முந்திரிப்பருப்பு சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகிவிடுமா? எத்தனை முந்திரிகள் ஒருநாளைக்கு சாப்பிடலாம்? சர்க்கரை நோயாளிகள் முந்திரி பருப்பை சாப்பிடலாமா?
இத்துனூண்டு இருக்கும் இந்த குட்டி பருப்பில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனால்தான், காஸ்ட்லி பருப்பு வகைகளில் இந்த முந்திரியும் கட்டாயம் இடம்பெற்றுள்ளது.
சத்துக்கள்:
புரோட்டீன்கள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்ற சத்துக்கள் இப்படி நிறைய நிறைந்துள்ளன.. பீட்டா கரோட்டீன், டானின் என்று சொல்லக்கூடிய ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் போன்ற சத்துக்களும் இதில் கலந்துள்ளன. இத்தனை சத்துக்கள் நிறைந்துள்ள முந்திரியில் ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்துள்ளதால், "இதயத்தின் தோழன்" என்றே சொல்கிறார்கள்.
இந்த பருப்புகள், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்கிறது.. இதன்மூலம் இதய செயல்பாடு சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது.. முந்திரி பருப்பை சாப்பிட்டு வருபவர்களுக்கு இதய நோய்க்கான அபாயமானது 37 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், இதயம் பலவீனமாக இருப்பவர்கள்கூட இந்த முந்திரியை குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொள்ளலாம்.
புற்றுநோய் ஆபத்து:
அதே போல, புரோந்தோசயனிடின்கள் என்ற பண்பு இந்த முந்திரியில் உள்ளதால், புற்றுநோய் அபாயத்தை இந்த பருப்புகள் குறைக்கின்றன.. புற்றுநோய் செல்களையும் வளரவிடாமல் அழித்துவிடுகின்றன.
ஏகப்பட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இந்த முந்திரியில் உள்ளதால் சருமத்துக்கும், கேசத்துக்கும் போதுமான பாதுகாப்பையும், சக்தியையும், உறுதியையும் தருகின்றன..
முதுமையை தள்ளிப்போடக்கூடிய சக்தி , இந்தப் பருப்புக்கு உள்ளது.. இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.. இந்த பருப்புகளில் தாமிரம் கலந்துள்ளதால், கொலாஜின் உற்பத்தியை தூண்டுவதற்கு இவை உதவுகின்றன. இதனால், சருமத்தின் ஆரோக்கியம் மேலும் காக்கப்படுகிறது.
கண்பார்வை:
செரிமான பிரச்சனை இருப்பவர்கள், தினமும், 2, 3 முந்திரிகளை சாப்பிடலாம்.. இதனால், அஜீரணம் நீங்குவதுடன், கண் பார்வையும் கூர்மையாகிறது.. ஒற்றைத் தலைவலியையும் நீங்குகிறது. இயல்பாகவே, உடல் எடையை குறைக்கும் திறன் இந்த பருப்புக்கு உண்டு. அதேபோல, நீண்ட நேரத்துக்கு வயிறு நிரம்பின உணர்வையும் தருகிறது.
நீரிழிவு நோயாளிகள்:
இந்த முந்திரி பருப்பை, நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடலாம்.. குறிப்பாக, டைப்-2 நீரிழிவு நோயாளிகள் முந்திரி பருப்பை சாப்பிட்டால் நல்லது என்கிறார்கள்.. இதனால், ரத்த குளுக்கோஸின் அளவு குறைகிறதாம்..
ஆனால், பச்சையாக இருக்கும் முந்திரியை விட, வறுத்த முந்திரியானது அதிக ஆக்ஸிஜனேற்ற திறனைக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.. அதேபோல, பச்சையாக இருக்கும் முந்திரியைவிட, ஊறவைத்த முந்திரி சாப்பிடும்போது, எளிதில் ஜீரணமாகும். வயிற்றுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதனால்தான் ஊறவைத்த முந்திரியை சாப்பிடுவதே சிறந்தது என்கிறார்கள்.
பால் + முந்திரி: அதுபோல, பாலில் ஊறவைத்த முந்திரிகளில் இன்னும் பல நன்மைகள் கிடைக்கிறதாம்.. இதனால், எலும்புகள் ஆரோக்கியமாக மாறுவதுடன், உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது.. முந்திரியில் வைட்டமின் K, வைட்டமின் B6, மெக்னீசியம், போன்றவை நிறைந்துள்ளதால், இவை பாலுடன் ஊறும்போது, கூடுதல் கால்சியம் சத்தை தருகின்றன. இதனால், பற்களும் உறுதியாகின்றன.
எத்தனை சாப்பிடலாம்: இத்தனை நன்மைகளை இந்த முந்திரி தந்தாலும், அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சுதானே? அந்தவகையில், அதிகமாக முந்திரியை சாப்பிட்டால், அலர்ஜி ஏற்படலாம் அல்லது மலச்சிக்கல் வரலாம்.. அல்லது சிறுநீரகத்தில் பாதிப்புகளை தரலாம். அதனால், 10 முந்திரிகள், அல்லது அதிகபட்சமாக 18 முந்திரிகளை சாப்பிடலாம் என்கிறார்கள்.
0 Comments: