அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் ஈசனும் அருள்புரிவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மும்மூர்த்தி வடிவமான அரச மரத்திற்கு பூஜைகள் செய்வதும், பிரதட்சணம் செய்து வணங்குவதும், துன்பங்கள் ஏற்படுவதற்குக் காரணமான பாவங்களைப் போக்கி நல்ல அறிவையும் பெற்றுத்தரும்.
சூரியன் உதயமாகும் நேரம் முதல் காலை சுமார் 10.30 மணி வரையில், சூரியனின் கிரணங்கள் அரச மரத்தில் விழுவதால், அப்போது அரசமரத்திலிருந்து வெளிவரும் காற்று, நமது உடலுக்கு நன்மையைத் தரும். அந்த நேரத்தில் அரச மரத்தை சுற்றி வந்தால் அதிக நன்மைகள் அடையலாம்.
மற்ற நாட்களைவிட, சனிக்கிழமையன்று காலை நேரத்தில் அரச மரத்திலிருந்து வெளிவரும் சக்தி அதிகமாகக் காணப்படும் என்பதால் சனிக்கிழமைகளில், அரச மரத்தின் அடியில் சிறிது நேரம் அமர்ந்திருப்பதும், அரச மரத்தை வலம் வருவதும் மிகவும் நன்மையைத் தரும்.
அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.
குறிப்பாக, பல நாட்களாக குழந்தை பாக்கியமில்லாதவர்களின் தோஷத்தைப் போக்கி குழந்தை பாக்கியத்தைப் பெற அரச மரத்தை சுற்றிவரலாம்.
கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் காலை சுமார் 8.00 மணிக்குள், உடல் மற்றும் உள்ளத் தூய்மையுடனும், பக்தியுடனும் அரச மரத்தை 108, 54 அல்லது 12 முறை பிரதட்சணம் செய்ய (வலம் வர) வேண்டும்.
சனிக்கிழமையைத் தவிர, மற்ற நாட்களில் அரச மரத்தை பூஜைகள் பிரதட்சணம், நமஸ்காரம் செய்யலாமே தவிர, அரச மரத்தை கையால் தொடக்கூடாது.
நடுப்பகல், மாலை, இரவு போன்ற நேரங்களில் அரச மரத்தை வழிபாடு செய்வதை தவிர்த்தல் நல்லது.
அரசமரத்தை எந்தெந்த கிழமைகளில் சுற்றினால் என்ன பலன் கிடைக்கும் :
திங்கட்கிழமை சிவபெருமானை மலர்களால் அர்ச்சித்து அரசமரத்தை வலம் வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனை அர்ச்சித்து அரச மரத்தை வலம் வந்தால் காரியசித்தி, உத்யோக உயர்வு முதலான பல்வேறு வெற்றிகளும் கிடைக்கும்.
புதன்கிழமை அன்று அரச மரத்தை வலம் வருபவர்களுக்கு வியாபாரத்தில் லாபங்கள் கிடைக்கும்.
வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தியை வணங்கிய பின்பு, அரச மரத்தை பிரதட்சணம் செய்தால் கல்வி ஞானமும், கீர்த்தியும் பெற முடியும்.
வெள்ளிக்கிழமை லட்சுமியை வணங்கி, அரச மரத்தை வலம் வந்தால் ஐஸ்வரியமும் யோக சுபிட்சங்களும் உண்டாகும்.
சனிக்கிழமை அன்று வலம் வருபவர்களுக்கு கஷ்டங்கள் விலகி லட்சுமியின் அருள் கிடைக்கும்.
சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அரசமரத்தைச் சுற்றுவது கூடாது.
அமாவாசையும், திங்கட்கிழமையும் சேர்ந்துவரும் நாளில் அரசமரத்தை வலம்வருவது இன்னும் சிறப்பு. மனோபலம் அதிகரிக்கும்.
0 Comments: