வசிஸ்ரவஸ் ஒரு யாகத்தின் நிறைவில் தானம் கொடுத்துக்கொண்டிருந்தார். நசிகேதன் பல கேள்விகளை அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தான். தந்தையே என்னை யாருக்காவது தானமாகத் தரப்போகிறீர்களா? ஆமாம். உன்னை எமனுக்குத் தரப்போகிறேன். எமனுலகம் சென்றான். ஊனுடலோடு எமதர்மனிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டான். பல வரங்களையும் நீண்ட ஆயுளையும் பெற்றுத் திரும்பினான்.
பூலோகத்திலிருந்து எமனுலகு செல்லும் உயிர்கள் பல இருட்டில் பாதை தெரியாமல் தத்தளிப்பதைப் பார்த்தான் நசிகேதன். கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகைக்கு முன்பாக வரும் பரணி நட்சத்திரத்தன்று யார் வீடுகளில் விளக்கேற்றி வைக்கப்பட்டிருக்கிறதோ அந்த வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு வெளிச்சம் தெரியும். அது மட்டுமல்ல. கார்த்திகை தீபத் திருநாளன்று சொக்கப்பனை எரித்தால் அனைத்து உயிர்களுக்கும் வெளிச்சம் கிடைக்கும்.
அன்று முதல் பரணி தீபம் எங்கும் ஏற்றப்பட்டது. அதோடு, சக உயிர்களின் நன்மைக்காக சொக்கப்பனை கொளுத்தும் வழக்கமும் வந்தது. உலக உயிரினங்கள் அனைத்துக்காகவும் மோட்ச தீபம் ஏற்றும் தினம் இது. உலக நன்மைக்காக வேண்டிக்கொண்டு தீபம் ஏற்றி வணங்குவது நம் மரபு. கார்த்திகை என்றாலே ஒளி என்று பொருள். கார்த்திகை தீபத்துக்கு இன்னொரு காரணமும் உண்டு.
நான்முகன் தனது மனைவியான சரஸ்வதி தேவியை விட்டுவிட்டு தான் மட்டும் யாகம் ஒன்றை நடத்தினார். மனைவி இருக்கும்போது வைதிக காரியங்களைத் தனித்துச் செய்யக் கூடாது.
தனது கணவன் தன்னைப் புறக்கணித்ததை எண்ணி, கோபம் கொண்ட சரஸ்வதி, யாகத்துக்குத் தடையாக உலகெங்கும் இருளைப் பரவச் செய்தாள். யாகம் தடைபட்டது. நான்முகன் செய்வதறியாது திகைத்தார். தனது தந்தையான திருமாலிடம் சென்று முறையிட்டார். அன்று கார்த்திகை மாத பௌர்ணமி தினம்.
திருமால் உடனே தானே ஒரு ஜோதிப் பிழம்பாக உருமாறி நின்றார். அந்தப் பிரகாசத்தில் உலகமே ஒளிர்ந்தது. யாகம் நல்லபடி நிறைவேறியது. இந்தச் சம்பவம் நடந்தது காஞ்சிபுரத்தில் உள்ள தூப்புல் திருத்தலத்தில்.
இத்தலத்தில் விளக்கொளிப் பெருமாள் எனும் திருநாமத்தோடு தீபப்பிரகாசராய் சேவை சாதிக்கிறார்.
தீபத்திருநாள் நல்வாழ்த்துகள் !
0 Comments: