முருகனின் வாகனம் மயில், மயிலுக்கு சிகி என்றொரு பெயரும் உண்டு. சிகி வாகனன் என்பதிலிருந்து இத்தலம் சிக்கல் என்றானது.ஒரு பஞ்ச காலத்தில், உண்ண உணவில்லாத நிலையில், மாமிசத்தைத் தின்றதால் தேவலோகப் பசுவான காமதேனு, ஈசன் சாபத்தால் புலி முகம் பெற்றது. அந்த சாபத்தை காமதேனு நிவர்த்தி செய்து கொண்ட தலம், சிக்கல்.காமதேனு ஈசனை வழிபடுவதற்காக, தன் பாலால் ஒரு குளத்தை உண்டாக்கியது. அத்திருக்குளம் காமதேனு தீர்த்தம், தேனு தீர்த்தம் க்ஷீர புஷ்கரணி என்ற பெயர்களில் இன்றும் பிரதான தல தீர்த்தமாக விளங்குகிறது.அந்த பால் குளத்திலிருந்து வசிஷ்டர் வெண்ணெய் எடுத்து சிவலிங்கத்தை உருவாக்கி பூஜித்தார். பின் அதனை அவர் அகற்ற முற்பட்டபோது, லிங்கம் பூமியில் சிக்கிக் கொண்டதாலும் இத்தலம் சிக்கல் என வழங்கப்பட்டது.வெண்ணெயால் உருவாக்கப்பட்டதால் இத்தல ஈசன், நவநீதேஸ்வரர் என வடமொழியிலும், வெண்ணெய் நாதர் என தமிழிலும் போற்றி வணங்கப்படுகிறார்.வசிஷ்டர் வழிபட்டதால் வசிஷ்டாஸ்ரமம் என்றும் மல்லிகை வணங்கள் நிறைந்திருந்ததால் மல்லிகாரண்யம் என்றும் சிக்கல் அழைக்கப்படுகிறது.சூர சம்ஹாரத்துக்குப் புறப்படுமுன், இத்தலத்தில் அருளும் வேல் நெடுங்கண்ணி எனும் சத்தியாயதாட்சியிடம் முருகன் வேல் வாங்கி புறப்பட்டதாக வரலாறு.இன்றும் சூரசம்ஹார ‘நிகழ்ச்சி முடிந்தவுடன் சிங்கார வேலவனின் திருமுகத்தில் வியர்வை முத்துக்கள் அரும்பி, துடைக்கத் துடைக்க பெருகும் அற்புதம் நிகழ்கிறது.இத்தல சிங்கார வேலவனின் ஆபரணங்களும் அவன் பெயரைப் போலவே சிங்காரமானவைதான். ரத்னங்கள் இழைத்த கொண்டை, பொன்னாலான கவசம், வெள்ளியினாலான குடை, வைரவேல், ஆலவட்டம் என அற்புத வேலைப்பாடுகள் அமைந்த ஆபரணங்கள் இந்த வேலவனுக்கு உண்டு.தட்சிணாமூர்த்தி கோஷ்டத்திற்கருகே தல விருட்சமான மல்லிகைக் கொடி உள்ளது.இத்தல கார்த்திகை மண்டபத்தில் கந்தபுராண நிகழ்ச்சிகளை ஓவியங்களாகவும், சுதைச்சிற்ப ராமாயண நிகழ்ச்சிகளை தரிசிக்கலாம்.இத்தலத்தில் விருத்த காவிரி எனும் ஓடம் போக்கியாறு, காமதேனு தீர்த்தம், கயாதீர்த்தம், லட்சுமி தீர்த்தம், அம்மா தீர்த்தம் என ஐந்து தல தீர்த்தங்கள் உள்ளன.திலோத்தமையின் மீது காதல் கொண்டு அதனால் தவ பலனை இழந்த விஸ்வாமித்திரர், இத்தலத்திற்கு வந்து அந்த பாவத்தை தீர்த்துக் கொண்டதாக தல புராணம் கூறுகிறது. வசிஷ்டர் சீடர்களோடு இருப்பதும், காமதேனு நவநீதேஸ்வரரைவழிபடுவதுமாக தலபுராணச் சிற்பங்களை பிராகாரத்தில் காணலாம்.
வைகுந்தவாசனான நாராயணன், கோலவாமனப் பெருமாள் எனும் திருப்பெயரோடு அருள்கிறார். மகாபலியை அழித்து அவன் அகங்காரத்தை சிதைக்க இத்தல ஈசனை வேண்டி தவமியற்றிய பெருமாள் இத்தலத்திலேயே கோமளவல்லித் தாயாருடன் நிலைகொண்டார். மண்டபத்தில் கார்த்திகை திருநாள் உற்சவத்தின் போது தேவியருடன் சிங்கார வேலவன் எழுந்தருள்வது வழக்கம். அப்போது நிலைக் கண்ணாடி முன் நடத்தப்படும் ஒய்யாளி சேவை அற்புதமானது.நாகப்பட்டினத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.
0 Comments: