செவ்வாய், 26 நவம்பர், 2024

அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோவில்

தினம் ஒரு திருத்தலம      

பக்தர்களின் நம்பிக்கை.. நினைத்த காரியம் நிறைவேற.. அம்பிகை வழிபாடு..

அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோவில்

கோவில் என்றாலே அதில் பழங்காலத்து பெருமைகளும், தனிச் சிறப்பும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் பெருமைமிக்க கோவில்களுள் ஒன்றான குறுங்காலீஸ்வரர் கோவிலில் உள்ள அதிசயங்களை பற்றி இப்போது பார்க்கலாம். 

*அமைவிடம்:*

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு என்னும் ஊரில் அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. 

*செல்லும் வழி:*

சென்னையிலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் கோயம்பேடு அமைந்துள்ளது. கோயம்பேட்டிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது. 

*இக்கோவிலின் சிறப்புகள்:*

இங்கு சிவன் குறுகியவராக (குள்ளமானவராக) காட்சி தருகிறார். இதனால் சுவாமிக்கு குறுங்காலீஸ்வரர் என்ற பெயர் உண்டானது. குசலவம் என்றால் குள்ளம் என்றும் பொருள் உண்டு. இதன் அடிப்படையில் இவர் குசலவபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். 

இத்தலத்தில் அம்பாள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி தன்னை வேண்டும் பக்தர்களுக்கு விரைந்து வந்து அருள் தருவது சிறப்பு. 

தட்சிணாமூர்த்தி, சுவாமி சன்னதியின் பின்புறத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் இருப்பது அபூர்வம். 

இக்கோவிலுக்கு வெளியே உள்ள ஒரு தூணில் சரபேஸ்வரரின் சிற்பம் அமைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இவருக்கு பூஜை நடக்கிறது. 

பிரகாரத்தில் ஜுரகேஸ்வரர், சாஸ்தா, லட்சுமி, ஞானசரஸ்வதி, நாகர் ஆகியோரும் இருக்கின்றனர். 

நவக்கிரக சன்னதியின் தரைப் பகுதி பஞ்ச நிறத்தில் வித்தியாசமாக உள்ளது. இக்கோவில் வடக்கு நோக்கியிருப்பதால் மோட்ச தலமாக கருதப்படுகிறது. 

*திருவிழாக்கள்:*

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, ரத சப்தமி போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

*பிரார்த்தனைகள்:*

இக்கோவிலின் வலப்புறம் உள்ள அம்பிகையை வணங்கினால், திருமணம் கைகூடும் என்பது இக்கோவிலில் வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
Previous Post
Next Post

0 Comments: