சனி, 14 செப்டம்பர், 2024

குடல் ஆரோக்கியம்

குடல் ஆரோக்கியம்


உங்களது குடல் ஆரோக்கியம், உங்களது கொலஸ்ட்ரால் அளவு முதல் மனநோய் வரை அனைத்துடனும் சம்பந்தப்பட்டது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
நமது உடல்நலத்தில் குடலின் பங்கு என்ன என்பது பற்றிய நமது அறிவு விரிவடைந்து வருவதால், குடல் ஆரோக்கியத்தின் மீது நமது கவனமும் அதிகரித்து வருகிறது.
2021-இல் உலகளாவிய புரோபயாடிக்ஸ் சந்தை ஆண்டுக்கு 60 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. இது 2030-ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் 7%-க்கும் அதிகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனமான போலரிஸ்-இன் தரவுகள் கூறுகின்றன.

குடல் ஆரோக்கியம் ஏன் முக்கியமானது...

குடல் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துவது...

மூளையில் காணப்படும் செரோடோனின் போன்ற நரம்பியக்கடத்திகளை குடலும் உற்பத்தி செய்கிறது
ஆரோக்கியமான குடல் என்றால் என்ன?

குடலின் கட்டமைப்பு சிக்கலானது. அதனால், மற்ற உறுப்புகளின் ஆரோக்கியத்தை அடையாளம் காண்பதைப் போல, ஆரோக்கியமான குடலை அடையாளம் காண்பது எளிதானது அல்ல. மேலும், குடல் ஆரோக்கியத்தை அளவிடுவதற்கு எந்த ஒரு தனிப்பட்டக் கருவியும் இல்லை.
நமது குடல் நுண்ணுயிரிகளால் நிறைந்துள்ளது. அவற்றின் எண்ணிக்கை எவ்வளவு அதிகமானது என்றால், அவற்றை ஒன்றாக இணைக்க முடிந்தால், அவற்றின் எடை 1.8 கிலோவுக்கு மேல் இருக்கும்.
ஒவ்வொரு கிராம் குடலிலும் 100 பில்லியன் (10,000 கோடி) பாக்டீரியாக்கள் உள்ளன.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் குடலுக்கும் மூளைக்கும் இடையிலான உறவை ஆராய்ச்சி செய்யும் டாக்டர் கேடரினா ஜான்சன் கூறுகையில், ஆரோக்கியமான குடல் பலதரப்பட்ட நுண்ணுயிரிகள் வளர்வதை ஊக்குவிக்கிறது.
நுண்ணுயிர் அறிவியல் ஒப்பீட்டளவில் ஒரு இளம் துறை, என்கிறார் கேடரினா ஜான்சன். அதாவது ஆரோக்கியமான குடல் எப்படி இருக்கும் என்று நமக்கு விரிவாகத் தெரியாது.

குடல் ‘இரண்டாவது மூளை’ என்று அழைக்கப்படுகிறது
ஆரோக்கியமான குடல் ஏன் முக்கியம்?

குடல் ‘நமது உடலின் அனைத்து உறுப்புகளையும்’ பாதிக்கலாம், என்கிறார் டாக்டர் ஜான்சன்.
மூளைக்கும் குடலுக்கும் இடையே ‘குடல்-மூளை அச்சு’ (gut–brain axis) எனப்படும் வலுவான தொடர்பு அமைப்பு உள்ளது.
ஒவ்வொன்றும் மற்றொன்றுக்கு இன்றியமையாதவை. குடல் நுண்ணுயிரிகள் இல்லாத நிலையில் மூளை வளர்ச்சி ஆரோக்கியமாக நடக்கவில்லை என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
குடல் ‘இரண்டாவது மூளை’ என்று அழைக்கப்படுகிறது.
நியூரான்கள் நமது மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தில் காணப்படும் செல்கள் ஆகும். அவை நம் உடல் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அதற்குச் சொல்கின்றன.

மூளையில் காணப்படும் செரோடோனின் போன்ற நரம்பியக்கடத்திகளை குடலும் உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் நமது மனநிலையை ஒழுங்குபடுத்துவதில் குடலும் ஒரு பங்கு வகிக்கிறது.
நமக்கு நன்கு தெரிந்த குடலின் செயல்பாடு உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதாகும்.
"நீர் மற்றும் தாதுக்களை நாம் மலம் வழியே இழக்க முடியாது," என்று இந்தியாவின் இரைப்பைக் குடலியல் நிபுணர் டாக்டர் வெங்கட்ராமன் கிருஷ்ணா விளக்குகிறார்.

இங்கிலாந்தில் உள்ள ‘கட் ஹெல்த் டாக்டர்’ என்றும் அழைக்கப்படும் டாக்டர் மேகன் ராஸ்ஸி, குடல் நுண்ணுயிரிகளில் ஏற்படும் சமநிலைக் குலைவுகள் 70-க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாட்பட்ட நோய்களுக்குக் காரணமாக அமைகின்றன, என்கிறார். இவற்றில் இதயம் மற்றும் சுவாச நோய்கள் முதல் முடக்கு வாதம் போன்ற நோய்கள் வரை அடங்கும்.



நமது நோயெதிர்ப்பு உயிரணுக்களில் சுமார் 70% நமது குடலில் வாழ்கின்றன. இது நோயெதிர்ப்பு அமைப்புடன் ஒரு ‘தொடர்ச்சியான செய்திப் பரிமாற்றத்தில்’ இருக்கிறது என்று டாக்டர் ராஸ்ஸி கூறுகிறார்.
அதனால்தான், “சிறந்த குடல் ஆரோக்கியம் கொண்டவர்கள் அதிக மீள்திறன் கொண்ட நோயெதிர்ப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளனர்," என்று அவர் கூறுகிறார்.

குடல் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துவது...

2018-ஆம் ஆண்டில் ‘அமெரிக்க குடல் திட்டத்தின்’ (American Gut Project) ஆராய்ச்சியைத் தொடர்ந்து, மக்கள் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 30 வெவ்வேறு தாவரங்களைச் சாப்பிட வல்லுநர்கள் பரிந்துரைக்கத் துவங்கினர்.
பழங்கள், மற்றும் காய்கறிகள் மட்டுமல்ல, விதைகள், மசாலா, மற்றும் கொட்டைகள் போன்றவையும் அடங்கும்.

சமையல் குறிப்புகளில் சிறிய மாற்றங்களைச் செய்து, பல்பொருள் அங்காடியில் பலவகையான பழங்களைத் தேடுவது போன்ற எளிய முறைகளை டாக்டர் ராஸ்ஸி பரிந்துரைக்கிறார்.
நார்ச்சத்து நிறைந்த உணவு, வயிறு நிறைந்தது போன்ற உணர்வை வழங்குகிறது, செரிமானத்திற்கு உதவுகிறது, மலச்சிக்கலைத் தடுக்கிறது, என பிரிட்டனின் தேசியச் சுகாதார சேவை தெரிவிக்கிறது.
இந்த அமைப்பு பெரியவர்கள் ஒரு நாளைக்கு 30 கிராம் நார்ச்சத்து சாப்பிட பரிந்துரைக்கிறது.
நார்ச்சத்துடன் கூடிய மாவு, அல்லது தானிய ரொட்டிகளை உட்கொள்வது, பழுப்பு அரிசி, அல்லது முழு கோதுமை ஆகியவற்றை உட்கொள்வது உங்கள் நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்கலாம்.
நார்ச்சத்துக்கான பிற உணவுகளில், உருளைக்கிழங்குகள் தோலுடன் (வேகவைத்த உருளைக்கிழங்கு) மற்றும் பீன்ஸ், பருப்பு அல்லது கொண்டைக்கடலை போன்ற பருப்பு வகைகள், ஆகியவற்றை குழம்பு, கூட்டு, மற்றும் சாலட்களில் சேர்க்கலாம்.



ப்ரீபயாடிக் உணவுகள்...

 (சில வகையான நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள்) குடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

வாழைப்பழம், வெங்காயம், பூண்டு, முட்டைக்கோஸ், ஓட்ஸ், அஸ்பாரகஸ், சிட்ரஸ் பழங்கள் ஆகியவை நார்ச்சத்துக்கான மேலும் சில எடுத்துக்காட்டுகள்.
பாகிஸ்தானில் உள்ள இரைப்பைக் குடலியல் நிபுணரான டாக்டர் ஹனிஷா கெமானி, நமது இருபதுகளில் ‘சமச்சீரான, ஊட்டச்சத்து நிறைந்த உணவு முறையை’ நிறுவுவது ‘நீண்ட கால ஆரோக்கியத்திற்கு முக்கியமானது’ என்கிறார்.
"இந்த முக்கியமான காலகட்டத்தில் செய்யப்படும் உணவுத் தேர்வுகள் நாள்பட்ட நோய்களை உருவாக்கும் அபாயத்தைத் தீர்மானிக்கும். இது மன மற்றும் அறிவாற்றல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம், பிற்கால தசாப்தங்களில் ஒட்டுமொத்த உடல் நலனை வடிவமைக்கும்," என்று அவர் கூறுகிறார்.
இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் இடையில் குறைந்தது 12 மணிநேர இடைவெளி விடுவது குடல் நுண்ணுயிரிகளுக்கு நன்மை பயக்கும், என லண்டன் கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் தனது ‘ஸ்பூன்-ஃபெட்: உணவைப் பற்றி நமக்குக் கூறப்பட்ட அனைத்தும் தவறு’ என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

குடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள் எவை...?

அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகள், மது, மற்றும் புகையிலை பயன்பாடு உங்கள் குடலுக்கு நல்லதல்ல என்று டாக்டர் கிருஷ்ணா விளக்குகிறார்.
மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவில் 'நல்ல' பாக்டீரியாவை அடக்கும், அல்லது 'கெட்ட' பாக்டீரியாவை அதிகரிக்கும் பொருட்கள் உள்ளன.
உலகில் நீங்கள் எங்கு இருந்தாலும், சுகாதாரமற்ற தெருவோர உணவுகளைத் தவிர்க்கவும், ஆபத்தான வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்களைத் தவிர்க்க, பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவி உண்ண வேண்டும் என டாக்டர் கிருஷ்ணா மேலும் கூறுகிறார்.
மன அழுத்தம் நம் குடலையும் பாதிக்கிறது. இது அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் குடல் புண்களை அதிகரிக்கலாம்.
டாக்டர் ஜான்சன் கூறுகையில், அதிக மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு நுண்ணுயிரிகளின் பன்முகத்தன்மை குறைந்துவிடும் என்கிறார்.

புரோபயோட்டிக் உணவுகள் பலனளிக்குமா...?

ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகப் பயன்படுத்தப்படும் போது புரோபயோட்டிக்குகள் வேலை செய்யும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
டாக்டர் மேகன் ராஸ்ஸி, "சரியான நிலையில், சரியான கால அளவுக்கு, நீங்கள் சரியான புரொபயோட்டிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும்,” என்கிறார்.
"இன்று நீங்கள் பல்பொருள் அங்காடிகளில் பார்க்கும் ஒரு புரோபயாடிக் தயாரிப்பு, குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. விளம்பரங்கள் சொல்வதுபோல அவற்றை ஒவ்வொரு நாளும் உட்கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை," என்கிறார் அவர்.
''சில நாடுகளில், நிறுவனங்கள் குடல் சுகாதார சோதனைகளை வழங்குகின்றன, அங்கு நீங்கள் ஆய்வகத்தில் ஆய்வுக்காக உங்கள் மலத்தைக் கொடுப்பீர்கள்.''
''இந்த நிறுவனங்கள் சொல்வதைப்போன்ற பலன்களை இந்தப் பரிசோதனைகள் வழங்குவதில்லை, ஆனால் உங்கள் குடல் நுண்ணுயிரிகளின் பன்முகத்தன்மை பற்றிய புரிதலை இவை வழங்க முடியும்'' என்று டாக்டர் ராஸ்ஸி கூறுகிறார்.
பிரிட்டிஷ் மருத்துவரும் டிவி தொகுப்பாளருமான டாக்டர் சாண்ட் (Xand) இவை முற்றிலும் பலனளிக்குமா என்பது சந்தேகம்தான் என்று ஒப்புக்கொள்கிறார்.
"அவர்கள் உங்களுக்குப் பொதுவான ஆலோசனையை வழங்குவார்கள். ஆனால், அது ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது அல்ல," என்று அவர் கூறுகிறார். "உங்கள் பணத்தைச் சேமிக்கவும், உங்களுக்குக் குடல் பிரச்னைகள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் பேசவும், என்று நான் கூறுவேன்," என்கிறார் அவர்.
Previous Post
Next Post

0 Comments: