வெள்ளி, 13 டிசம்பர், 2024

கார்த்திகை மாத ஆலயங்களில் முக்கியமானது திருச்செங்கோடு ஆலயம் ,

கார்த்திகை மாத ஆலயங்களில் முக்கியமானது திருச்செங்கோடு ஆலயம் , 



நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மகா முக்கிய்மான தலம் இது, செந்நிறமான மலைகுன்று மேல் இந்த சிவாலயம் அமைந்திருக்கின்றது

இந்த ஆலயத்தின் வரலாறு ஆதிஷேஷனுக்கும் வாயு பகவானுக்கும் அகங்கார சண்டை நடந்த காலத்தில் இருந்து தொடங்குகின்றது, மேரு மலையினை வைத்து ஆதிஷேஷனும் வாயுபகவானும் மோதும் போது தெற்கே விழுந்த துண்டுகளில் இதுவும் ஒன்று

மற்றவை திருவண்ணாமலை, இலங்கையின் திரிகோணமலை என வீழ்ந்து மகா புண்ணியமான மலைகளாயின, இந்த திருச்செங்கோடும் அப்படி புண்ணிய நிலையினை தொடக்கத்திலே எட்டிற்று

இதன் மூல வரலாறு சிவனுக்கும் பார்வதிக்குமான பிரிவும் பின் அவர்கள் தவமிருந்து இணைந்த இடத்தில் இருந்து தொடங்குகின்றது

சிவன் கண்ணை பார்வதி விளையாட்டாக சில நொடி மூட, அந்த சில நொடியில் உலகமும் அதன் உயிர்களும் கடுமையாக பாதிக்கபட , அந்த சாபத்தால் பார்வதியினை பூமியில் பிறக்க கட்டளையிடுகின்றார் சிவன், பார்வதியும் அப்படி பிறந்து பூமியில் சிவ நினைவுடனே வாழ்ந்து வருகின்றார்

காஞ்சியிலே அவர் மண்ணால் சிவலிங்கம் செய்து, அந்த மண் சிவலிங்கத்தை பெரும் வெள்ளம் மூழ்கடிக்கும் போது அதனை தன் நெஞ்சோடு அணைத்து கொண்டாள் அன்னை அவள் பக்திக்கு மனமிறங்கிய சிவன் அவளை திருவண்ணாமலைக்கு வந்து விரதமிருக்க சொன்னார்

அன்னை திருவண்ணாமலையில் தவமிருந்தாள் அவளின் தவத்தின் கடைசி கட்ட காலத்தை திருச்செங்கோட்டு மலையில் இயற்ற சொன்னார் சிவபெருமான்

திருச்செங்கோடு எனும் அந்த மகா புண்ணிய மலை எல்லா கர்மத்தையும் போக்கும் , ஒருவரின் எல்லா சாபத்தையும் தீர்க்கும் என்பதால் அங்கே வர சொன்னார்

புரட்டாசி மாதம், வளர்பிறை, அஷ்டமி திதியில் அன்னை அங்கே விரதம் தொடங்கிளான், அதுதான் கேதார கௌரி விரதம் என்றாயிற்று

அந்த விரதம் முடியும் போது, 21 நாட்கள் கழித்து அன்னையினை தன்னில் பாதியாக சிவன் இந்த இடத்தில் ஏற்றுகொண்டார், பார்வதிக்கு தன் உடலில் சிவன் பாதி இடம் கொடுத்த இடம் என்பதால் இங்கே சிவன் "அர்த்தநாரீஸ்வரர்" கோலத்தில் எழுந்தருளினார்

இத்தலம் அன்றிலிருந்து அர்த்தநாரீஸ்வரர் தலம் என்றாயிற்று

ஆம், இந்த தலம் எது தொலைக்கவேண்டிய கர்மமோ அதை முடித்து வைக்கும், எது சாபமோ அதை முழுக்க தீர்த்தும் வைக்கும்

இந்த உலகில் யாரும் தனி அல்ல எதுவும் தனி அல்ல, தனிமை உணர்வு என்பது வேறு ஆனால் கர்மம் முடிக்க ஒருவரின் உதவி அவசியம், ஆத்மா சென்று கலக்க பரம்பொருள் எனும் இலக்கு அவசியம்

ஜீவாத்மா என்பது பரமாத்மாவினை தேடி செல்லும் இந்த வாழ்வில், அந்த பெரும் பயணத்தை கர்மம் என தொலைக்கும் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒரு துணை அவசியம்

அப்படி நல்ல துணையும் வழிகாட்டலும் தந்து கடைசியில் ஜீவாத்மாவினை பரமாத்மா ஏற்றுகொள்ளும் வரத்தையும் முழுக்க அளிப்பது இந்த ஆலயம்

மிக அழகானதும் தனித்துவமிக்கதுமான இந்த ஆலயம் ஒவ்வொருவரும் தரிசிக்க வேண்டிய சிவதலங்களில் முக்கியமானது

திருசெங்கோட்டின் பெரிய மலைமுகடு நாகமலை என்றும், சிறிய முகடு நந்திமலை என்றும் அழைக்கப்படும் திருச்செங்கோடு மலையை நாகாசலம், நாகமலை, நாககிரி, உரககிரி என்றும் சொல்வார்கள். மலையின்மீது ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயில் ஒருபுறமும், ஸ்ரீபாண்டீஸ்வரர் கோயில் இன்னொரு பக்கமும் உள்ளது. 

அடிவாரத்தில் செங்குன்றூரின் நடுவே ஸ்ரீகயிலாசநாதர் கோயில் உள்ளது. ஆக, இங்கே, இந்தத் தலத்தில் சிவாலயங்கள் மூன்று

இந்த ஆலயம் தேவாரம் பாடபட்ட சிறப்பினை கொண்டது , சம்பந்தர் ஓடி வந்து தேவாரம் பாடிய ஆலயம் இது

திருப்பைஞ்ஞீலி, திருஈங்கோய்மலை முதலான தலங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடி வழிபட்ட ஞானசம்பந்தர், வழியெங்கும் பல தலங்களை தரிசித்து வழிபட்டபடியே, திருச்செங்கோட்டுக்கு வந்தார். சிவனாரை தரிசித்து பதிகம் பாடியவர், அடுத்து திருநணா என்கிற பவானிக்குச் சென்றுவிட்டு, 
மலையின் மீதும் இறைவனின் மீது கொண்ட ஈர்ப்பால், மீண்டும் திருச்செங்கோடு வந்து பல நாட்கள் தங்கி இருந்து சிவனை தொழுதார்

அப்போது அங்கே ஒரு நோய் பரவிற்று, அந்த நோயில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு அவர் பாடியதுதான் "திருநீலகண்ட பதிகம்"

இந்த ஆலயத்தின் சிவனை காண சில நூறு படிகள் மலை ஏறி செல்ல வேண்டும்

முதற்படியில் விநாயகப் பெருமானை வணங்கி நாம் படியேறத் தொடங்கவேண்டும், அருகில் முருகன் கோவில் ஒன்றும் உண்டு

மேலே செல்லும் வழியில் செங்குந்தர் மண்டபம், காளத்தி சுவாமிகள் மடம், திருமுடியார் மண்டபம், தைலி மண்டபம் போன்றவை அமைந்துள்ளன. அதனை அடுத்து வீரபத்திர சுவாமி திருக்கோவில் உள்ளது. அதன் மேல்புறம் நந்தி கோவில் உள்ளது.

இந்த நந்திகோவில் விஷேஷமானது இங்கு பால், பசுக்கள் சம்பந்தமாக அவற்றின் வளம் பெருகி குடும்பங்கள் செழித்து எல்லா நலன்களையும் பெற்று வாழ இங்குள்ள நந்தி பகவானுக்கு பொங்கலிட்டு, வெண்ணை சாற்றி வேண்டி வழிபடுவார்கள்

இந்த நந்தி கோவில் அருகேதான் இந்த மலை உருவாக காரணமான ஆதிஷேஷனுக்கு தனி சிலையும் வழிபாடும் உண்டு

இவ்விடத்தில் ஐந்து தலைகளுடன் ஆதிசேஷனின் முழு உருவமும் 60 அடி நீளத்தில் பிரம்மாண்டமான தோற்றத்தில் உண்டு , . நாகரின் முழு உடலிலும் பக்தர்கள் மஞ்சளையும் குங்குமத்தையும் கலந்து பூசி வழிபடுவர். இதனால் நாக தோஷம் நீங்கும்

உலலை தாங்கும் ஆதிசேஷன் இங்கு சிவலிங்கத்தை தாங்கி நிற்பது ஞான தத்துவத்தை சொல்கின்றது

இன்னும் உயரே சென்றால் சிங்க மண்டபம் உண்டு இதற்கு அடுத்து அமைந்துள்ளது அறுபதாம்படி என்னும் சத்தியவாக்குப் படிகள்.

திருச்செங்கோடு ஆலயத்தின் தனி சிறப்பானவை இந்த சத்திய வாக்கு படிகள் எனும் 60ம் படி. இங்கு செய்யபடும் சத்தியம் முழு வலிமையானது இங்கு யாரும் பொய்யே பேசமுடியாது என்பது எக்காலமும் இருந்து வரும் நம்பிக்கை மற்றும் மரபு

கொங்குநாட்டின் எவ்வளவோ சிக்கலான விஷயமெல்லாம் இந்த படிகளில் தீர்க்கபட்டது,. இந்தப் படிகளில் நின்று செய்யப்படும் சத்தியத்திற்கு அளவற்ற மதிப்பு என்பது நம்பிக்கை. இந்தப் படிகளின்மேல் நின்று யாரும் பொய்யாக சத்தியம் செய்யமுடியாது. 

எத்தனையோ பெரிய வழக்குகளை, சர்ச்சைகளை தீர்த்து வைத்த படிகள் இவை. இங்கு செய்யபடும் சத்தியம் மற்றும் ஒப்புதலை தாண்டி எந்த சர்ச்சையும் வளர்ந்ததில்லை, யாருக்கு நீதி உண்டோ அவர்களுக்கு தானாய் நீதி வந்து சேரும்

யாரிடம் குற்றம் உண்டோ அவர்கள் அதை ஒப்புகொண்டு மெல்ல அமைதியாகிவிடுவார்கள், உரிய தண்டனை அல்லது பரிகாரம் அவர்களை தானே வந்து அடையும்

இந்த சத்தியவாக்குப் படிகளின் முடிவில் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் உண்டு. 

இந்த ஆலயத்தைதாண்டி சென்றால் கடந்தால் அறுபதாம்படி மண்டபம், இளைப்பாற்றிமண்டபம், கோபுரவாயில் மண்டபமும் மேலும் பல மண்டபங்கள் உண்டு

அவற்றை கடந்துதான் ராஜகோபுரத்தினை அடைதல் வேண்டும், கோவிலின் உள்ளே நுழைந்த உடனே இடது புறத்தில் விநாயகப் பெருமானை காணலாம், அடுத்து திருசெங்கோட்டு வேலவனின் சன்னதி உண்டு

இந்த மண்டபத்தில்தான் உலகின் மிக மிக அழகான சிற்பங்கள் நிறுவபட்டிருக்கின்றன‌

மகாபலிபுரம், மதுரை ஆலயம், நெல்லை கிருஷ்ணபுரம் போன்றவற்றை போல அதி அற்புதமான சிலைகள் இந்த இடத்தில் மிக மிக துல்லியமாக மிக தேர்ந்த வகையில் சிற்பங்கள் செதுக்கபட்டுள்ளன, இவை உலகின் அற்புதமான சிலைகள், பாரத தேசத்தின் பெரும் கலைகள்

இந்த முருகபெருமானின் சன்னதி மிக சக்தி வாய்ந்தது தனது வலக்கையில் வேலும், இடக்கையில் சேவலும் என ஏந்திக்கொண்டு, நின்ற கோலத்தில், செங்கோட்டு வேலவனாக காட்சி தரும் முருகப்பெருமானின் அழகு அவ்வளவு அழகானது

இந்த முருகனைத்தான் அருணகிரிநாதன் தன் திருபுகழ்,கந்தர் அலங்காரம் என பல பாடக்களில் பாடியிருகின்றார்

இதை அடுத்துத்தான் மகா பிரசித்தியான அந்த அர்த்த நாரீஸ்வரரர் சன்னதி உண்டு

அங்கே அர்த்தநாரீஸ்வரர் வெண்ணிற மேனியுடன் காட்சி தருகிறார். ஒரே உருவத்தில் இடது பக்கம் பெண்ணுருவாகவும், வலது பக்கம் ஆணின் உருவமாகவும் உமையொரு பாகனாய் காண்போரை வசீகரிக்கும் தோற்றத்துடன் அருள் பாலிக்கின்றார்

இந்த அர்த்தநாரீஸ்வரர் தோற்றத்தை மணிவாசகப் பெருமான் "தொன்மைக்கோலம்" என்பார்

இங்கு அர்த்தநாரீஸ்வரர் மேற்கு நோக்கி உள்ளார். ஆனால் உள்ளே நுழைய கதவுகள் கொண்ட வாசல் இல்லை. குகை போன்ற இந்த சன்னதியில் குனிந்து நுழைந்து உள்ளே செல்ல வேண்டும்

இந்த சன்னதியின் மற்றும் ஒரு சிறப்பு அங்கு வற்றாமல் ஓடிகொண்டே இருக்கும் தேவதீர்த்தம் . இது தானாக தோன்றிய சுனை, அது எப்போதும் ஊறி ஓடிகொண்டே இருக்கும்

அர்த்தநாரீஸ்வரர் காலடியில் இந்த ஊற்று நீர்தான் அங்கு புண்ணிய தீர்த்தம், அது சக்திவாய்ந்தது நோய்களை குணமாக்குவது முதல் எல்லா அற்புதங்களையும் செய்ய கூடிய அற்புத நீர்

இதற்கு அடுத்து ஸ்ரீதேவி தாயார், பூமா தேவி தாயார் உடனுறை ஆதிகேசவ பெருமாள் சன்னதி உண்டு . இதே மண்டபத்தின் தரையில் ஆமை மீது ஒரு மண்டபம் எழுப்பட்டுள்ளது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இ
இதன் மேற்பகுதி மரத்தால செய்யப்பட்டது. திருவிழாக் காலங்களில் உற்சவ பெருமானை இந்த மண்டபத்தில் வைத்துதான் பூஜைகள் நடைபெறும்.

நாரி கணபதி சன்னதிக்கு அருகே தாண்டவப்பத்திரை விலாச மண்டபத்தில் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியும், ஆலங்காட்டுக் காளியும் எதிர் எதிரே அமையப் பெற்றுள்ளன. இங்கு அமைந்துள்ள நடராஜர் சன்னதிக்கு அருகே தலவிருட்சமான இலுப்பை மரம் உண்டு

 பொதுவாக எல்லா ஆலயங்களிலும் சக்தி நிலைகள், மூலஸ்தான கருவறை, கொடிமரம் என இவற்றிற்கு அடுத்து தலவிருட்சம் மிக முக்கியமான ஒன்றாகும். இத்திருக்கோவிலில், நடராஜருக்கும், சஹஸ்ர லிங்கத்திற்கும் இடையே இக்கோவில் தல விருட்சமான இலுப்பை மரம் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு 

இந்த இலுப்பை மரத்தை அடுத்து பஞ்ச லிங்கங்கள், விஸ்வநாதர், மல்லிகார்ஜுனர், தென்முகக் கடவுள், கொற்றவை, சூரிய பகவான், நாக ராஜா, பைரவ மூர்த்தி போன்ற பரிவார தெய்வங்களின் சந்நதிகளும் உண்டு

திருச்செங்கோடு ஆலயம் உங்கள் பக்திக்கும் தவத்துக்கும் நிச்சயம் பலனளிக்கும் தலம், கேட்டதை அள்ளி தரும் ஆலயம்

ஆனால் அதனை கொஞ்சம் உறுதிபடுத்தித்தான் தரும், முழு அர்பணிப்பும் தேடலும் சரணாகதியும் இருந்தால், முழுக்க அந்த சிவனே எல்லாமும் என சரணடைந்தால் உங்களுக்கு எது சாபமோ அதை தீர்த்து எது கர்மமோ அதனை சரியாக செய்ய வரத்தை அருளும்

அன்னை பார்வதிக்கு அப்படித்தான் அங்கே சொதனை நடந்தது, அவள் அந்த தவத்தில் உறுதியாய் இருந்தாள் அவளுக்கு சிவன் தன் இடப்பாகம் கொடுத்து தன்னோடு சேர்த்துகொண்டார்

இந்த தத்துவம் பார்வதிக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு ஜீவாத்மாவினையும் தன்னோடு சேர்த்துகொள்ள தன்னில் ஒன்றாக ஈர்த்து கொள்ள அந்த பரம்பொருள் தயாராக இருக்கின்றார் என்பதை சொல்வது

அந்த 60ம் படி என்பதுதான் இந்த ஆலயத்தின் முக்கிய இடம், அங்கே இப்போது சத்தியபடி என மாறி வம்பு வழக்குகள், சர்ச்சைகளுக்கான முடிவு சத்தியம் என்றாகிவிட்டாலும் உண்மையில் அதன் தாத்பரியம் வேறு

அதாவது அங்கே அந்த படியில் ஒருவன் அகங்காரம், ஆணவம், வாழ்வின் துர்குணங்கள், இன்னும் வேண்டாத அத்தனையும் தலைமுழுகி, அந்த படியில் இனி எல்லாம் சிவனே என முழுக்க சரணடைதல் வேண்டும்

சத்தியபடி எல்லாம் விட்டு சிவனை சரணடையும் போது அங்கே சிவன் இறங்கி வந்து எல்லா சாபமும் தீர்த்து பெரும் வரம் அருள்வார்

இந்த ஸ்தலம் கர்மத்தை சுமக்க யார் யார் உடன் வருவார்களோ அவர்களை நல்லபடியாக முழு மகிழ்ச்சியும் மனமுமாக கொண்டு , வாழ்வின் சுமை அறியாமல் பயணிக்கவைக்கும் வரம் தரும் ஆலயம்

கணவன் மனைவி ஒற்றுமையினை அதிகரிக்கும் ஆலயம் இது . நாக தோஷம்,ராகு தோஷம், காலசர்ப்ப தோஷம், களத்திர தோஷம் இவற்றால் பாதிக்க பட்டவர்கள் இங்கு வந்து வணங்கினால் பெரிய பலன் உண்டு

 சந்தான பாக்கியம் அதாவது குழந்தை இல்லதவர்கள் இங்கு வணங்கினால் நிச்சயம் குழந்தை பேறு உறுதி

இங்கிருக்கும் மலை உச்சியில் இருக்க்கும் பிள்ளையார் கோவிலில் மலடி கல் என்ற ஒரு பெரிய கல் இருக்கிறதாம். குழந்தை இல்லாதவர்கள் அந்த கல்லை சுற்றி வந்து வணங்கி சென்றால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் இது காலம் காலமாக இருந்து வரும் நம்ம்பிக்கை

சம்பந்தர் காலத்தில் அல்ல எல்லா காலமும் இந்த ஆலயத்தில் அதிசயங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன‌

 கொங்கு நாட்டில் காடம்பாடி எனும் ஊரில் பாததூளி, சுந்தரம்தம்பதியர் பக்தர்களுக்கு குழந்தை பாக்கியமில்லை, இந்த தலத்துக்கு வந்து வழிபட்டபின் அந்த பாக்கியம் கிட்டிற்று ஆனால் குழந்தை நெடு நாட்களாக பேசவிலை

இதனால் அக்குழந்தையுடன் ஆலயம் வரும் அவர்கள் அந்த குறையினை தீர்க்க மன்றாடி கொண்டே இருந்தார்கள்

அப்படி அவர்கள் தேரோடும் நாளில் வந்தபோது குழந்தை கூட்டத்தில் தவறி தேரின் சக்கரத்தில் சிக்கி கொள்ள இருந்தது , அப்போது வேலப்பன் எனும் அடியார் குழந்தை நிலை கண்டு பதறி ஓடி சென்று தன் உயிரை பணயம் வைத்து குழந்தையினை காத்தபோது தேர்தானே நின்றது

அப்படி தப்பி பிழைத்த குழந்தை பின் வாய் பேசிற்று பெற்றோர் பெருமகிழ்வுடன் குழந்தையினை வளர்த்தனர், இன்றும் அவர்கள் சந்ததிகள் சாட்சியாய் உண்டு

இந்த ஆலயம் குடும்ப உறவுகளுக்கும் சிக்கலுக்குமான எல்லா தீர்வையும் தரும் ஆலயம், உறவுகளை மேம்படுத்தி கர்மத்தை சரியாக செய்யவைக்க பலம் தரும் ஆலயம்

இந்த ஆலயத்திற்கு சென்று வந்தால் நிச்சயம் உங்கள் வாழ்வே மாறும், இப்போது இருப்பதை விட பெரும் நல்ல மாறுதல் அடுத்து அமையும்

அந்த படியில் ஏறி செல்லும் போது உங்கள் பிரச்சினைகள் அகலும், மறமாவல் ஆதி சேஷனை பூஜித்து பின் 60 படியில் சங்கல்பம் செய்து மேல் ஏறி செல்லுங்கள்

மலைகோவிலில் விநாயக பெருமானை பணிந்து , அந்த அற்புதமான முருகனை தரிசித்து பின் இந்த அர்த்த நாரீஸ்வரரை தரிசியுங்கள்

"ஓம் ஹும் ஜும் சஹ, அர்த்தநாரீஸ்வர ரூபே, ஹ்ரீம் ஸ்வாஹா" என அவருக்குரிய மந்திரத்தை சொல்லி நில்லுங்கள், அந்த அர்த்த நாரீஸ்வரர் காலடியில் ஊறும் தீர்த்தத்தை பெற்று பருகுங்கள்

அதுமுதல் உங்கள் வாழ்வே மாறும், விரோதித்த விதி சரியாகும், எதெல்லாம் தடையாக இருந்ததோ, எதெல்லாம் சிக்கலாக இருந்ததோ எல்லாமே மாறி அவை எல்லாமே உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்

வாழ்வே மாறும், அதுவரை மிக கடினமாக இருந்த வாழ்வு எளிதாகும், வாழ்வில் உடன் வருவோர் எல்லோரும் மிகுந்த ஆதரவாய் கர்மம் கழிக்க துணை வருவர், சிவனருளினால் எல்லாமே சித்தியாகி நல்லபடியாக வாழ்வினை நிறைவு செய்து எல்லா கடமையும் இனிதே முடித்து அந்த சிவனோடு கலந்தே விடுவீர்கள் இது சத்தியம்.
Previous Post
Next Post

0 Comments: