பயன் தரும் பாகங்கள் -:
இலைகள் மற்றும் வேர்கள்.
இதன் பூர்வீகம் வட அமரிக்கா மற்றும் மத்திய அமரிக்கா. பின் இது தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, பசிபிக் தீவுகள், ஆஸ்திரேலியா, நைஜீரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் பரவியது. இது விதை மூலம் இனப் பெருக்கும் செய்யப்படுகிறது.
மருத்துவப்பயன்கள்-:
‘நமஸ்காரி’ என்ற இந்த மூலிகை காந்த சக்தி உடையது. தெய்வீக மூலிகையுமாம். தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல் பெருகி மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்கும். நினைத்தது நடக்கும். மனதில் உணர்ச்சி ஊட்டி சிற்றின்பத்தை மிகுவிக்கும். அதனால் ‘காமவர்த்தினி’ என்றும் கூறுவர். மாந்திரீகத் தன்மை உடையது.
“பகரவே இன்னமொரு மூலிகேளு
பாங்கான சிணுங்கியப்பா காப்புக்கட்டிநிகரவே
பூசையிடு மந்திரத்தால் நினைவாக
உத்தமனே தூபமிட்டு வைத்துக் கொள்ளே.”
என்பது ஒரு பழம் பாடல், இதன் வேரை வழிபாடு செய்து பிடுங்கி மாந்திரீகம் செய்யப் பயன்படுத்துவர்.
இதன் இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் கரையும். கீழ்வாதம் கரையும்.
இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும். சிற்றின்பம் பெருகும். 10-20 நாள் சாப்பிட வேண்டும்.
சூடு பிடித்தால் சிறுநீர்த் தாரை எரியும். இதற்கு இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும். ஆண்மை பெருக இரவு பாலில் 15 கிராம் கலந்து சாப்பிட வேண்டும். சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும் . வயிற்றுப்புண்ணும் ஆறும்.
வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலிகை என்பதால் துளசி போல வீட்டில் வைக்கலாம். நாளும் தொட வாய்ப்பாகும். மாத விலக்காகும் பெண்கள் இச்செடியின் அருகில் செல்லக் கூடாது, தொடுதலும் கூடாது.
‘மேகநீரைத் தடுக்க மேதினியிற் பெண்வசிய
மாகவுன்னி னல்கு மதுவுமன்றி-தேகமிடைக்
கட்டாகக் காட்டுகின்ற சாலை துரத்திலிடுந்
தொட்டாற் சுருக்கியது சொல்.’
குணம்- தொட்டாற் சுருங்கி மேகமூத்திரத்தை நீக்கும், பெண் வசியம் செய்யும், உடலில் ஓடிக் கண்டுகின்ற வாதத் தடிப்பைக் கரைக்கும் என்க.
உபயோகிக்கும் முறை -:
ஒரு பலம் தொட்டாற்சுருங்கி வேரைப பஞ்சுபோல் தட்டி ஒரு மட் குடுவையில் போட்டு கால் படி சலம் விட்டு அடுப்பிலேற்றி வீசம் படியாகசுண்ட, வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற சலம் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும் . இவற்றால் நீர் அடைப்பு, சல்லடைப்பு தீரும். இதன் இலையையும் வேரையும் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு விராகனெடை பசுவின் பாலில் போட்டுக் கொடுத்துக் கொண்டு வர மூலம், பவுத்திரம் போம். இதன் இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும். இதன் இலையை மெழுகு போலரைத்து விரை வாதம், கை,கால் மூட்டுக்ளின் வீக்கம் இவைகட்கு வைத்துக் கட்ட குணமாகும். இதன் இலைச் சாற்றைப் பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களுக்கு செலுத்தி வைக்க ஆறிவரும். இதன் இலையை ஒரு பெரிய மட் கடத்தில்போட்டுச் சலம் விட்டு வேக வைத்து இடுப்பிற்குத் தாளும் படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு வலி, குண்டிக் காய்வலி நீங்கும்.
பெண்களுக்கு ஏற்படும் உதிரப் பெருக்கு என்கின்ற பெரும்பாடு நோய் தீரவேண்டுமானால் தொட்டால் சுருங்கி இலையைப் பறித்து சுத்தம் செய்து, அவ்விலையோடு தேவையான அளவில் சிறுவெங்காயத்தையும், சீரகத்தையும் சேர்த்து அரைத்து பசு மோரில் கலந்து பெண்கள் அருந்த நோய் குணமாகும்.
குழிப்புண் குணமாக இவ்விலையைப் பறித்து வந்து சுத்தம் செய்து, உள்ளங்கையில் வைத்துக் கசக்கி, அதில் இருந்து வரும் சாற்றை உடலில் ஏற்பட்டுள்ள குழிப்பண்ணீல் விடுவதோடு கொஞ்சம் இலையையும் அந்தப்புண்ணின் மீது கசக்கி வைத்து தூய்மையான துணியால் கட்டி வந்தால் சில நாட்களிலேயே குழிப்புண் குணமாகும்.
மேனியில் ஏற்படும் படை, தேமல் போன்ற நோய்கள் நீண்ட நாள் இருந்து தொல்லை கொடுக்கும் வேளையில் இவ்விலையைப் பறித்து வந்து , அதில் சாறு எடுத்து அதை நோய் மீது தடவ விரைவில் குணமாகும்.
0 Comments: