மூலிகையின் பெயர் :- சீமை அகத்தி.
தாயகம் :- மெக்சிகோ.
தாவரவியல் பெயர் :- Senna Alata.
பேரினம் :- Senna [சென்னா].
குடும்பம் :- Fabaceae. [வாபேசியே]
துணைக்குடும்பம் :- Caesalpinioideae [சீஸல்பின்னியாய்டியே].
வேறுபெயர்கள்.
சீமை அகத்தி.
பேயகத்தி.
சீமைஅவுத்தி.
காலவகத்தி.
பொன்னகத்தி.
அஞ்சலி.
அலடா.
சிண்டுகை.
சிரிகை.
பைரவம்.
புளியச்சிகா செடி.
வண்டுக்கொல்லி.
புழுக்கொல்லி.
மருத்துவப்பயன்.
சீமை அகத்தி இலைகள் மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும் நுண்ணுயிர் மற்றும் புழுக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
தோல் நோய்களை குணமாக்கும் ''கிரையேகோனிக்'' என்னும் வேதிப்பொருள் இதன் இலைகளில் அதிக அளவில் உள்ளதால் உலர வைக்கப்பட்ட இதன் இலைகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதன் இலைகள் சோப்பு செய்வதற்கும், முகப்பூச்சு தயாரிக்கவும் பயன்
படுத்தப்படுகின்றன.
சீமை அகத்தி இலை, விதை ஆகியவற்றை எலுமிச்சம்பழச்சாறு விட்டு நன்றாக அரைத்து கரப்பான், படை, சொறி, சிரங்கு மற்றும் சிலருக்கு வரும் கழிப்பறை பற்று ஆகியவற்றின் மீது தடவிவர குணமாகும்.
இதன் இலை சாற்றுடன் எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து இதனுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து சிறு தீயில் காய்த்து தைல பக்குவத்தில் இறக்கிக்கொள்ளவும். இதனை நகச்சுற்று, சேற்றுப்புண் , படர்தாமரை முதலியவற்றிற்கு பயன்படுத்த சிறந்த பலன்தரும்.
வண்டுக்கடியினால் ஏற்படும் வீக்கம் தடிப்பு முதலியவைகளை இது சிறப்பாக குணப்படுத்துவதால் இச்செடி ''வண்டுக்கொல்லி'' என்றும் அழைக்கப்படுகிறது. சீமை அகத்தி இலையை எலுமிச்சம்பழச்சாறு விட்டு நன்கு அரைத்து வண்டு கடித்து தடித்த இடங்களில் பூசிவர சிறந்த குணத்தைப் பெறலாம்.
இதன் மஞ்சள் நிற பூக்களை கஷாயமாக அருந்திவர சிறுநீர் கோளாறுகள் நீங்கி சிறுநீர் தடையின்றி வெளியேறும்.
இதன் பட்டையை ஊறவைத்த முறைப்படி கஷாயம் வைத்து சாப்பிட மேக வியாதிகள் நீங்கும்.
பற்று, படை, சொறி, சிரங்கு ஆகியவற்றிற்கு சித்த மருந்துகள் விற்கப்படும் கடைகளில் ''சீமையகத்தி களிம்பு'' விற்கப்படுகிறது. இதையும் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
சரி, சீமையகத்தி களிம்பு எவ்வாறு தயார் செய்வது என்பதைப் பார்ப்போம்.
சீமையகத்தி களிம்பு.
தேவையானபொருட்கள் :-
சீமையகத்தி இலைச்சாறு - 1 லிட்டர்.
தேங்காய்யெண்ணை - 1 லிட்டர்.
எலுமிச்சம்பழச்சாறு -1 லிட்டர்.
கருஞ்சீரகம் - 20 கிராம்.
காட்டுசீரகம் - 20 கிராம்.
கசகசா - 20 கிராம்
கார்போக அரிசி - 20 கிராம்.
நீரடிமுத்து - 20 கிராம்.
தேன்மெழுகு - 300 கிராம்.
செய்முறை :-
மேற்கண்ட பொருட்களை மூலிகை சுத்தி முறையில் சுத்தி செய்து எடுத்துக்கொள்ளவும் +. கருஞ்சீரகம், காட்டுசீரகம், கசகசா, கார்போகஅரிசி, நீரடிமுத்து ஆகியவைகளை தேவையான அளவு தேங்காய்ப்பால் விட்டு தனித்தனியாக அரைத்தெடுத்துக்கொள்ளவும்.
பின் அரைத்தெடுத்த பொருட்களை ஓன்றாக கலந்து அதனுடன் சீமை அகத்தி இலை சாறு, தேங்காய்யெண்ணை, எலுமிச்சம்பழச் சாறு விட்டு சிறு தீயாக எரிக்கவும். [தீ அதிகமாக எரியவிட்டால் மருந்து கருகி வீணாகப்போகும்.] கலத்தின் அடியில் படியும் மருந்தின் வண்டல் பகுதி மெழுகுபதமாக வந்தவுடன் [கருகுவதற்கு முன் ] இறக்கிவிடவும்.
பின் வடிகட்டி தேன்மெழுகை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி போட்டு நன்கு ஆறும்வரை கலக்கிக்கொண்டே இருந்தால் களிம்பாக உறையும். இதுவே ''சீமையகத்தி களிம்பு ''. இதை பாட்டிலில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
0 Comments: