வெள்ளி, 13 டிசம்பர், 2024

கார்த்திகை கூம்பு.. வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்?.. தெரிஞ்சுக்கலாம் வாங்க..!

கார்த்திகை தீபம்...



கார்த்திகை கூம்பு.. வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்?.. தெரிஞ்சுக்கலாம் வாங்க..!

கார்த்திகை மாதத்தில் வருகின்ற தீபத்திருநாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு நாளாகும். கார்த்திகை தீபத் திருநாளில் மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்.

*கார்த்திகை தீப கொண்டாட்டம் ஏன்?*

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும், காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பல வருடங்கள் போரிட்டனர். இவர்களின் கர்வத்தை அடக்க எண்ணிய சிவபெருமான் இவர்கள் முன் ஜோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும், முடியையும் தேடும்படி அசரீரி கூறியது.

ஜோதியின் முடியைக் காண அன்னப்பறவை வடிவம் கொண்டு சதுரமுகப் பிரம்மன் விண்ணுலகம் சுற்றினார். அடியைக்காண திருமால், வராக அவதாரம் எடுத்து பாதாளலோகம் சென்று அடிமலரடியைத் தேடினார்.

அடிமுடி காணமுடியாத ஜோதிப்பிழம்பாக சிவபெருமான் தோன்றினார். அதனால் பிரம்மனும், விஷ்ணுவும் சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட ஜோதியை எல்லோரும் காணும்படி காட்சியருள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

சிவபெருமான், திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று ஜோதிப்பிழம்பாக காட்சியருளினார். முழுமுதற்கடவுள் சிவபெருமானே என்ற நோக்கில் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

*கார்த்திகை கூம்பு:*

கார்த்திகை தீப விழாவின் முதன்மையான நிகழ்வு சொக்கப்பனை ஏற்றுதல். பனை மரத்தை பூலோக கற்பக விருட்சம் என்றும், பொற்பனை என்றும் சிறப்பிப்பார்கள். அதை அக்னியின் வடிவம் என்பார்கள்.

கார்த்திகை தீபத்திருநாளில் பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து ஆலயத்தின் முன்னுள்ள முற்றத்தில் வெட்டவெளியில் நடுவார்கள். அதை சுற்றி 10 அல்லது 15 அடி உயரத்திற்கு பனை ஓலைகளைக் கொண்டு கூம்பு போன்று அமைப்பார்கள். மாலையில் ஆலயங்களின் உச்சியில் தீபம் ஏற்றியதும், பஞ்ச மூர்த்திகளுக்கு தீபாராதனை செய்து, கோவிலுக்கு முன்புறம் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கூம்புகளுக்கு முன்பாக எழுந்தருளச் செய்வார்கள்.

பின்னர், சுவாமிக்கு தீபாராதனை செய்து, அந்த சுடரால் இந்த சொக்கப்பனைகளை கொளுத்துவர். சுடர் வேகமாகப் பரவி கொழுந்துவிட்டு எரியும். அந்த ஜோதியை சிவனாகவே எண்ணி வழிபடுவார்கள். இது அக்னி மய லிங்கமாகும்.

*அறிவியல் ரீதியாக:*

கார்த்திகை மாத தீபத் திருநாளில் மட்டுமல்லாமல் கார்த்திகை மாதம் முழுவதும் நம் முன்னோர்கள் தீபமேற்றி வழிபட்டனர்.

ஏன் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றி வழிபட்டார்கள்? என்றால் கார்த்திகை மாதத்தில் மழைக்காலமும், பனியும் சற்று இணைந்தே குளிருடன் காணப்படும். இதனால் சளி, காய்ச்சல் அதிகமாகவே இருக்கும். அதுமட்டுமின்றி இக்காலத்தில் சிறு சிறு பூச்சிகளும், கொசுகளும் உலாவும்.

இதை கட்டுப்படுத்தவே நல்லெண்ணெய், காட்டாமணக்கு, சிற்றாமணக்கு, பசு நெய், வேப்ப எண்ணெய் மற்றும் பலவகை மூலிகை எண்ணெய்களை பயன்படுத்தி வீடெங்கும் தீபம் ஏற்றப்பட்டது.

இதனால் கொசு மற்றும் பூச்சிகள் குறைந்து நோய்களும் கட்டுக்குள் இருக்கும். மேலும் பல்வேறு மூலிகைகளை இந்நாளில் தூபமாக எரிப்பதாலும் பல்வேறு நன்மைகள் விளைகின்றன. அறிவியல் ரீதியாகவும் கார்த்திகை தீபத் திருநாள் நமக்கு பல நன்மைகளை அள்ளி தருகிறது.

*பழைய விளக்குகளை வீட்டில் ஏற்றலாமா?*

கார்த்திகை தீபம் என்றாலே தீபங்கள் நிறைய ஏற்றுவது தான். கடைசி நேரத்தில் விளக்குகள் வாங்காமல் முன்கூட்டியே விளக்குகளை வாங்கி வைத்து கொள்ள வேண்டும். நம்மிடம் உள்ள தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை எண்ணுவதற்காகத்தான் இந்த தீப வழிபாடு.

வீட்டில் பழைய அகல் விளக்குகள் இருந்தாலும், வருடா வருடம் எல்லா விளக்குகளையும் வாங்க முடியாவிட்டாலும், ஒரு சில புதிய விளக்குகளை வாங்கி விளக்கேற்ற வேண்டும்.

பழைய அகல் விளக்குகளை நீரில் போட்டு எண்ணெய் பிசுக்கு போகுமாறு கழுவி காய வைக்க வேண்டும்.

*புதிய அகல் விளக்கு :*

புதிய அகல் விளக்குகளை வாங்கி வந்தவுடன் ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி விளக்குகளை சிறிது நேரமாவது போட்டு வைக்க வேண்டும். இதனால் விளக்குகளில் ஊற்றப்படும் எண்ணெய் கசிந்து விடாமல் இருக்கும்.

சிறிது நேரம் கழித்து விளக்குகளை நன்றாக தேய்த்து கழுவவும். கழுவியதை மின் விசிறி இருக்கும் இடத்திலோ அல்லது வெயில் படும் இடத்திலோ காய வைத்து எடுக்க வேண்டும்.

காய்ந்த மண் அகல் விளக்குகளை எடுத்து சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதால் விளக்கு மங்களகரமாக இருக்கும்.

திரி போடும் இடத்தில் பொட்டு வைக்காமல் இடைப்பட்ட இடங்களில் சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும்.

*நெய் தீபம் :*

முடிந்தால் எல்லா தீபங்களுக்கும் நெய் ஊற்றலாம். அப்படி இல்லையென்றால் காமாட்சி விளக்கு, குத்து விளக்கு போன்ற விளக்குகளுக்கு நெய் ஊற்றி தீபம் ஏற்றுவது நல்லது. மற்ற விளக்குகளுக்கு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம்.

*தீபத்தை எப்படி குளிர்விப்பது?*

தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தை குளிர்விப்பது வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

கையால் வீசியோ, வாயால் ஊதியோ விளக்கை அணைக்கக்கூடாது. பூவை பயன்படுத்தி விளக்கை குளிர்விக்க வேண்டும்.

*தீபம் ஏற்ற உகந்த நேரம் :*

பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரையும்,

மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையும் ஏற்றி வழிபட்டால் நன்மையை தரும்.

பிரதோஷ வேளையான மாலையில் 4.30 - 6.00 சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும்.

*எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்?*

கார்த்திகை மாதம் என்றாலே விளக்கிடும் மாதம் என்ற பெயர் உண்டு. விளக்கு ஏற்றி இறைவனை வழிபடக்கூடிய மாதம் இது. கார்த்திகை மாதம் முழுவதும் நாம் விளக்கேற்றி வழிபடலாம். அப்படி வாய்ப்பில்லாதவர்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகவும் அவசியம்.

விளக்கை ஏற்றும்போது வீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் என்பதில் எப்போதுமே ஒரு விதமான சந்தேகம் இருக்கும். அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு விளக்கு ஏற்றுவார்கள். ஒரு சிலர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விளக்கு ஏற்றுவார்கள்.

அந்த வகையில் வீட்டு முற்றத்தில் 4 விளக்கு,

சமையல் கூடத்தில் 1 விளக்கு,

நடையில் 2 விளக்கு,

வீட்டின் பின்புறம் 4 விளக்கு,

திண்ணையில் 4 விளக்கு,

மாட குழியில் 2 விளக்கு,

நிலைப்படிக்கு 2 விளக்கு,

சாமி படத்துக்கு கீழே 2 விளக்கு,

வெளியே யம தீபம் ஒன்று,

திருக்கோலம் இட்ட இடத்தில் 5 என மொத்தம் 27 விளக்குகள் ஏற்ற வேண்டும்.

குறைந்தபட்சம் 27 விளக்குகள் ஏற்ற வேண்டும் என கூறப்படுகிறது. இந்த 27 என்ற எண், 27 நட்சத்திரங்களை குறிக்கிறது.

27 வைக்க முடியாதவர்கள் குறைந்தது 9 விளக்குகள் கட்டாயம் ஏற்ற வேண்டும். வீடு முழுவதும் ஏற்ற முடியா விட்டாலும் நிலை வாசல் மற்றும் பூஜை அறையில் கண்டிப்பாக இரண்டு விளக்குகளாவது ஏற்ற வேண்டும்.

*தீபம் எத்தனை நாட்கள் ஏற்ற வேண்டும்?*

முதல் நாள் பரணி தீபத்தன்றும், அடுத்த நாள் கார்த்திகை தீபத்தன்றும், அதற்கு மறு நாளும் என மூன்று நாட்கள் விளக்கேற்ற வேண்டும்.

கார்த்திகை மகா தீப நேரம் மாலை 6 மணி என்பதால், மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றுவது நல்லது.

*சிவன் சக்தியின் அருள் :*

தீபமானது அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கிளியன் சட்டி என பல வடிவங்களில் ஏற்றப்படுகிறது.

கிளியன் சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்ற வேண்டும். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.

*வாழை இலை :*

தீபம் வைக்கும்போது கண்டிப்பாக சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய வாழை இலையை கீழே வைத்து அதன் மீது விளக்கு வைக்க வேண்டும். வாழை இலைக்கு பதில் பசு சாணம் கூட வைக்கலாம்.

*வீட்டில் என்ன செய்ய வேண்டும்?*

வாசலின் இரு முனைகளில் வைக்கப்படும் இரு விளக்குகள் புதிதாக இருப்பது கட்டாயம், மீதம் உள்ள இடங்களில் பழைய விளக்குகளை உபயோகப்படுத்தலாம்.

தீபத்திருநாள் அன்று சுத்தமான விளக்குகளில் புதிதாக எண்ணெய் ஊற்றியே விளக்கு ஏற்ற வேண்டும். ஏற்கனவே ஏற்றி வந்த விளக்கில் இருந்த எண்ணெயில் ஏற்றுதல் தவறு. கண்டிப்பாக விளக்கு எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

விளக்குகளில் மஞ்சள், குங்குமம் வைத்து தயார் செய்து கொள்ள வேண்டும். விளக்கை தரையில் வைக்கக் கூடாது. இதனால் எத்தனை தீபங்கள் ஏற்றுகிறோமோ அதற்கு ஏற்றது போல் வாழை இலை, ஆலம் இலை, அரச இலை ஆகியவற்றை தயார் செய்து கொள்ள வேண்டும்.

*தீபத்தில் மூன்று தேவியர்களின் சங்கமம்:*

தீபச் சுடரானது மகாலட்சுமியாகவும், அதில் தோன்றும் ஒளி சரஸ்வதியாகவும், வெப்பம் பார்வதியாகவும் கருதப்படுகிறது.

*எந்த திசையில் விளக்கு ஏற்ற வேண்டும்?*

கார்த்திகை தீபத்திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும்.

மேற்கு நோக்கி தீபம் ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.

வடக்கு நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகலும்.

தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றுவது மிக மிக தவறாகும்.

*எத்தனை முகம் தீபம் ஏற்ற வேண்டும்?*

குத்துவிளக்கு ஏற்றும் போது ஒரு முகம் ஏற்றினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

2 முகம் ஏற்றினால் குடும்பத்தில் நன்மை உண்டாகும்.

3 முகம் ஏற்றினால் குழந்தை பேறு உண்டாகும்.

4 முகம் ஏற்றினால் செல்வம் பெருகும்.

5 முகம் ஏற்றினால் சகல நன்மையும் உண்டாகும்.

*எந்த விளக்கை ஏற்றினால் என்ன பலன்?*

மண்ணால் செய்யப்பட்ட விளக்கு ஏற்றினால் பீடை விலகும்.

வெள்ளி விளக்கு ஏற்ற திருமகள் அருள் கிடைக்கும்.

பஞ்சலோக விளக்கு ஏற்ற தேவதை வசியம் உண்டாகும்.

வெண்கல விளக்கு ஏற்ற ஆரோக்கியம் உண்டாகும்.

இரும்பு விளக்கு ஏற்ற
சனி கிரக தோஷம் விலகும்.

*கார்த்திகை பரணி தீபம்:*

ஒவ்வொரு மாதத்திலும் வரும் பரணி நட்சத்திரம் சிறப்புக்குரியது என்றாலும், கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்திற்கு பாவங்களை போக்கும் சக்தி உள்ளது. கார்த்திகை மாதம் முழுவதுமே இறை வழிபாட்டிற்கான விசேஷமான மாதம் தான்.

*பரணி தீபம் ஏற்றும் முறை எப்படி வந்தது?*

முன்னோர்கள் வழிபாட்டிற்கு மிகச்சிறந்த நாளாக கருதப்படுவது பரணி தீப நாள் தான்.

இந்த பிறவியில் நாம் வாழ்கின்ற காலம் முழுவதும் ஒளிமயமான வாழ்வை பெறுவதற்காகவும், இவ்வுலக வாழ்க்கை முடிந்த பிறகு மேல் உலகிற்கு செல்லும் வழியிலும், மேல் உலகிற்கு சென்ற பிறகும் இருளில் சிக்கி தவிக்காது, ஒளிமயமாக நாமும் நமது முன்னோர்களும் இருப்பதற்காகவே பரணி தீபம் ஏற்றினர்.

*வீட்டில் பரணி தீபம் ஏற்றும் நேரம்:*

திருக்கார்த்திகைக்கு முந்தைய நாள் முன்னோர்களின் பாவங்கள் நீங்கவும், நமது நலனுக்காக பரணி தீபம் ஏற்ற வேண்டும். திருக்கார்த்திகை தினத்திற்கு முந்தைய நாள் மாலை வேளையில் 6.30 மணிக்குள் பரணி தீபம் ஏற்ற வேண்டும்.

*வீட்டில் பரணி தீபம் ஏற்றும் முறை:*

ஒரு சிறிய தட்டிலோ அல்லது வாழை இலையிலோ வாசலில் இரண்டு தீபங்களும், பூஜை அறையில் விளக்கும் ஏற்ற வேண்டும்.

அதோடு தனியாக ஒரு தாம்பாலத்தில் 5 விளக்குகளை வட்ட வடிவில் ஏற்ற வேண்டும். அனைத்து விளக்குகளும் அனைத்து திசை நோக்கி எரியும் என்பதால் திசை கணக்கு கிடையாது.

ஐந்து என்பது பஞ்ச பூதங்களும் நமது உடலிலும், வெளியிலும் சரியாக இருந்து நமக்கு அருள்புரிய வேண்டும் என்பதற்காகவும், சிவபெருமானின் பஞ்ச தொழில்களை விளக்குவதாலும் 5 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

*திருவண்ணாமலையில் பரணி தீபம்:*

திருவண்ணாமலையில் அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும்.

பரணி தீபம் ஏற்றும்போது உங்கள் வீட்டு வாசலில் இரண்டு தீபம், பூஜை அறையில் தனியாக ஐந்து நெய் தீபத்தை ஏற்றுவது சிறப்பு. மனிதன் வாழ்க்கையில் நாம் தெரிந்தும், தெரியாமலும் செய்யும் தவறுகளில் இருந்து விமோசனம் பெற இந்த பரணி தீபத்தை ஏற்ற வேண்டும்.

*பரணி தீபம் ஏற்றும் பலன்கள்:*

பரணி தீபத்தன்று சிவனுக்கு பூஜைக்கு தேவையான வில்வம், பூ போன்றவற்றை பறித்துக் கொடுத்தாலும், மாலையாக கட்டிக் கொடுத்தாலும், விளக்கு ஏற்றி வழிபட்டாலும், அபிஷேகத்திற்கு தேவையானவற்றை செய்து கொடுத்தாலும் கூட சிவனை நினைத்து விரதமிருந்து வழிபட்ட பலன்கள் கிடைக்கும்.

மிகவும் சிறப்பு வாய்ந்த அரிதான இந்த நாளில் சிவபெருமானை வழிபட்டால் நடக்கவே நடக்காது என நாம் நினைத்து கொண்டிருக்கும் விஷயங்களை கூட சிவபெருமான் நடத்தி வைப்பார்.

தீராத கஷ்டம், தீராத கடன் பிரச்சனை என அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.

*பரணி தீபம்:*

கார்த்திகை தீபத்திருவிழா நாளின் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய் தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல்விளக்கு ஏற்றுவார்கள்.

அதன்பின் உண்ணாமுலை அம்மன் சன்னதியிலும் ஐந்து பெரிய அகல்விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணி தீபம் காலையில் நடக்கும். பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுக தீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைக்கின்றனர்.

*அண்ணாமலையார் தீபம்:*

கார்த்திகை மாதம் மிக மிக புனிதமானது. கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். திருக்கார்த்திகை அன்று இல்லங்களில் வரிசையாக தீப அலங்காரம் செய்வது வழக்கம்.

இதனால் தீய சக்திகள் விலகும், மகாலட்சுமி இல்லத்தில் குடி கொள்வாள் என்கிறது சாஸ்திரம். இந்த நாளில் மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளிலும், கோயில்களிலும் விளக்கு ஏற்றி சிவனை வழிபடுவது வழக்கம்.

கார்த்திகை தீபத்திருநாள் அன்று திருவண்ணாமலையில் மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்திற்கு பெயர் அண்ணாமலை தீபம்.

தீபத்திருநாளில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது திருவண்ணாமலை தீபம்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலில் சிவனே மலையாக காட்சி தருவதாகவும், திருக்கார்த்திகை தீபத்திருநாளில் ஜோதி வடிவாக காட்சி தருவதாகவும் ஐதீகம்.

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் பரணி தீபம், அண்ணாமலையார் தீபம் (மகாதீபம்), விஷ்ணு தீபம் உள்ளிட்ட ஐந்து தீபங்கள் ஏற்றப்படும்.

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றிய பிறகுதான் பொதுமக்கள் அவர்களின் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது ஐதீகம்.

இதற்காக மிகப்பெரிய கொப்பரையில் 24 முழம் துணியால் திரி செய்து அதில், கற்பூர தூள் வைத்து சுருட்டப்படும். பின்னர் அந்த திரியை, கொப்பரையில் வைத்து, நெய் வார்த்து, சுடர் எரிப்பார்கள்.

அது தூரத்திலிருந்து பார்க்க மலையில் தீபம் ஏற்றி வைத்தது போல சிறியதாக தெரியும். கிட்டத்தட்ட அந்த மலையிலிருந்து 60 கி.மீ தூரம் வரை இந்த சுடர் தீபம் போல தெரியும்.

*திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா:*

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீபத்திருவிழா பிரசித்தி பெற்றது. மாதந்தோறும் இந்த ஆலயத்தில் திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதம் நடைபெறும் தீபத்திருவிழாவே பெரிதும் போற்றப்படுகிறது.

தீபஜோதி வழிபாடானது, இருள்போன்று நம்மை சூழ்ந்து நிற்கின்ற தடைகளையும், இடையூறுகளையும், கிரக பாதிப்புகளால் உருவாகும் கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை.

சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளே தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது.

*கொப்பரை:*

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை மகாதீப கொப்பரை கோயிலில் சிறப்பு பூஜைகளுக்கு பின் 2,668 அடி உயரம் கொண்ட மகாதீப கொப்பரை மலைக்கு எடுத்து செல்லப்படும்.

*மகாதீபம்:*

மகாதீபம் கார்த்திகை தீபத்திருவிழா நாளின் மாலை 6 மணிக்கு அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர்.

அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சி தருகின்ற அர்த்தநாரீஸ்வரர் உற்சவ கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

குறிப்பிட்ட சில நிமிடங்கள் மட்டும் காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரை காண தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மற்ற வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வருவது வழக்கம்.

*தீபம் ஏற்றிய பிறகு என்ன செய்ய வேண்டும்?*

திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றிய பிறகு நமது வீடுகளில் தீபம் ஏற்றி, ஒளி வடிவாக இறைவனை வழிபட வேண்டும்.

ஆண்டு முழுவதும் நாம் வீடுகளில் விளக்கேற்றி இறைவனை வழிபட்டாலும், ஆண்டுக்கு ஒருமுறை திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வழிபடுவது அனைத்து விதமான நலன்களை பெற்றுத் தரும்.

ஆண்டுதோறும் விளக்கேற்ற முடியாதவர்கள் இந்த ஒரு நாளில் விளக்கேற்றி வழிபட்டாலே, தினமும் விளக்கேற்றிய பலன் கிடைத்து விடும்.

சிவபெருமான் ஜோதி வடிவாக காட்சி அளித்த நாள் மட்டுமின்றி, பார்வதிக்கு தனது உடலில் பாதியை தந்து அர்த்தநாரீஸ்வர ரூபமாக காட்சி கொடுத்த நாள் என்பதால் சிவபார்வதியை கார்த்திகை தீபத்திருநாளில் வணங்குவது சிறப்பு.

ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே அர்த்தநாரீஸ்வரர், ஆனந்த தாண்டவம், மகாதீபம் என மூன்றையும் கார்த்திகை தீபத்திருநாளில் ஒன்றாக பார்க்க முடியும்.

இதை நேரில் கண்டால் 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும் என்பது காலங்காலமாக தொடர்ந்து வரும் நம்பிக்கை.

கார்த்திகை தீப வெளிச்சத்தில் உங்கள் வீடு ஒளிமயமாகட்டும்! உங்கள் வாழ்வில் சகல நன்மைகளும் நிறைந்திருக்கட்டும்!


Previous Post
Next Post

0 Comments: