வெள்ளி, 13 டிசம்பர், 2024

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல ஏற்ற நேரம் அறிவிப்பு

கார்த்திகை பெளர்ணமி 2024 : திருவண்ணாமலை கிரிவலம் செல்ல ஏற்ற நேரம் அறிவிப்பு



கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வரும் தலம் திருவண்ணாமலை தான். அதே போல் திருவண்ணாமலை என்ற பெயரை கேட்டதுமே அனைவரின் நினைவிற்கும் வருவதும் அண்ணாமலையார் மலையும், அதை சுற்றி பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவதும், அந்த மலையின் சிறப்புகளும் தான். பெளர்ணமி வழிபாடு இங்க மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அனைத்து சிவன் கோவில்களிலும் பெளர்ணமி வழிபாடு நடைபெற்றாலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு, திருவண்ணாமலையில் பெளர்ணமி கிரிவலம் செல்லும் வழிபாடு தனிச்சிறப்பு வாய்ந்தது தான். பக்தர்கள் கேட்ட வரங்களை தந்து, அவர்கள் இந்த பிறவியில் மட்டுமின்றி இனி வரும் பிறவிகளிலும் உயர்வான நிலையில் வாழ வைக்கக் கூடியது திருவண்ணாமலை கிரிவல வழிபாடு.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்த உடனேயே ஒருவருக்கு முக்தியை வழங்கிடும் முக்தி தலமாக விளங்குவது திருவண்ணாமலை. இங்கு சிவ பெருமான் நெருப்பு பிளம்பாக, மலையின் வடிவமாக காட்சி தருவதாக ஐதீகம். அதனால் தான் வேறு எங்கும் நடக்காத சிறப்பாக வருடந்தோறும் திருக்கார்த்திகை தீபத்தன்று மலை உச்சியில் தீபம் ஏற்றும் நிகழ்வு நடத்தப்படுகிறது. உண்மையான பக்தியை தவிர வேறு எவற்றாலும் அணுக முடியாத அண்ணாமலையாரை சிவ பெருமான் இங்கு மலையின் வடிவமாக அருள் செய்வதால், இங்கு மலையை வலம் வந்து வழிபடும் கிரிவல வழிபாடு தோன்றியது.

திருவண்ணாமலையில் எந்த மாதத்தில், எந்த கிழமையில், எந்த திதியில், எந்த நேரத்தில் கிரிவலம் வந்து வழிபட்டாலும் சிவனின் அருளுடன் அளவில்லாத நற்பலன்கள் கிடைக்கும். இங்கு வருடத்தின் 365 நாட்களும் பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கமாக இருந்தாலும் பெளர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவத வழக்கம். இது தவிர பிரதோஷம், சிவராத்திரி போன்ற நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் வருவது உண்டு. இருந்தாலும் பெளர்ணமி கிரிவலம் வருவது முக்தியை தரும் என்பதால் அதுவே கிரிவலம் வருவதற்கு ஏற்ற நாளாக கருதப்படுகிறது.

வருடத்தின் மிக முக்கியமான பெளர்ணமிகளில் கார்த்திகை மாத பெளர்ணமியும் ஒன்று. இந்த ஆண்டு கார்த்திகை பெளர்ணமி டிசம்பர் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. வழக்கமாக கார்த்திகை பெளர்ணமி, கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்துடன் இணைந்து தான் வரும். இந்த நாளையே நாம் திருக்கார்த்திகை தீபத் திருநாளாக கொண்டாடுவோம். ஆனால் கால சுழற்சி காரணமாக பல ஆண்டுகளுக்கு ஒருமுறை கார்த்திகை மாத பெளர்ணமியும், கார்த்திகை நட்சத்திரமும் வேறு வேறு நாட்களில் வருவதுண்டு. அப்படி வரும் போது கார்த்திகை நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டே திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட வேண்டும் என்ற முறை உள்ளது. அதனால் இந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழாவும், டிசம்பர் 15ம் தேதி கார்த்திகை பெளர்ணமியும் வருகின்றன.


டிசம்பர் 14ம் தேதி மாலை 04.17 மணிக்கு துவங்கி, டிசம்பர் 15ம் தேதி மாலை 03.13 வரை பெளர்ணமி திதி உள்ளது. டிசம்பர் 15ம் தேதி திருக்கார்த்திகை இல்லை என்றாலும் பாஞ்சராத்திர தீபம் வருவதால் அன்றைய தினமும் வீடுகளில் விளக்கு வைத்து வழிபட வேண்டும். இதனால் பெருமாளின் அருளும் கிடைக்கும். கார்த்திகை பெளர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்பவர்கள் டிசம்பர் 14ம் தேதி மாலை 04.58 மணிக்கு கிரிவலத்தை துவக்கி, டிசம்பர் 15ம் தேதி பகல் 02.31 மணிக்குள் கிரிவல வழிபாட்டினை நிறைவு செய்ய வேண்டும். இந்த ஆண்டு டிசம்பர் 13, 15 ஆகிய இரு நாட்களுமே கிரிவலம் செல்ல ஏற்ற நாட்களாக குறிப்பிடப்படுகின்றன. ஆனால் டிசம்பர் 15ம் தேதி செல்வதே பெளர்ணமி கிரிவலம் சென்றதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

Previous Post
Next Post

0 Comments: