், இப்போது சுந்தரேஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. அதனால் இப்பகுதியில் இருக்கும் கோவில்களுக்கு சுந்தரமகாளி, சுந்தரவிநாயகர் அதுபோன்ற திருநாமங்களும் மனிதர்களுக்கு சோமசுந்தரம், சுந்தரம், சுந்தரக்கண்ணு, சுந்தரம்பாள், சுந்தரி போன்றவர்களுடைய பெயர்களும் அதிகளவில் வைத்துள்ளனர். இந்த சோமசுந்தரேஸ்வரை வந்து வேண்டினால் நோய்வாய்ப்பட்டவர்கள் நல்ல சுகமுடன் வாழ்வார்கள.;

திருமணம் முடித்தவர்கள் மங்கள நாயகியின் முன்நின்று வேண்டி அதன் குங்குமத்தை தன்னுடைய மாங்கல்யத்தில் வைத்துக்கொண்டால் மாங்கல்யம் நிலைத்து அந்த தம்பதியினர் 100ஆண்டுகள் வாழ்வார்கள் என்பது ஐதீகம். 

இக்கோயில் ஆதித்திய சோழன் காலத்தில் (கி.பி.870-907) ஆகிய ஆண்டுகளில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று மூலவர் கோயில் வடபுறச்சுவரில் சிதிலமடைந்த நிலையில் உள்ள கல்வெட்டுக்குறிப்பிடுகிறது. மூலவர் வீற்றிருக்கும் கருவறை 12பக்கமுள்ள சதுர வடிவில் அமைந்திருக்கின்றது கருவறைக்கு முன் அரத்த மண்டபமும், அதனையொட்டி முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1070-1120) காலத்தில் கட்டப்பட்ட முகமண்டபமும் உள்ளன. 

கருவறைக்கு மேலேயுள்ள கோபுரம் சதுர வடிவில் உள்ளது. அமைக்கப்பட்டதாகும். இன்னொறு கல்வெட்டில் மிலட்டுரில் நடந்த ஓரு போரில். கார்குறிச்சியைச்சேர்ந்த போகேந்திர சிங்க பேரரையன் என்பவரது மரணத்தைப்பற்றிக்கூறுகிறது. அவரது தம்பி அனுக்கன் என்பவரைப்பற்றியும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவர் தங்களுக்கிடையே பகைமை தீர வேண்டுமென்பதற்காகக் கோயிலில் விளக்கெரிக்கத்தேவைப்படும் நெய் எடுப்பதற்காக 25ஆடுகளைத்ததனமாக கொடுத்த செய்தியும் கல்வெட்டில் சொல்லப்படுகிறது. 

தலப்பெருமை..

தெட்சிணாமூர்த்தி வீராடனமூர்த்தி, பிக்ஷாடானமூர்த்தி ஆகிய மூன்று அவதாரங்களில் இங்கே இருக்கிறார். இதுபோன்ற மூன்று அவதாரங்கள் ஒரே இடத்தில் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஜேஷ்டாதேவி தன்னுடைய குழந்தைகளான மாந்தி,குளிகன் ஆகியோரை கையில் ஏந்தியபடி இருக்கிறது இதற்கு மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியில் அபிஷேகம் நடைபெறுகிறது. 

பங்குனி மாதத்தில் நேரடியாக சூரியனின் ஒளி சிவலிங்கம் மீது படும்போது சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ஒரு காலத்தில் தேரோட்டம் நடைபெற்றுவுள்ளது ஆனால் ஒரு நாள் அத்தேர் சுற்றி வரும்போது எதிர்பாராமல் கோவில் முன்பு உள்ள குளத்தில் விழுந்துவிட அந்நாளில் இருந்து தேரோட்டம் நடைபெறவில்லை என்று சொல்லப்படுகிறது. 

சிறப்பு விழாக்கள் ஆருத்ரா தரிசனம், மகாசிவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை சோமவாரம்.
Previous Post
Next Post

0 Comments: