வெள்ளி, 4 அக்டோபர், 2024

எலும்பு சத்துக்கு இந்த ஊட்டச்சத்துகளும் உணவில் தேவை… செக்-லிஸ்ட் இங்கே..!

எலும்பு சத்துக்கு இந்த ஊட்டச்சத்துகளும் உணவில் தேவை… செக்-லிஸ்ட் இங்கே..!


உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும், பகுதிக்கும், செயல்பாட்டுக்கும் ஒவ்வொரு ஊட்டச்சத்து இன்றிமையமாதது. தசை வளர்ச்சிக்கு புரதச்சத்து போல, ஆற்றலுக்கு கார்போஹைட்ரேட் போல, எலும்புகளுக்கு கேல்ஷியம் அவசியம். எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க, எலும்பு நோய்கள் தாக்காமல் இருக்க, தினசரி உணவில் கேல்ஷியம் நிறைந்த உணவு சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், சில நேரங்களில் கேல்ஷியம் மட்டுமே போதாது. எலும்புகள் கூடுதல் வலுவாக, எந்த குறைபாடும் எலும்புகளை பாதிக்காமல் இருக்க, உணவில் வைட்டமின் டி, புரதம் மற்றும் பல ஊட்டச்சத்துகளை சேர்க்க வேண்டும்.

வலுவான எலும்புகளுக்கான உணவுகள்:

உங்கள் உடலில் உள்ள எலும்புகள் வலுவாக இருந்தால் தான், உடல் உறுதியாக இருக்கும். எலும்புகள் அடர்த்தி குறைந்தாலோ அல்லது தேய்மானம் அடைந்தாலோ, உடல் வலுவில்லாமல் போகும். எனவே, நீங்கள் உண்ணும் உணவுகள், உங்கள் எலும்புகளை பாதிக்கும். அதனால் தான், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். பலரும் நினைப்பது போல கேல்ஷியம் நிறைந்த உணவுகள் மட்டுமே எலும்புகளை வலுப்படுத்த போதும் என்பது தவறானது. ஆனால், கேல்ஷியத்துடன், மற்ற ஊட்டச்சத்துகளும் தேவை.

எலும்பை வலுவாக்கும் ஊட்டச்சத்துகள் மற்றும் உணவுகள்:

கேல்ஷியம்:

கேல்ஷியம் எலும்பின் அடிப்படைஊட்டச்சத்து. கேல்ஷியம் இல்லையென்றால் எலும்பு வலுவிழந்து, எளிதில் உடையும் வாய்ப்பு உள்ளது. தேவையான கேல்ஷியம் சத்தை பால் பொருட்களான வெண்ணெய், நெய், தயிர் போன்றவற்றில் இருந்து பெறலாம். இது ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்புகளில் ஏற்படும் ஓட்டைகளை இடைவெளிகளை தவிர்க்க உதவும். மேலும், ப்ரோகோலி, சால்மன் மீன், பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள் ஆகியவற்றில் உங்களுக்குத் தேவையான கேல்ஷியம் சத்தைப் பெறலாம்.

வைட்டமின் – டி:

உங்கள் எலும்புகளை வலுவாக்குவதில் கேல்ஷியம் எப்படி முக்கியமான சத்தோ, அதே அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது வைட்டமின் டி. உடல் தேவையான வைட்டமின் டி சத்து பெற்றால் மட்டுமே, கேல்ஷியத்தை கிரகிக்க முடியும். நமக்குத் தேவையான வைட்டமின் டி, செலவே இன்றி, சூரிய ஒளியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். தினமும் காலை அல்லது மாலையில் சில நிமிடங்கள் சூரிய ஒளியில் நின்றாலே, அன்றாட வைட்டமின் டி தேவை பூர்த்தியாகிவிடும். இது மட்டுமின்றி, புளிக்கவைக்கப்பட்ட மாவு மற்றும் கிரில் செய்யப்பட்ட சால்மன் மீன், காளான் போன்ற உணவுகளும் வைட்டமின் டி நிறைந்தவை.

புரதம்:

புரதம் என்பது தசை வளர்ச்சிக்கான ஊட்டச்சத்து என்ற எண்ணம் மிகவும் தவறானது. எலும்பு ஆரோக்கியத்துக்கும் புரதம் முக்கியம். எலும்பு உடைந்தாலோ அல்லது தேய்மானம் இருக்கும் பட்சத்திலோ, உடல் தன்னை சரி செய்து கொள்ள, புரதம் தேவை. பால் பொருட்கள் உட்பட, விதைகள், வேர்கடலை, கொண்டை கடலை, பட்டாணி, ராஜ்மா, மொச்சை, டோஃபு, பனீர், கொய்யா ஆகிய உணவுகளில் இருந்து புரதச்சத்தைப் பெறலாம்.

மக்னீசியம் மற்றும் பொட்டாசியம்:

எலும்பை வலுவாக்குவதில், மிகவும் முக்கிய பங்கு, கனிமங்களான மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றுக்கு உள்ளது. இந்த இரண்டு சத்துக்களுமே, விதைகள், கொட்டைகள், பாலக்கீரை, வாழைப்பழம், சோயா ஆகிய உணவுகளில் காணப்படுகின்றன. மேலே குறிப்பிட்டுள்ளவைத் தவிர்த்து, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் ஏ ஆகிய வைட்டமின்களும் எலும்பு ஆரோக்கியத்துக்கு தேவை.
Previous Post
Next Post

0 Comments: