புதன், 11 செப்டம்பர், 2024

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

தங்க நிற மலர்களை உடைய கொன்றை, மங்கலகரமான மரமாகும். திருத்துறையூர், திருப்பந்தணைநல்லூர், திரு அச்சிறுப்பாக்கம், திருக்கோவிலூர் முதலிய பதினைந்துக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் தல விருட்சமாக விளங்குகிறது. வன்னிக்கு அடுத்தபடியாக அதிகமான திருக்கோயிலில் தல மரமாக இது திகழ்கிறது. கொன்றை மரம் சமஸ்கிருத மொழியில் குண்டலினி என அழைக்கப்படுகிறது. தங்க நிற மலர்களில் சுருண்டு இருக்கும் மகரந்த தாள்கள் பாம்பாக உருவம் உள்ள குண்டலினி சக்தியின் இருப்பிடம் என்று கருதப்படுகிறது. கோடை மாதம் முழுவதும் மரத்தில் கொத்து கொத்தாக மஞ்சள் வண்ணத்தில் பூத்திருக்கும் கொன்றை மலர்கள் பார்க்கப் பார்க்க அழகாகக் காட்சி தரும். இதற்கு சித்திரைக் கனிப்பூ என்ற பெயரும் உண்டு.

இதன் வேர், பட்டை, இலைகள், விதைகள் மருத்துவ குணம் கொண்டவை. பழம் பழுத்து வர விதைகள் ஒன்றை விட்டு ஒன்றாகப் பிரிந்து விடும். கொன்றை சரும வியாதிகள், உடல் பருமன், கொலஸ்ட்ரால் குறைப்பு மற்றும் குஷ்டம் போன்ற வியாதிகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. கொன்றை இலையை அரைத்து படர்தாமரைக்கு பூசலாம்.

கொன்றை இலை கொழுந்திலிருந்து பிழிந்த சாற்றில் 150 மில்லி கிராம் எடுத்து சர்க்கரையுடன் சேர்த்து உட்கொள்ள வயிற்றில் உள்ள கிருமி மற்றும் திமிர்பூச்சி மலத்துடன் வெளியேறும். கொழுந்து இலைகளுடன் 10 கிராம் மோர் சேர்த்து ஒரு மாதம் சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும். இதேபோல் பூவுடன் மோர் சேர்த்து உட்கொள்ள வயிற்றுப் புண்கள் குணமாகும். கொன்றைப் பூவுடன் பழச்சாறு விட்டு அரைத்து உடம்பில் தேய்த்து குளிக்க தேமல், சொறி, கரப்பான் நீங்கும். இதன் பூவை குடிநீரில் சேர்த்து குடிக்க, வயிற்று வலி, குடல் நோய்கள் நீங்கும்.

பாலுடன் இதன் பூவை கலந்து காய்ச்சி உண்ண, உள் உறுப்புகளை வலிமைப்படுத்தும். மெலிந்தவர்களுக்கு நல்ல பலன் தரும். ஃபங்கஸ் எனப்படும் நுண்ணுயிர்களுக்கு கொன்றை மர வேர் எதிரி. வேர் பட்டையிலிருந்து எடுக்கப்படும் பால், மூட்டு வலி ஆர்த்ரைடீஸ், சோரியாஸிஸ்க்கும் நல்ல மருந்து. சரும அரிப்பு, நமைச்சல் இவற்றைப் போக்கும்

சரக்கொன்றை பூவை நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி இரண்டு சொட்டுகள் காதில் விட்டு வர காது நோய்கள் குணமாகும். தேமல், சொறி, சிரங்கு உள்ளவர்கள் கார்போக அரிசியுடன் கொன்றை பூவை சேர்த்து அரைத்து பூசி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.
Previous Post
Next Post

0 Comments: