கார்த்திகை தீபத் திருநாள் ஐந்து நாட்கள் கொண்டாட வேண்டிய பண்டிகையாகும். முதல் நாள் பரணி தீபம் அன்று காளி தேவியை வழிபாடு செய்ய வேண்டும். கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தன்று தீபம் ஏற்றி ஆதிசக்தியான காளி தேவியை வழிபடும் வழக்கம் உண்டு.
இரண்டாவது நாள் மகா தீபம் ஏற்றப்படும். திருவண்ணாமலையில் மலை உச்சியில் ஜோதி வடிவத்தில் பக்தர்களுக்கு சிவபெருமான் அருள்பாலிக்கும் விழாவாக மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதனை அண்ணாமலை தீபம் என சிறப்பித்துக் கூறுவது வழக்கம். கோயில் அடிவாரத்தில் பரணி தீபமும் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.
மூன்றாம் நாள் விஷ்ணு தீபம் ஏற்றும் வழக்கம் உண்டு. ரோஹிணி நட்சத்திரத்தில் விஷ்ணு தீபம் ஏற்றி மகாவிஷ்ணுவை வழிபடும் நாளாகும். பெருமாள் கோயில்களில் விஷ்ணு தீப வழிபாடு சிறப்பு பெற்றது. நான்காம் நாள் நாட்டு கார்த்திகை தீபம். மிருகசீரிஷ நட்சத்திரத்தன்று கார்த்திகை சீர் கொடுக்கும் வழக்கம் முன்பெல்லாம் இருந்து வந்தது. பெண்ணையும் மருமகனையும் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து சீர் செய்து அனுப்பும் விழா நாட்டு கார்த்திகை தீபம் என சிறப்புப் பெற்றது.
ஐந்தாம் நாள் தோட்ட கார்த்திகை தீபம் எனப்படும். தமிழர்கள் கொண்டாடும் பெரும்பாலான பண்டிகைகளில் இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமான நிகழ்வுகள் இருக்கும். அம்மாதிரியானா நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வான ஒன்றுதான் தோட்ட கார்த்திகை தீபம்.
வீட்டில் இருக்கும் பழைய அகல் விளக்குகளுடன் புதிதாக நான்கு அகல்களை வாங்கி நாள் முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து பிறகு நன்கு துடைத்து வெயிலில் காய வைக்கவும். இதனால் அகல் விளக்குகள் எண்ணெய் அதிகம் உறிஞ்சுவதை தவிர்க்கலாம். விளக்கிற்கு மஞ்சள், குங்குமம் தடவி எண்ணெயில் ஊறிய பஞ்சு திரிகளைப் போட்டு எண்ணெய் விட்டு விளக்கேற்ற நின்று நிதானமாக எரிவதுடன் நீண்ட நேரமும் எரியும். விளக்கிற்கு நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றுவதே சிறப்பு.
வீடுகளில் 27 அகல் விளக்குகளை ஏற்றி வழிபட, செல்வம் பெருகும் என்பது ஐதீகம். நம்மால் முடிந்த அளவு விளக்குகளை ஏற்றி வாசல் புறமும், துளசி மாடத்திலும், நடுக்கூடத்திலும், சுவாமி முன்பும் ஏற்றி வழிபட வேண்டும். விதவிதமான விளக்குகள் வந்துவிட்டாலும் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை ஏற்றுவது சிறப்பு. பூஜை அறையில் குத்து விளக்கை ஏற்றியும், மற்ற இடங்களில் மண்ணகல் கொண்டு தீபங்களையும் ஏற்றலாம்.
விளக்கிலிருந்து எண்ணெய் கசிந்து விடாமல் இருக்க விளக்கின் அடியில் சிறு தட்டு அல்லது திக்கான சிறு அட்டைத் துண்டுகளை வைத்து விட கால் வைத்து வழுக்கி விழாமல் இருக்கலாம். தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றுவது அறிவு வளர்ச்சியையும், செல்வ வளர்ச்சியையும் தரும். கிழக்கு திசையில் ஏற்றுவது துன்பங்களை போக்கும். மேற்கு திசையில் ஏற்றுவது கடன் தொல்லைகளை தீர்க்கும். தெற்கு திசையில் தீபங்களை ஏற்றக்கூடாது.
தீபத்தன்று மாலையில் விளக்கேற்றி நெல்பொரி, அவல்பொரி உருண்டைகள், அப்பம், கார்த்திகை ஸ்பெஷல் வெல்ல அடை, மிளகு கார அடை ஆகியவற்றை சுவாமிக்கு நைவேத்தியம் செய்து தூப தீபம் காட்டி வழிபட வேண்டும்.
0 Comments: