திங்கள், 16 டிசம்பர், 2024

கிருஷ்ண பரமாத்மா கீதையில் மாதங்களில் நான் மார்கழியாவேன்

மார்கழி மாத சிறப்பு பதிவு:


மனிதனை உயர்வழிக்கு அழைத்துச்செல்லும் மாதம். மார்கழி என்பது எண்ணற்ற மகத்துவங்கள் நிறைந்த ஒரு அற்புதமான மாதமாகும். கிருஷ்ண பரமாத்மா கீதையில் “மாதங்களில் நான் மார்கழியாவேன்” என்று கூறுகிறானென்றால் மார்கழியின் சிறப்பை யூகித்துக்கொள்ளுங்கள்.

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அதில் உத்தராயணமே பகல் என்றும் , தட்சணாயனமே இரவென்றும் கூறும். இந்த நிலையில் தைமாதத்திற்கு முந்திய மாதம் செவ்வானக் காலமாகும். அந்த நிலையில் மார்கழி மாதம் , இருளில் நீண்ட காலம் புழுங்கியவர்களுக்குத் துன்பமெல்லாம் நீங்கிப் பொழுது விடியும் காலமாக இன்பமூட்டுவது இயல்பே. நாள் விடிவதென்றால் நம் கணக்கில் ஆண்டு பிறப்பதேயாகும்.

மார்கழி மாதம் என்பது தேவர்களது ஒரு நாளில் விடியற்காலை பொழுதாகும். விடியற்காலை என்றாலே மங்களகரமானது. எனவே இந்த பெருமை பொருந்திய மாதம் முழுதும் இறை வழிபாட்டுக்கு என்றே பெரியோர்கள் ஒதுக்கிவைத்துள்ளனர். இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால், வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை நடத்தாமல் தவிர்த்தனர். மார்கழி மாதத்தை, “மார்கசீர்ஷம்” என்று வட மொழியில் சொல்வர். “மார்கம்” என்றால், வழி- “சீர்ஷம்” என்றால், உயர்ந்த- “வழிகளுக்குள் தலைசிறந்தது” என்பது பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. இதற்கும் காரணமிருக்கிறது.

வருடத்தில் மற்ற நாட்களில் கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள் இந்த மார்கழி மாதத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மார்கழி மாதம் மட்டும் கோவிலுக்கு சென்றாலே வருடம் முழுதும் கோவிலுக்கு சென்ற பலன் கிடைத்துவிடும்.

தமிழகத்தின் மார்கழி மாதம் வந்துவிட்டாலே அதிகாலை வேளையில் வைணவக் கோயில்கள் மட்டுமின்றி அனைத்து ஆலயங்களிலும் பூஜை வழிபாடுகளும், பக்தி இசையும் மணக்கத் தொடங்கிவிடும்.

இதற்காகவே, ஆண்டாளும், மாணிக்கவாசகரும், திருப்பாவை, திருவெம்பாவை பாடி, நமக்கு வழிகாட்டியுள்ளனர். ஆடியில் அம்பாள் வழிபாடு, புரட்டாசியில் பெருமாள் வழிபாடு, மார்கழியில் அனைத்து தெய்வ வழிபாடு என, வழிபாட்டிற்கு மட்டுமே அந்த மாதங்களை பயன்படுத்திக் கொள்கிறோம்.

சூரிய உதயமானதும், உங்கள் இஷ்ட தெய்வம் குடியிருக்கும் கோவிலுக்குச் சென்று, சுவாமியை தரிசிக்க வேண்டும். “இறைவா… என் வாழ்வை உன்னிடம் ஒப்படைக்கிறேன். நீ தரும் நல்லது, கெட்டதை அன்போடு ஏற்கிறேன். எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறேன். நீயே கதியென சரணாகதி அடைந்து விட்ட என்னை வழி நடத்து…” என்று பரிபூரணமாக நம்மை அவனிடம் ஒப்படைத்துவிடவேண்டும்.

மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பை பெறுவர். திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும்.

மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவார் என்பது நம்பிக்கை. 

இதனால் பெரும்பாலானோர் மார்கழியில் கோலமிடுகின்றனர். மார்கழியில் காலையில் எழுந்து வெளியே நடந்தால் ஓசோன் வாயு நுரையீர லுக்கு என்று புத்துணர்ச்சி தரும். மார்கழி மாத காற்று தோலுக்கும் , வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், புற்று நோய்களுக்கும், உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. இது விஞ்ஞான பூர்வமான அறிவியல் உண்மை.மனம் தூய்மையாகும்.

 கோலமும், பாடலும் மனதை ஒருமைப்படுத்தி உணர்வுகளைச் செம்மைப்படுத்தும்.

 கோலத்திற்கு அரிசி மாசு பொடி பயன்படுத்துவது நல்லது. சாதாரண கோலப் பொடிகளை பயன்படுத்தக் கூடாது.

எனவே குளிர் அதிகமுள்ள இந்த மார்கழி மாதத்தில் சூரிய உதயத்திற்கு பின்பும் இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டிராமல், அதிகாலை எழுந்து கோவில்களுக்கு சென்று இறைவனை தரிசித்து பலன் பெறுவோம்.

 அதிகாலை எழுந்திருப்பதே கஷ்டமான காரியம். அதுவும் குளிர்காலத்தில் இது மிக மிக கஷ்டம் தான்.

 ஆனால் பழக்கப்படுத்திக்கொண்டுவிட்டால் இதை விட இனிமையானது வேறு எதுவும் இல்லை.
Previous Post
Next Post

0 Comments: